இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு: சுட்டவரின் இன்றைய நிலை

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சரணடைந்த செல்வராசா ஜெயந்தன் கடந்த 8 ஆம் திகதி யாழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்ற சந்தேகநபர் சரணடைந்திருந்தார்.

குறித்த சந்தேகநபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியிருந்தனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி நல்லூர் ஆலய பின்வீதியில் நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் சாஜனான சரத் ஹேமச்சந்திர என்ற மெய்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த எட்டாம் திகதி தாக்குதலை நடத்திய செல்வராசா ஜெயந்தனை, நீதிபதி இளஞ்செழியனின் சாரதி மற்றும் இன்பெக்டர் விமலசிறி உள்ளிட்ட மூவர் அடையாளம் காட்டியிருந்தனர்.

No comments

Powered by Blogger.