மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


நீராவியடிப் பிள்ளையர் ஆலய புனிதத்தன்மைக்கு களங்கமேற்படுத்தும் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது- தமிழ் மக்கள் பேரவை.

பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகள் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பௌத்த விகாரையில் தங்கியிருந்து புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் இறுதி கிரியைகள் பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடானது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் செயலாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

இந்து ஆலயங்களையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் புனித பிரதேசமாக தமிழர்கள் பராமரித்து பயன்படுத்திவரும் நிலையில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை ஆலய வளாகத்திலேயே வைத்து இறுதிக் கிரியைகளை செய்ய முற்படுவதானது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயற்பாடாகமட்டுமன்றி, அமைதியற்ற சூழலுக்கான வழியேற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

ஆகவே, தமிழ் மக்களின் வழிபாட்டுத்தலமாகவும், மரபுரிமைச் சொத்தாகவும் திகழ்ந்துவரும் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இயல்பு நிலையை சீர்குலைக்காத வகையில் இவ்விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினர் கையாள வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை அக்கறையுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.