சீனாவில் "பெண் இயேசு வழிபாட்டு முறை" உறுப்பினர்கள் கைது

சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள மத வழிபாட்டு முறையை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 18 பேரை சீன காவல்துறையினர் கைது செய்திருப்பதாக சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்திருக்கிறது.

2014 ஆம் ஆண்டு மெக்டோனல் உணவகம் ஒன்றில், பெண்ணொருவர் தன்னுடைய தொலைபேசி எண்ணை வழங்க மறுத்தவுடன், அவரை அடித்தே கொன்ற அவப்பெயர் இந்த குழு உறுப்பினர்கள் சிலருக்கு உண்டு.

1990-ஆம் ஆண்டு "த சர்ச் ஆப் அல்மைட்டி காட்" தொடங்கப்பட்டது. சீனாவில் இயேசு பெண்ணாக உயிர்ந்தெழுந்தார் என்று இது போதிக்கிறது.

இந்த வழிபாட்டு முறையினரை அடக்குவதற்கு சீன அதிகாரிகள் அடிக்கடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த வழிபாட்டு முறையை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர்.

தற்போதைய கைது நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வழிபாட்டு முறை பயன்படுத்திய கணினிகள் மற்றும் புத்தகங்களை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பிபிசிக்கு நேரடியாக பதிலளிக்க "த சாச் ஆப் அல்மைட்டி காட்" மறுத்துவிட்டது. தங்களுடைய இறைநம்பிக்கையாளர்கள் சீன அதிகாரிகளால் சித்ரவதைக்குள்ளானதாக குற்றஞ்சாட்டப்படும் சான்றுகளை உள்ளடக்கியுள்ள, அமெரிக்காவில் இருந்து பதிவிடப்படும் இணையதளத்தில் உலா வந்து தகவல்களை அறிந்துகொள்ள அவர்கள் கூறியுள்ளனர்.

"த சர்ச் ஆப் அல்மைட்டி காட்" மைய போதனை

"எல்லாம் வல்ல கடவுளான இறுதி நாட்களின் கிறிஸ்து", கடவுளின் அருள் வெளிப்படுவதற்காக சீனப் பெண்ணாக பூமிக்கு திரும்பி வந்தார் என்பது இந்த வழிபாட்டு முறையின் மைய நம்பிக்கையாகும்.


இந்த சீன பெண் இயேசுவோடு நேரடி தொடர்பை கொண்டுள்ளதாக கூறிக்கொள்ளும் ஒரேயொருவர் முன்னாள் இயற்பியல் ஆசிரியர் ட்சாவ் வெய்ஷான் மட்டுமே. இவர்தான் 25 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த வழிபாட்டு முறையை தொடங்கியவர். இதனை தொடங்கிய பின்னர் ட்சாவ் வெய்ஷான் அமெரிக்காவுக்கு தப்பியோடிவிட்டார்.

கம்யூனிசத்திற்கு எதிர்ப்பு

சீனாவின் கம்யூஸ்ட் கட்சியை "சிவப்பு டிராகன்" என்று வர்ணிக்கும் இந்த வழிபாட்டுமுறை கம்யூனிசத்தை வெளிப்படையாக எதிர்ப்பதாகவும் உள்ளது.

பல கிறிஸ்தவ பிரிவுகள் சீனாவில் சுதந்திரமாக வழிபடுவது கடினமாக உள்ள நிலையில், அதனுடைய உறுப்பினர்களை நண்பர்களிடம் இருந்தும், குடும்பத்தினரிடம் இருந்தும் பிரிக்கிறது என்றும், மீட்படைய வேண்டும் என்றால் பணத்தை அன்பளிப்பாக வழங்க கட்டாயப்படுத்துகிறது என்றும் "த சர்ச் ஆப் அல்மைட்டி காட்" மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு மெக்டோனல் உணவகத்தில் நடைபெற்ற கொலைக்கு பிறகு, இந்த வழிபாட்டு முறையை சேர்ந்த பல உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மெக்டோனல் உணவகத்தில் கொலை

2014 ஆம் ஆண்டு 35 வயதான கொலை செய்யப்பட்டவரை ட்சாவ்யுவான் நகரத்திலுள்ள மென்டோனல் உணவகத்தில் வைத்து இந்த வழிபாட்டு முறையோடு சேர்த்து கொள்ள அதன் உறுப்பினர்கள் முயற்சித்துள்ளனர்.


அந்த நபர் தொலைபேசி எண்ணை வழங்க மறுத்தவுடன், அவரை சாத்தான் பிடித்திருக்கிறது என்று இந்த குழுவினர் நம்பியதாக தீர்ப்பில் இடம்பெற்றுள்ள நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனே நற்காலி மற்றும் தரை துடைக்கும் கருவியின் உலோக கைப்பிடிகளை கொண்டு அவரை இந்த குழுவினர் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சீன அரசின் ஒடுக்குமுறை

ஆனால், இந்த வழிபாட்டு முறையினரை ஒடுக்கும் நடவடிக்கைகளை மெக்டோனல் உணவக கொலைக்கு முன்பாகவே சீனா தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டு சிங்காய், ட்செஜியாங் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேடுதல் வேட்டைக்கு பின்னர் நிகழ்ந்த தொடர் கைதுகளில் பல மூத்த உறுப்பினர்கள் உள்பட சுமார் 100 பேர் சிறை தண்டனை பெற்றனர். 2014 ஆம் ஆண்டு ஹூபெய் மற்றும் சின்ஜியாங் இடங்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த வழிபாட்டு முறைக்கு காணொளி தயாரித்து, பரவலாக்கியதாக குற்றஞ்சாட்டி 36 பேரை அன்ஹூய் மாகாண காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments

Powered by Blogger.