இலங்கையில் உயிர்ப்பலிகளின் பின்னணியில் இறைவனா? மனிதனா?

இலங்கையில் 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் பல உயிர்களை பலி கொடுத்த நிலையில், இயற்கை அன்னையின் கொடூரத் தாண்டவத்தால் மேலும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.
இயற்கையின் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல உயிர் இழப்புக்கள் ஏற்பட்டமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற மூன்று அனர்த்தங்கள் இவற்றை எடுத்துக்காட்டுகின்றன. தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் திகதி கொலன்னாவ - மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு அனர்த்தம், பாரிய விளைவை ஏற்படுத்தியிருந்தது.

இந்த அனர்த்தத்தில் 32 பேர் வரையில் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததனர். வீடுகள் பல முற்றாகச் சேதமடைந்த அதேவேளை, அப்பகுதியில் இருந்து பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட சதி வேலையா என்பது குறித்து இன்று வரை பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் குப்பைமேடுகள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குப்பைமேடுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

குப்பை மேடு சரிந்து விழுந்ததன் பின்னர் அதுதொடர்பான ஆய்வுகள் பல நடத்தப்பட்டன. குறித்த ஆய்வுகள் முன்னதாகவே நடத்தப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது என நாடாளவிய ரீதியில் பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இது இவ்வாறிருக்க மே மாதம் 18 ஆம் திகதி கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள கட்டடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மீதொட்டமுல்ல குப்பைமேடு விவகாரம் சூடு தணிந்து, கட்டடங்கள் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த கட்டடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து சர்ச்சை நிலை ஏற்பட்டதுடன், குறித்த கட்டடம் அதிக எடை காரணமாக சரிந்து விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் அந்த கட்டடத்தை அண்டியுள்ள பகுதிகளும் தாழிறங்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அருகிலுள்ள மக்களுக்கு ஆபத்து நேரக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தன.

அத்துடன், குறித்த அனர்த்தத்திற்கு உள்ளான கட்டடத்தின் உரிமையாளர் சரணடைந்த நிலையில், ஒன்பது நாட்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தச் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களுக்குள் இலங்கையின் தென்பகுதியில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 212 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போனார்கள். அத்துடன், வீடுகளை இழந்து பலர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தனர்.

அத்துடன், 2,000 க்கு மேற்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இரத்தினபுரியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பலர் தங்களது சொத்துக்கள் மற்றும் குடியிருப்புக்களை இழந்த நிலையில், முகாம்களில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது.

தமது உறவுகளையும் உடைமைகளையும் இழந்த மக்களுக்காக நாடு முழுவதும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டும், சர்வதேச நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் பல கப்பல்களின் மூலம் இலங்கையை வந்தடைந்தமையும் மறக்கமுடியாத ஒன்றாகும்.

தென்பகுதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில், வடபகுதியில் கடந்த 5 மாதத்திற்கு மேலாக தொடர்ச்சியான வறட்சி நிலை காரணமாக குடிநீர் இன்றி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், கால்நடைகள் மற்றும் நீர்த்தாவரங்கள் நீரின்றி செத்துமடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்திற்கு கட்டடங்களின் அதீத வளர்ச்சி மற்றும் முறையற்ற வடிகாலமைப்புக்களே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த விடயம் தொடர்பான அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினால் பாதிக்கப்படுவது பொதுமக்களே என்பதை சமூகவியலாளர்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகும் பகுதிகளை இனங்கண்டு, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியமைத்தல் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை அந்தந்தப் பிரதேசங்களில் உள்ள அரச பிரதிநிதிகளே முன்னெடுக்க வேண்டும்.

ஆனால், இயற்கை அனர்த்தம் இடம்பெற்று உயிர்கள் பல காவுகொள்ளப்பட்ட பின்னர், ஆய்வுகளை மேற்கொள்வதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதும் எந்தவகையில் நியாயம்? என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பெறுமதிமிக்க மனித உயிர்களை இயற்கையா அல்லது செயற்கையா காவுகொள்கின்றது என்று தெரியாமல் பறிகொடுத்த உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து தினம் தினம் வேதனைகளை அனுபவித்து வருவது மக்களே.

உயிர்களை காவுகொள்ள வேண்டும் என கடவுள் போடும் திட்டமா அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களின் அசமந்தப்போக்கா என்பதற்கு இன்னும் எத்தனை அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் விடை கிடைக்காது என்பதே நிஜம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


-Sujitha Sri

No comments

Powered by Blogger.