இலங்கை கடற் பரப்பில் இடம்பெற்ற இந்திய மீனவர்கள் கைது சட்ட விரோதமானது! மோடிக்கு கடிதம்!!

இலங்கைக்குச் சொந்தமான வடக்குக் கடல் எல்லையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் 12 கைப்பற்றப்பட்டுள்ளமைக்கு, இந்தியாவில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோடிக்குக் கடிதம்

“இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

“நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை, நாகை, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 49 பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

நெடுந்தீவு, காரைநகருக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘நட்பு நாடு’ அழகல்ல

“தமிழக மீனவர்களைத் தாக்கி, கைது செய்து, அவர்களது படகுகளை மோதி மூழ்கடித்திருக்கும் இலங்கைக் கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது” என்று, திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 41 மீனவர்கள், இராமேஷ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என்று, மொத்தம் 49 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கைக் கடற்படையின் அராஜக நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

“அராஜகமாக கைது செய்தது மட்டுமின்றி, தமிழக மீனவர்களின் இரு படகுகளைத் தங்களின் கப்பலை விட்டு மோதி, கடலில் மூழ்கடித்திருப்பதும் மற்ற படகுகளை பறிமுதல் செய்திருப்பதும், இலங்கைக் கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான செயலாக அமைந்திருக்கிறது. 

“தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவும் வறுமையில் வாடும் தங்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இப்படி அரக்கத்தனமாக தாக்கிக் கைது செய்வதும், அவர்களின் படகுகளை உடைத்து நொறுக்கி நாசப்படுத்துவதும் ‘நட்பு நாடு’ என்று கூறும் இலங்கை அரசுக்கு அழகல்ல. 

“ஆழ்கடல் மீன்பிடிக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி,இராமேஷ்வரத்தில் தொடக்கி வைத்த ஈரம் காய்வதற்குள், இலங்கைக் கடற்படை இப்படியொரு தாக்குதலை நம் நாட்டு மீனவர்கள் மீது நடத்தி, 49 மீனவர்களைக் கைது செய்திருப்பது மிக மிக மோசமான, மனித உரிமைகளை மீறிய, அந்த மீனவக் குடும்பங்களை நிலைகுலைய வைக்கும் இதயமற்ற நடவடிக்கையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அரசு துவங்கியுள்ள ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்துக்கும் ஊறு விளைவிக்கும் செயலாகவே இலங்கைக் கடற்படையின் இந்த கண்மூடித்தனமான கைதுகள் அமைந்துள்ளன. 

“இலங்கைச் சிறையில் வாடும் இந்திய மீனவர்களை ஒவ்வொரு முறை விடுவிக்கும் போதும், அடுத்து வரும் சில நாட்களில் கொத்துக் கொத்தாக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசின் மோசமான நடவடிக்கை ஒரு தொடர்கதை போல் நீண்டு கொண்டிருக்கிறது. மீனவர் பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காண மீனவர்கள் பிரதிநிதிகளுடன் இருநாட்டு அரசுகளின் சார்பில், பல்வேறு மட்டங்களில், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 

“அந்தப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு, இந்திய அரசுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதத்தில் இந்திய மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வேதனையளிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 49 மீனவர்களை விடுவிக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர் என்று, இந்தியச் செய்தி தெரிவிக்கிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து, கடந்த 7ஆம் திகதியன்று 316 விசைபடகில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 

நெடுந்தீவு அருகே, அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 12விசைப் படகுகளை பறிமுதல் செய்ததோடு 49 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இது புதுக்கோட்டை மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கைக் கடற்படையின் இந்நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே, இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என, அவர்கள் கூறியுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க, தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.