அம்பாறையின் ஒரு பிரதேச சபையிலிருந்து முன்னணி பின்வாங்கல்!

அம்பாறை காரைதீவு பிரதேச சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டியதை கருத்தைக் கொண்டு அந்த பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும், அதேவேளை அங்கு சுயேட்சையாயாக போட்டியிடும் தமிழர் மகாசபைக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என அந்த கட்சியின் தலைவர் ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளிபிரதேச சபைகள் உட்பட கல்முனை மாநகரசபைக்குமான தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இருந்தபோதும் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளபோதும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காகவும், தமிழர் மகாசபை சுயேச்சையாக போட்டியிடுவதை கருத்தில் கொண்டும் அந்த பிரதேச சபைக்கு போட்டியடுவதில்லை என்பதோடு எமது ஆதரவை தமிழர் மகாசபைக்கு வழங்குவதாக தீர்மானித்துள்ளோம்.

தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் விட்டுக் கொடுத்து எமது மக்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவது தான் எமது கட்சியின் செயற்பாடாகும். அந்த வகையில் காரைதீவு பிரதேசசபையின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவேண்டியது எமது தமிழ் மக்களது கடமையாகும். எனவே அந்தப் பிரதேசத்தில் எமது கட்சி ஆதரவாளர்கள் தமிழர் மகாசபைக்கு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்." என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.