ஐவரை பலி வாங்கிய வெள்ளம்: முன்னறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவும் மும்பை வாசிகள்

இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளப் பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் இருந்த மும்பை வாசிகள் தங்கள் முகவரிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, #RainHosts என்னும் ஹேஷ் டேக்குகளை உருவாக்கி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முன்னறிமுகம் இல்லாதவர்களுக்கும் அடைக்கலம் தந்து உதவுகின்றனர்.

வெள்ளம் வடியாமல் இருப்பதன் காரணம் வடிகால்களை பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்ததே என்று சமூக வலைத்தளத்தில் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இடுப்பளவு உயரம் தேங்கியுள்ள வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக்கொண்டனர். தரை வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் விமானம் மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வந்தாலும் இன்னும் அதிகமான மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று பிபிசி செய்தியாளர் சுரஞ்சனா திவாரி கூறினார்.

பிபிசி தமிழ் சேவையிடம் பேசிய மும்பையில் உள்ள சியோன் கோலிவாடா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டதால் புதன்கிழமை அதிகாலை முதல் மீட்பு மற்றும் உதவிப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகக் கூறினார்.

சில இடங்களில் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டவர்களை, மீட்புப் பணியாளர்கள் சுவர்களை இடித்துக் காப்பாற்றியதாகவும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வெளியூர் வாசிகள், பொதுப் போக்குவரத்து இன்னும் முழுமையாக சீரடையாத நிலையில் மும்பை நகரில் இருந்து வெளியேறும் சரக்கு வாகனங்கள் மூலம் வெளியேறுவதாகவும் அவர் கூறினார்.

தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கில் 1,200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டபின், மும்பையிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்த இந்த வெள்ளப்பெருக்குகளில், 1 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக மீட்புதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

மும்பை நகருக்கு வெள்ளம் புதிதல்ல. கடந்த 2005-ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 500 பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை அன்று வங்கிகள் இயங்கினாலும் விடுமுறை நாளைப்போல் காட்சியளித்தன. அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.