தடுத்து வைக்கப்பட்ட யானைகள் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக விடுவிப்பு

இலங்கையில் வன ஜீவராசிகள் இலாகாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 யானைகளை தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் இன்று, புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் தனியார் இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் வளர்க்கப்பட்டு வந்த 38 யானைகள் தற்போது வனஜீவராசிகள் தினைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த யானைகளில் 21 யானைகளை கண்டி ஶ்ரீ தலதா மாளிகை பெரஹர உற்சவத்தில் பங்கு பற்றுவதற்காக விடுவிக்குமாறு அதன் உரிமையாளர்கள் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை கோரியிருந்தனர்.

சட்ட மா அதிபதி சார்பில் ஆஜரான துணை சொலிஸிட்டர் ஜெனரல் டிலிபா பீரிஸ் யானைகளை தற்காலிகமாக விடுவிக்க ஆட்சேபனை இல்லை என மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றத்தினால் 15 யானைகளுக்கு, நாளை வியாழக்கிழமை தொடக்கம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிணையில் உரிமையாளர்களுக்கு இந்த அனுமதி நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

இலங்கையில் பௌத்த வழிபாட்டு தல உற்சவங்களின் போது நடைபெறும் ஊர்வலங்களில் அலங்கரிக்கப்பட்ட யானைகளும் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.