அதிசயம் ஆனால் உண்மை – யாழில் இருந்து கதிர்காமம் சென்றடைந்தது லக்ஸ்சுமி என்ற நாய் பிரார்த்தனையையும் நிறைவேற்றியது!

இம்முறை வடக்கு – கிழக்கில் இருந்து பெருமளவிலான முருகபக்தர்கள் காட்டுப்பாதையூடாக பாதயாத்திரை மேற்கொண்டு கதிர்காமம் முருகன் ஆலயத்தை நோக்கிச் சென்ற வண்ணம் இருக்கின்றனர். காட்டுப்பாதை கடந்த 15ஆம் திகதி திறக்கப்பட்டு இன்றுடன் 12 தினங்கள் கடந்துள்ளது இதுவரை உகந்தை குமண,யால காட்டுப்பாதையூடாக 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கதிர்காமம் கொடியேற்றத்திற்குச் சென்றுள்ளனர். தற்போதும் பலர் செல்கின்றனர். 

இந்நிலையில் யாழ்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து அங்குள்ள முருக பக்தர்களுடன் கடந்த மே மாதம் கதிர்காமத்திற்கான பாதயாத்திரை மேற்கொண்ட குழுவினரோடு சேர்ந்து நடைபயணத்தில் இணைந்து கொண்ட நாய் ஒன்று கதிர்காமம் முருகன் ஆலயத்தைச் சென்றடைந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடைப்பயணத்தில் ஈடுபட்ட முருகபக்தர்களினால் லஸ்சுமி எனப்பேர் சூட்டப்பட்ட அப் பெண் நாய் வடக்கில் இருந்து கால் நடையாக கிழக்கிற்கு வந்து உகந்தை முருகன் ஆலயத்தைச் சென்றடைந்து அங்கிருந்து காட்டுப்பாதையூடாக பயணம் மேற்கொண்ட முருகபக்தர்களுடன் சேர்ந்து தற்போது கதிர்காமம் ஆலயத்தைச் சென்றடைந்துள்ளது.

காட்டுப்பாதையூடாக செல்லும் போது குறித்த நாய் அக் காட்டில் ஏற்படும் பல்வேறு தடைகளையும் தாண்டி குறிப்பாக அங்குள்ள நீர் நிலைகளையும் நீந்திக்கடந்தே பல்வேறு அடியார்களுடன் சேர்ந்தும், தனித்தும் நடந்து கதிர்காமம் முருகன் திருத்தலத்தை அடைந்துள்ளது. கதிர்காமம் சென்ற குறித்த நாய் அங்குள்ள முருகன் ஆலயத்திற்கு முன் இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு கண்ணீர் விட்டதையும் கண்ட அடியார்கள் அனைவரும் அந் நாயின் தெய்வ பக்தியை நினைத்து மெய்சிலிர்த்துப்போய் நின்றதாக பாதயாத்திரையில் ஈடுபட்ட குருமண்வெளியைச்சேர்ந்த பக்தர் பொ.ஜெயநாதன் தெரிவித்தார். மனிதர்களுக்கு இடையில் தெய்வபக்தி என்பது குறைவடைந்து வருகின்ற இக் காலத்தில் மிருகங்களிடையே தெய்வபக்தி மேலோங்கி நிற்பதையே இந் நாயின் நடைப்பயணம் எடுத்துக் காட்டுகின்றது.

குறித்த நாய் யாழ்ப்பாணத்தில் இருந்து 550 கிலோ மீற்றருக்கு மேல் கால்நடையாக பயணித்து கதிர்காமம் திருத்தலத்தைச் சென்றடைந்திருப்பது. அந் நாய் முற்பிறப்பில் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடியே இப்பயணத்தில் ஈடுபட்டிருக்க முடியும் என பக்தர்கள் மெய்சிலித்துக் கூறுகின்றனர். தற்போது குறித்த நாய் கழுத்தில் பட்டுடன் கதிர்காமம் ஆலயத்தை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது. இப் பெண் நாய் வயிற்றில் கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாருதம் செய்திகளுக்காக செய்தியாளர் மற்றும் மாருதத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு செ.துஜியந்தன்

No comments

Powered by Blogger.