நல்லூரால் தடுமாறிய அமெரிக்காவும் - கொழும்பும்

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தொடர்ச்சியாக நேற்றைய தினம் தேர்த் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் ஆலய சூழலில் அலைமோதியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எண்ணற்ற மக்கள் கடலால் சூழப்பட்ட நல்லுர் ஆலய வளாகம் நாட்டில் உள்ள மக்களை மட்டுமன்றி வெளி நாட்டவர்களையும் வியப்புக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என அத்தனை உள்-வெளி வீதிகளிலும் மட்டுமன்றி நல்லூர் பிரதேசமே மக்கள் வெள்ளத்தினால் அலைமோதியிருந்தது.

இது தொடர்பான படங்களினைப் பார்வையிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தனது வியப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

”யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என்று தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமன்றி நல்லுர் தொடர்பான டிரோன் கமெரா படங்களைப் பார்த்து வியந்த தென்னிலங்கை ஊடகங்கள்கூட தமது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளன.

ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் நல்லூரில் கூடியிருந்ததாக செய்தி வெளியிட்டுள்ள சிங்கள ஊடகமொன்று நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லிணக்கச் செயற்பாடுதான் வரலாறுகாணாத இத்தனை மக்கள் தொகைக்கு காரணம் என தெரிவித்திருக்கின்றது.

ஆனாலும் வருடாவருடம் இடம்பெறுகின்ற நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவிற்கு பன்னெடுங்காலமாகவே பன்னாடுகளையும் சேர்ந்த மக்கள் அலையலையாய் வந்துபோகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.





No comments

Powered by Blogger.