இனி அத்தனையும் தமிழில் தவழப்போகிறது.

உலகத்தில் எத்தனை ஊர்கள் இருக்கிறதோ, இனி அத்தனையும் தமிழில் தவழப்போகிறது: குக்கிராமம் முதல் கூகுள் வரை திக்கெட்டும் திகட்டாத தெள்ளுதமிழ்..!!

வேலை தேடி முன்பெல்லாம் சென்னை வரும் பொழுது, எங்கே தேடி அலைந்து முகவரி கண்டு பிடித்து போய் சேர போகிறேனோ என்று உதறல் எடுக்கும் பலரை பார்த்திருப்போம்.

இன்று காலம் மாற மாற காட்சிகளும் மாறி விட்டது. சென்ட்ரலில் இறங்கி போக வேண்டிய இடத்தை ஒரு தட்டு தட்டினால், அந்த இடத்திற்கு செல்லும் பேருந்தில் தொடங்கி, டாக்சி வரை அனைத்தையும் பட்டியலிட்டு முன் நிறுத்துகிறது.


கூகுள் உலக வரைபடம் வந்ததற்குப் பிறகு உலகின் ஒவ்வொரு ஊர்களையும் கூகுள் வழிகாட்டியுடன் சென்றடைய முடிகிறது.

சரி படித்த பசங்க பார்த்து புரிஞ்சுக்குவாங்க. ஆங்கிலம் தெரியாதவங்களுக்கு..?? பொதுவாக ஆங்கிலத்தில் மட்டுமே உலக நாடுகளின் அத்தனை ஊர்களின் பெயர்களும் இருந்த நிலையில்,

தற்போது தமிழிலேயே ஊர்களின் பெயர்களை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் முழு அளவில் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவாக இருந்தாலும், ஆண்டிப்பட்டியாக இருந்தாலும் கூகுள் மேப்பில் நாம் தமிழிலேயே படித்து அறிந்து கொள்ளமுடியும்.

தமிழ் மட்டுமே அறிந்த கோடிக்கணக்கானோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

உலக அளவில் அதிகமாக புலம் பெயரக்கூடியவர்கள் தமிழர்கள் என்ற ஒரு புள்ளிவிவரம் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களும் தமிழர்களாக உள்ள நிலையில், கூகுளின் இந்தச் சேவை தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் இருந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்கின்றனர் மொழி ஆய்வாளர்கள்.

கூகுளின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர் பிச்சை அப்பொறுப்பேற்றதற்குப் பிறகு இந்திய மொழிகள் பல கூகுளின் மூலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் தற்போது கூகுள் மேப்பும் தமிழில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மேப் தமிழில் வந்துள்ள நிலையில் இனி தமிழிலேயே வாய்ஸ் சேவையும் முழு அளவில் விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம்.

அவ்வாறு வரும் நிலையில் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்கூட தமிழ் வழிகாட்டியைக் கேட்டறிந்தே எந்த இடத்திற்கும் எவரையும் வழி கேட்காமல் சென்றடைய முடியும்.

No comments

Powered by Blogger.