வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம்! வழக்கை விசாரிக்க தடை! அவமதிக்கவில்லை என வைரமுத்து பேட்டி


ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் கூறிய கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக கண்டனக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் வந்த வண்ணமாக இருக்கின்றன. 

அந்த நிகழ்ச்சியில் தான் பேசியது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்தும், வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. 

அதேநேரத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வைரமுத்துவின் கருத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அவரது மனு மீதான விசாரணை இன்று நடந்தது. 

அதில் ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை 

ஆண்டாள் குறித்த சர்ச்சை வழக்கில் வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

ராஜபாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்சசியில், கவிஞர் வைரமுத்து கலந்துக் கொண்டு, ஆண் டாள் குறித்து பேசினார். அப்போது வெளிநாட்டை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், ஆண்டாளை தேவதாசி என்று குறிப்பிட்டி ருப்பதை மேற்கோள் காட்டி பேசினார். 

இதையடுத்து இந்து அமைப்புகள், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகி, எச்.ராஜா, வைரமுத்துவை அசிங்கமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில், வைர முத்துவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் வைரமுத்து வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீலை பார்த்து நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்த கருத்தை கூறவில்லை. வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையை குறிப்பிட்டும், மேற்கோள் காட்டியும் தானே பேசினார்? அப்புறம் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இந்த மனுவுக்கு பிற்பகலில் பதிலளிப்பதாக அரசு வக்கீல் கூறியதால், மனு மீதான விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதியாக இந்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

ஆண்டாள் என் தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை” கவிஞர் வைரமுத்து பேட்டி 

ஆண்டாள் என் தாய் போன்றவர், அவரை நான் அவமதிக்கவில்லை என்று தற்போதைய சர்ச்சை குறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார். 

ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் வைரமுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இது சம்பந்தமாக விரிவான பேட்டி அளித்துள்ளார். 

அதன் விவரம்:- 

கேள்வி: நீங்கள் எப்படி இந்த மாதிரி சர்ச்சையில் சிக்கி கொண்டீர்கள்? 

பதில்: தமிழ்மொழி 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தமிழ் இலக்கியத்துக்கு தனது பெரும் பங்களிப்பை செய்தவர்களை பற்றி நான் தொடர்ந்து ஆய்வு செய்து பதிவு செய்து வருகிறேன். தொல்காப்பியரில் இருந்து பாரதியார், புதுமைபித்தன் வரை இவ்வாறு ஆய்வு செய்துள்ளேன். இவற்றை ஒரே புத்தகத்தில் கொண்டு வந்து பலஆயிரம் ஆண்டுகளுக்கும் தமிழ் நமது சமுதாயத்தில் நீடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக நான் தொடர்ந்து படித்து வருகிறேன். நான் இதுவரை திருவள்ளுவர், கம்பர், வள்ளுவர், பாரதியார் பற்றி 13 புத்தகங்கள் எழுதி உள்ளேன். நாயன்மார்களில் அப்பர், ஆழ்வார்களில் ஆண்டாள் ஆகியோரை பற்றியும் ஆய்வு செய்கிறேன். ஆண்டாளின் தமிழை நான் 40 ஆண்டுகளாக சுவாசித்து வாழ்ந்து வருகிறேன். ஆண்டாளின் மூலம் அந்த கால சமூகத்தையும், சூழலையும் பார்க்கிறேன். ஆண்டாளின் வைஷ்ணவத்தை விட அவருடைய தமிழால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவருடைய தமிழை மட்டும் நான் கொண்டாடவில்லை. அவர் பெண்களின் ஆளுமைக்காக முதல் குரல் கொடுத்ததையும் கொண்டாடுகிறேன். 

கேள்வி: நீங்கள் ஆண்டாளை பற்றி பேசியதும், எழுதியதும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதே? 

பதில்: நான் ஆண்டாள் பற்றி 35 அல்லது 40 நிமிடங்கள் பேசினேன். அது நல்ல வரவேற்பை பெற்றது. நான் பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டி விளக்கி கூறினேன். ஆண்டாளை பல்வகையிலும் புகழ்ந்து பாராட்டி நான் பேசினேன். அப்போது ஆண்டாளை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உள்ள வி‌ஷயங்களைப்பற்றியும் கூறினேன். ஆண்டாள் தேவதாசியாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து அங்கு இறந்ததாக அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதாக கூறினேன். கடவுளாகவும், கடவுளுக்கு சேவை செய்தவராகவும் கூறப்படும் ஆண்டாளை பற்றி இப்படி அதில் எழுதப்பட்டிருக்கிறது என்று மேற்கோள்காட்டி சொன்னேன். ஆராய்ச்சி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அந்த வார்த்தை தற்போது தவறான அர்த்தத்தில் மாறி இருக்கிறது. அதில் தாசி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த வார்த்தைக்கு சரியான அர்த்தம் என்பது வேறு. ஆனால் இடையில் தாசியை வேசி என்பதுபோல வேறு அர்த்தத்தை ஏற்படுத்தி விட்டார்கள். நான் இதுபற்றி விரிவாக சொன்ன போதும், அதை புரிந்து கொள்ளவில்லை. அந்த வார்த்தை இப்படி மாறியது தொடர்பாக யாரும் கேள்வி எழுப்பவும் இல்லை, ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதன் மூலப்பொருள் தவறு இல்லை என்றால் நான் மேற்கோள் காட்டி சொன்னது மட்டும் எப்படி தவறு ஆகும். 

கேள்வி: ஆனால் உங்களை மட்டும் தானே குற்றம் சொல்கிறார்கள்? 

பதில்: நான் ஆண்டாளை குறைத்து மதிப்பிட்டோ அல்லது சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ அந்த மேற்கோளை பயன்படுத்தவில்லை. ஆண்டாள் எனக்கு பாலூட்டி வளர்த்த தாய் போன்றவர். ஆண்டாள் தனது தமிழை எனக்கு ஊட்டி என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளார். அப்படி இருக்க நான் எனது தாயை சிறுமைப்படுத்துவேனா? அது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எல்லோராலும் அதை புரிந்து கொள்ள முடியாது. இப்படி நான் சொல்வதால் மீண்டும் அவர்கள் என்னை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படலாம். இந்த வி‌ஷயத்தில் அரசியல் தூண்டுதல் இருக்கிறதா? என்பதை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் வேண்டுமென்றே இந்த வி‌ஷயம் திரிக்கப்படுகிறது. 

கேள்வி: உங்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களே? 

பதில்: நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து விட்டேன். தமிழ் எழுத்தாளர்களும் இதுபற்றி விளக்கி இருக்கிறார்கள். நான் எப்போதுமே உண்மையையே பேசுகிறேன். இந்த வி‌ஷயத்தில் இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நான் அவரது பிறந்த ஊரில் சென்று அவரை அவமதிக்கும் வகையில் பேசுவேனா? நான் அவருடைய இலக்கியத்தை பரப்ப வேண்டும் என்று விரும்புகிறவன். இப்போது முதல் முறையாக பகுத்தறிவாளர்களும் ஆண்டாளுடைய பணியை பாராட்டி இருக்கிறார்கள். நான் எப்போதுமே எனது பணியில் உண்மையாக நடந்து கொள்பவன். எனது பக்கம் எப்போதும் நீதி இருக்கும். இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.