தமிழர் என்ற அடையாளம் மட்டுமே தமிழர் தேசத்திற்கு பாதுகாப்பு-சபா.குகதாஸ்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள்,

ஈழத் தமிழர்களை கூறுபோட 2009 இற்கு பின்னர் பல்வேறு முனைகளில் பலர் முன்நகர்வுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அரசியல்,சமூகம்,கலாசாரம்,பொருளாதாரம்போன்ற பிரதான கட்டமைப்புக்களில் பிரிவுகளை தனிப்பட்ட சுயநலன்களுக்கும், இனத்தின் ஒற்றுமையை சிதைத்து பலவீனப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த இழி நிலை விடுதலைப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் தமிழர் சமுதாயத்தில் புற்று நோய் போல புரையோடிக் காணப்பட்டது அன்றைய காலம் உலகமயமாக்கல் இல்லாத நிலையில் இருந்த போது சமூகமயமாக்கல் அபிவிருத்தியடையாத சூழல் நிலவியது இதனால் சமூகம் ஏற்ற இறக்கம் நிறைந்த பலவீன நிலையில் காணப்பட்டது.

ஆனால் விடுதலைப் போராட்டம் வீரத் தியாகத்தின் உச்சத்தில் பரிணமித்த போது தமிழர் தேசம் சாதி, மதம், சமூகம் போன்ற சமூக வியாதிகளில் இருந்து விடுபட்டு தமிழர் என்ற அடையாளத்துடன் ஒற்றுமையாக உலகமே வியந்து பார்க்க எழுந்து நடைபோட்டது. 

இது பல வெற்றிகளை, படைப்புக்களை வரலாறாக எழுத வழி சமைத்தது. தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறு இரத்தத்தினால் வரையப்பட்டது என்றால் தமிழர் என்ற அடையாளத்துடன் ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்தமையே ஆகும்.

தமிழர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்த மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை, செயற்பாட்டாளர்களை அரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த தமிழர் தேசம் தயங்கக் கூடாது. உழுத்துப்போன நாற்றங்களை மீண்டும் வெளிக் கொண்டுவருதல் இன்றைய களநிலையில் தமிழினத்திற்கு ஆபத்தானதாகும்.

அத்துடன் தாயக விடுதலைக்காக அளப்பரிய தியாகங்களை கொடுத்த தியாகிகளுக்கு நாம் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும். எனவே ஈழ தேசத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தமிழர் என்ற அடையாளத்துடன் ஒற்றுமையாக வாழ்வதும் அதனைப் பலப்படுத்துவதுமே ஆரோக்கியம் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.