ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்; செல்வம் அடைக்கலநாதன்!!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேசவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எனினும் இதுவரையில் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய சிம்மாசன உரையில் தமிழ் மக்கள் தொடர்பாக எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை.
அந்தவகையில் அவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார். இற்றை வரைக்கும் அந்த சந்தர்ப்பம் எங்களுக்கு எட்டவில்லை.
இருந்தாலும் எங்களுடைய மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துச்சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.
இதேவேளை, தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி பேசாமலிருப்பது கவலையளிக்கிறது. பெரும்பான்மையான சிங்கள மக்களின் பிரச்சினையை கையாள்வதிலேயே அவருடைய செயற்பாடுகள் இருப்பதை அவருடைய பேச்சுக்களில் அறியக்கூடியதாக இருக்கின்றது.
இந்த சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாட வேண்டிய பொறுப்பு உள்ளது. அவரை சந்திக்க எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.