தூத்துக்குடியில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய அரியவகைத் திமிங்கலம்


தூத்துக்குடி பழைய துறைமுகம் பகுதி கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை அமினி உளுவை திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.

தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகில் கடற்கரையின் வடக்கு பகுதியில் திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியதைப் பார்த்த மீனவர்கள் மன்னார் வளைகுடா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இது அமினி உளுவை வகை திமிங்கலம் என்பது தெரியவந்தது. சுமார் 1.5 டன் எடையும் சுமார் 4 மீட்டர் நீளமும் உடையதாக காணப்பட்டது. இத்திமிங்கலத்தின் மேற்பகுதி கறுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளுடனும் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறத்துடனும் உள்ளது. 


ஆழ்கடலில் மட்டுமே வசிக்கும் இவ்வகைத் திமிங்கலம் அவ்வழியே சென்ற கப்பல்களில் மோதி இறந்திருக்கலாம் எனவும், தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்போதும் இதுபோன்ற பெரிய மீன் இனங்கள் திடீர் இறப்பைச் சந்திக்கும் எனவும், இத் திமிங்கலம் அரிய வகை திமிங்கலங்களில் ஒன்று எனவும் கூறினர். தகவலறிந்து வந்த தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அதிகாரிகளும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதன் முக்கிய உடற்பாகங்களில் சிலவற்றை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பொக்லைன் மூலம் தூக்கி வரப்பட்ட திமிங்கலம் கடற்பகுதியிலேயே பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.