இலங்கை: மாசு உற்பத்தி நிலையமாகும் மின் உற்பத்தி நிலையம்

நுரைச்சோலை பகுதியில் விளையும் பீட் ரூட் கிழங்குகள் சிவப்பு நிறத்தில் அல்லாமல் கருப்பாக இருக்கின்றன. அப் பகுதியில் படிக்கும் மாணவர்கள் வெள்ளை நிறத்தில் சீருடை அணிந்தாலும் அவை உடனே கருப்பாகி விடுகின்றன. கருப்பு நிறம் அங்கு காற்றிலேயே கலந்திருக்கிறது.
மின் உற்பத்தி நிலையத்தின் அருகில் வசிப்பவர் ஒருவரின் கையில் படிந்துள்ள நிலக்கறியின் சாம்பல்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மின்சாரத்தை மட்டுமல்லாமல் கரித்துகள் நிறைந்த இந்த மாசுபாட்டையும் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யாததால் வெளியாகும் இம்மாசு, புத்தளம் மாவட்டத்தில் உள்ள பொது மக்களை மட்டுமல்லாது, அப்பகுதியில் விளையும் காய்கறிகள் முதல் அங்கு அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவர்கள் என அனைவர் மீதும் கரும்புகையை படியச் செய்கிறது. பருவக் காற்றில் பரவும் சாம்பல் துகள்கள் உண்டாக்கும் சுவாச நோய்களும் அங்கு வாழும் மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்குகிறது.

அப்பகுதியில் உள்ள பலதரப்பட்ட அமைப்புகளின் தொடர் முயற்சிகளுக்குப் பின்னரும், இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
காற்று மாசு இளம் மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை.

தற்போது வீசுகின்ற பருவக் காற்றின் காரணமாக மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசி துகள்கள் காற்றுடன் கலக்கும்போது, மக்கள் சுவாச நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதாக நுரைச்சோலை சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கனிஷியஸ் பீரிஸ் கூறுகின்றார்.

''தங்கள் பள்ளிக் கூடத்திற்கு வருகை தருபவர்களால், அங்குள்ள சூழல் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துகொள்ள முடியும்," என்கின்றார் அருகாமையிலுள்ள அரசு பள்ளிக் கூடமொன்றின் ஆசிரியர் மொகமட் அன்வர்.

அங்கு படிக்கும் மாணவர்களின் சீருடைகளில் மட்டுமல்லாது அவர்களின் கைகளிலும் கரும்புகை படிந்துகொள்ளும் அளவுக்கு அங்கு மோசமான மாசுபாடு நிலவுகிறது.
கருப்பு நிறத்தில் 'செங்கிழங்கு'

அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட், பயற்றங்காய் போன்ற காய்கறிகளும் புகை படிந்து, கருப்பாகத் தோற்றமளிப்பதாக உள்ளுர் வாசியான எஸ்லன் தாசன் குறிப்பிடுகின்றார்.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல், புழுதியுடன் சேர்ந்து பரவுவதால் தங்கள் பகுதியில் சூழல் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுவதாக உள்ளுர் மக்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.
அழியும் பயிர்கள்

''ஆரம்ப காலம் தொடர்ந்து சரியான தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றத் தவறியதே இது போன்ற பிரச்சினைகளுக்கு பிரதான காரணம். தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரதேச அரசியல்வாதிகளே பதில் கூறவேண்டும்," என சூழல் ஆய்வாளரான சட்டத்தரணி ஜெகத் குணவர்த்தன குறிப்பிடுகின்றார்.

"அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் உரிய முறையில் புதைக்கப்பட வேண்டும். உயர்ந்த தரத்திலான நிலக்கறி மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும்,'' என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம்

ஆண்டுதோறும் இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. மக்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையும் அழிந்து போவதாகவும் மதத் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கடமைப்பட்டுள்ள அனைத்து தரப்பினரின் கவனத்துக்கும் இது கொண்டு செல்லப்பட்டுவிட்டது. கவனம் செலுத்தப்படும் என்ற பதில்தான் கிடைக்கின்றதே தவிர பிரச்சினைக்கு தீர்வு கிட்டுவதாக இல்லை என்பதே பொதுவாக அங்குள்ள மதத் தலைவர்களின் கருத்தாக உள்ளது.

No comments

Powered by Blogger.