கல்முனை வடக்கு நகர சபை ஒன்றினை உருவாக்கித்தருமாறு கல்முனை வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!!

                                                                                           - செ.துஜியந்தன் -
கல்முனை வடக்கு நகர சபை ஒன்றினை உருவாக்கித்தருமாறு கல்முனை வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் - பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவிப்பு

கல்முனை பிரதேசத்தின் தெற்கேயுள்ள தரவைப்பிள்ளையார் கோவிலையும், வடக்கே பெரியநீலாவணை கிராமத்தையும் மேற்கே சேனைக்குடியிருப்பையும் மையமாக வைத்து தமிழ்,முஸ்லீம், சிங்கள மக்கள் உள்ளடங்கியதான நகர சபை ஒன்றினை புதிதாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

புதிதாக உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரம் உயர்த்தல் தொடர்பான திட்ட முன் மொழிவுகளை முன் வைக்கமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய கல்முனையில் உள்ள தமிழ்,முஸ்லீம் மக்கள் பல திட்டங்களை முன் மொழிந்து வருகின்றனர். இது தொடர்பில் கல்முனை வாழ் தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள சுமங்கலி மண்டபத்தில் நடைபெற்றது. 

அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்....
கல்முனை என்பது தமிழர்களின் பூர்வீக தாயகமாகும். இங்கு எண்பத்தி இரண்டு வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். தமிழர்களின் பிரதேசத்திற்குள் முஸ்லீம்களின் வியாபாரஸ்தாபனங்கள் மட்டுமே உள்ளடங்குகின்றன. கல்முனை என்பது வேறு கல்முனைக்குடி என்பது வேறாகும். கல்முனைக்குடியை கல்முனையாக்க சில வங்குரோத்து அரசியல்வாதிகள் முயற்சி எடுக்கின்றனர்.

தற்போது கல்முனையை நான்காக பிரிக்கவேண்டும் என முஸ்லீம் தரப்புக்களால் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கல்முனையை நான்காக பிரிக்கின்றபோது இங்குள்ள தமிழர்களின் உரிமை, சுதந்திரம் என்பன மறுக்கப்படுகின்றது. இதிலிருந்து தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு நகர சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கல்முனையை இரண்டாகப் பிரிக்குமாறு கேட்கிறோம்.

கல்முனைக்குடி – சாய்ந்தமருது பகுதியை ஒன்றிணைத்து ஒரு சபையும், கல்முனை தரவைக்கோவிலையும் பெரியநீலாவணையை எல்லையாகக் கொண்டு ஒரு சபையும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமங்களை உள்ளடக்கியதான ஒரு நகர சபை அமைக்கப்படவேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் நிலைப்பாடாகும். 

கல்முனையில் மேற்கொள்ளப்படும் பிரதேச பிரிப்புக்கள் இனங்களுக்கு இடையில் மேலும் முரண்பாடுகளை ஏற்படுத்தலாம். இதனை கருத்திலெடுத்து பிரதேச பிரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும். சாய்ந்தமருதக்கு தனியான பிரதேச சபை ஒன்றினை வழங்குவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. 

கல்முனை வாழ் தமிழ் மக்களின் நியாயமான இக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட வேண்டும். எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.