ஈழக் கவியின் "முட்களின் மேல் உறங்கிய இரவுகள்" கவிதை நூல் வெளியீடு!!
மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் நடந்தேறிய 'முட்களின் மேல் உறங்கிய இரவுகள்' கவிதைநூல் வெளியீட்டு விழா.
ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பு என்பது கலைகள் விளையுமிடம். இலக்கியத்திற்கும் இங்கே பஞ்சம் இருப்பதே இல்லை. மட்டக்களப்பிலே வெல்லாவெளி என்பது ஈழப்போர் காலத்தில் பெரிதும் பேசப்பட்ட இடம். போரில் அநேக தாக்கங்களை சந்தித்த இடம் வெல்லாவெளி, விவேகானந்தபுரம் வாழ் படைப்பாளி ஈழக்கவி ரசிக்குமார் எழுதிய 'முட்களின் மேல் உறங்கிய இரவுகள்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது இன்று 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு ஈழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
நிகழ்வுக்கு சுடர் சனசமூக நிலையத் தலைவர் நே.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ. யோ.ரஜனி அவர்கள் கலந்து கொண்டார்.
மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் அதிகளால் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை விவேகானந்தபுரம் திருக்கொன்றைமுன்மாரி பாடசாலை மாணவிகள் இசைத்தனர்; ஆசியுரையினை சிவஸ்ரீ மா.அருள்நாயகம் குருக்கள் வழங்கினார்; வரவேற்புரையினை கு.டினோஜன் வழங்கினார்; தலைமையுரையினைத் தொடர்ந்து நூலின் வெளியீட்டுரையினை ஓய்வுநிலை அதிபர் த.விவேகானந்தம் நிகழ்த்தினார்; தொடர்ந்து கவிநூல் வெளியீடு இடம்பெற்றது; நூலினை பிரதம விருந்தினரான போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்; தொடர்ந்து யாவரும் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
வெல்லாவெளி விவேகானந்தபுரம் சுடர் சனசமூக நிலையமும், இளஞ்சுடர் விளையாட்டுக் கழகமும் இணைந்து வெளியிட்ட இந்நூலின் வெளியீட்டு விழாவில், சிறப்புரையினை தேசியக் கலைஞர் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் ஆற்றினார்; வடக்கின் படைப்பாளிகள் சார்பில் கவிஞர் மற்றும் 1000 கவிஞர்களின் கவிதை நூலின் இணைப்பாளர் தொகுப்பாளர் திரு. யோ.புரட்சி உரை நிகழ்த்தினார்; பிரதம விருந்தினர் உரையினை போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி ஆற்றினார்.
நூலாசிரியருக்கான கெளரவிப்பினை வல்வெட்டித்துறை ஆ.முல்லைதிவ்யன் வழங்கி வாழ்த்துரைத்தார்; கவிஞர் வன்னியூர் கிறுக்கன், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, கவிஞர் கூழாவடியான் ஆகியோரும் நூலாசிரியருக்கான வாழ்த்துரை அளித்தனர். வாழ்த்துப்பாவினை பூபாளம் சஞ்சிகையின் ஆசிரியர் அ.குகாந்தன் வழங்கினார்; ஏற்புரையினை 'முட்களின் மேல் உறங்கிய இரவுகள்' நூலின் ஆசிரியர் ஈழக்கவி ரசிக்குமார் வழங்கினார். நன்றியுரையினை நே.ஜெயகாந்தன் வழங்கினார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பினை செ.நவரத்தினம் சிறப்பாக நடாத்தினார். நிகழ்வில் வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தொன்மை அதன் மகிமை நிறைந்த வழிபாட்டு முறை அடங்கிய அடையாள ஆவண காணொளித் தொகுப்பும் பற்றி நியூஸ் ஒருங்கிணைப்பாளர் திரு.வி. ரவீந்திரமூர்த்தி அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.
ஈழக்கவி ரசிக்குமார் அவர்கள் இளைய படைப்பாளியாக மிளிரத் தொடங்கிய பின்னர் வெளியிட்ட முதலாவது நூலிது; நிறைந்த தமிழுறவுகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற நூல் வெளியீடானது பலருக்கும் மனதிற்கு நிறைவைத் தந்திருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் கிழக்கில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அநேகர் பங்கேற்றமையும் இங்கே குறிப்பிடத் தக்கது.
No comments