உலகின் பார்வையிழந்தோர் எண்ணிக்கை 2050-ல் மும்மடங்காகும்: ஆய்வில் தகவல்

பார்வையிழப்பால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அடுத்த நான்கு தசாப்தங்களில் மும்மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிகிச்சைகளை மேம்படுத்த போதுமான அளவு நிதி வழங்காவிட்டால், பார்வையிழந்தவர்களின் தற்போதைய எண்ணிக்கையான 3.6 கோடியில் இருந்து, 2050ஆம் ஆண்டுவாக்கில் 11.5 கோடியாக அதிகரித்துவிடும் என்று லான்செட் க்ளோபல் ஹெல்த் (Lancet Global Health) என்னும் மருத்துவ சஞ்சிகை கணிப்பு வெளியிட்டுள்ளது.

வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.

தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் பார்வையிழப்பும், பார்வைக் குறைபாடும் அதிகமாகக் காணப்படுகின்றன. அந்த ஆய்வின்படி, உலக அளவில், மக்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளின் விகிதம் குறைந்துள்ளது.

ஆனால், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மருத்துவத் துறையின் வளர்ச்சியால் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்வரும் சில தசாப்தங்களில் பார்வைக் கோளாறுகள் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

188 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், 20 கோடிக்கும் அதிகமான மக்கள், மிதமானது முதல் கடுமையானது வரையிலான கண் பார்வைக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் 55 கோடியாக உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"சிறிய அளவிலான பார்வைக் கோளாறுகூட ஒருவரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது" என்கிறார் ஆங்கிலா ருஸ்கின் பல்கலைக்கழக பேராசிரியர் ருபெர்ட் போர்னே.

"உதாரணமாக, பார்வைக் கோளாறு தற்சார்பை குறைக்கிறது… பொதுவாக மக்கள் வாகனங்களை ஓட்டுவதில் தயக்கம் காட்டுவார்கள்," என்கிறார் அவர்.
பார்வைக் கோளாறு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை குறைக்கும் என்கிறார் பேராசிரியர் ருபெர்ட் போர்னே.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பார்வை குறைபாட்டால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக சஹாரா ஆஃப்ரிக்காவின் சில பகுதிகளில் பாதிப்பின் விகிதம் அதிகமாக உள்ளது.

கண்புரை அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்கு சிறப்பான முதலீடுகள் தேவை என்றும், பார்வை திருத்தும் கண்ணாடிகளை மக்கள் அணுகுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறது இந்த ஆய்வு.

"முதலீடுகளின் மிகப்பெரிய வருமானத்தை மருத்துவக் குறுக்கீடுகள் வழங்குகின்றன," என்கிறார் பேராசிரியர் ரூபர்ட் பார்னே.

"வளரும் நாடுகளில் கண்டுபிடிப்புகளை சுலபமாக நடைமுறைப்படுத்தமுடியும். அவை மலிவானவை மற்றும் ஓரளவு கட்டமைப்பு வசதிகளே போதுமானது. இந்தத் துறையில் செலவளிக்கப்படும் தொகையை, பார்வைக் கோளாறுகள் சரியாகி, மக்கள் மீண்டும் பணியாற்றத் தொடங்குவதன் மூலமே அந்த நாடுகள் பெற்றுவிடமுடியும்," என்று அவர் கூறுகிறார்.

முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்புகளைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் 'சைட்சேவர்ஸ்' (Sightsavers) அறக்கட்டளை, கண்புரை அதிகளவில் வளர்ந்து, விழித்திரைகளை முற்றிலுமாக மூடிவிடும் நிலை அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.

"உலகின் ஏழை நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், நாட்பட்ட உடல்நலக் கோளாறுகள் அதிகரிப்பதும் பார்வையிழப்பை அதிகரிக்கச் செய்கிறது," என்கிறார் இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த இம்ரான் கான்.

"வளரும் நாடுகளில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதுடன், கண் சுகாதார பாதுகாப்புக்காக அதிகளவிலான அறுவை சிகிச்சை நிபுணர்களும், செவிலியர்கள் பயிற்றுவிக்கப்படவேண்டும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.