மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மனைவியை கொலை செய்ய பாம்பாட்டியை ஈடுபடுத்தி பாம்பு தீண்டச் செய்து கொலை செய்ய முயன்ற கொடூர கணவன்;இலங்கையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

பாம்பாட்டி ஒருவரை ஈடுபடுத்தி கட்டுவிரியன் பாம்பு ஒன்றால் தீண்டச் செய்து, தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபரான கணவரை கைதுசெய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் தான் வீட்டிலிருந்தபோது, இரண்டு தடவைகள் தன்மீது பாம்பு ஒன்றை வீசி, தனது கணவன் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக கம்பஹாவை அண்மித்த பிரதேசமொன்றில் வசிக்கும் 52 வயதான பெண் ஒருவர் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவை தொடர்புகொண்டு முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில், கம்பஹா பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட தையடுத்து பிரதம பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் பண்டாரவின் அறிவுறுத்தலுக்கமைய, குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி அசங்க ரங்கன உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவத்துக்கு முகங்கொடுத்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் வீட்டை சோதனையிட்டுள்ளனர். அதன்போது, அவ்வீட்டின் அறை ஒன்றில் தலைமறைவாகியிருந்த பாம்பாட்டியை பொலிஸார் கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதற்கமைய, குறித்த வீட்டின் உரிமையாளர் தனக்கு 25 ஆயிரம் ரூபா பணம் தருவதாகக் கூறி, அவரது மனைவியை கட்டு விரியன் பாம்பை ஈடுபடுத்தி தீண்டச் செய்யுமாறு கூறியதாகவும், அதற்கமைய தான் அப்பெண்ணை நோக்கி இரண்டு தடவைகள் பாம்பை வீசியபோதும், அது தீண்டியிருக்கவில்லை.

இந்நிலையில், குறித்த பெண் கூச்சலிட்டதையடுத்து, அவரது கணவர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து சென்றதாகவும், பின்னர் தான் பாம்பை பெட்டிக்குள் அடைத்து வீட்டிலேயே மறைந்து கொண்டதாகவும் பாம்பாட்டி தெரிவித்துள்ளார்.

அவரிடம் மேலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த பெண்ணின் கணவர் ஒரு வாரத்துக்கு முன்னர் தன்னைச் சந்தித்து, இந்தத் திட்டம் பற்றி கூறியதாகவும், அதற்கமைய, அவர் சம்பவ தினத்தன்று காலை கம்பஹா ரயில் நிலையத்தில் தன்னைச் சந்தித்து பொத்துஹெர பிரதேசத்திலிருந்து பிடித்துவரப்பட்ட விஷம்வாய்ந்த விரியன் பாம்பொன்றை வழங்கியதாகவும் பாம்பாட்டி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலையடுத்து, அருகிலுள்ள வீடு ஒன்றில் சந்தேகநபரான கணவரின் கார் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதிலிருந்து மேற்படி பாம்பாட்டிக்கு சொந்தமான பாம்புடன் கூடிய பெட்டி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சந்தேகநபரைத் தேடி கம்பஹா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.