மட்டக்களப்பு கலை இலக்கிய வரலாற்றில் பாரதி சஞ்சிகை முன்னோடியாக திகழ்கிறது பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவிப்பு !

                                                                                                            - செ.துஜியந்தன் -
சஞ்சிகைகள் அக்காலத்தின் சிந்தனைகளை, இலக்கிய போக்குகளை, தன்மைகளை படம் பிடித்துக்காட்டுபவையாகும். நூல்களைவிட சஞ்சிகைகள் முக்கியமானது அதில் சமகாலத்தன்மைகள் காத்திரமாக வெளிப்படுத்தப்படும். மட்டக்களப்பு இலக்கிய வரலாற்றின் ஆய்வுக்குரிய முக்கிய நூலாக  பாரதி சஞ்சிகை அமைந்துள்ளது.


இவ்வாறு பேராசிரியை  சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார். மட்டக்களப்பு  மண்டூர் கிராமத்தில் இருந்து முதன் முதலில் 1948 முதல் 1950 வரையான காலப்பகுதியில் வெளியான பாரதி சஞ்சிகை தொகுப்பு நூலின் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலககேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

மண்டூர் கலை இலக்கிய அவையும் சுதந்திர ஆய்வு வட்டமும் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. கலை இலக்கிய அவை தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடக்கவுரையினை கலாநிதி வ.இன்பமோகன், நூல் அறிமுக உரையினை கவிதாயினி த.உருத்திரா ஆகியோர் நிகழ்த்தினார்கள். சிறப்பதிதிகளாக பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, கவிஞர் சோலைக்கிளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
ஐம்பதுகளின் காலப்பகுதியில் கல்வி, குடும்பம், பெண்கள், அரசியல், சாதி தொடர்பான கேள்விகள் அக்காலகட்டங்களில் தென்னாசிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன. இத்தகைய புதிய சிந்தனைகள், விவாதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஊடகமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் அமைந்திருந்தன. அச்சு உருவாக்கம் பரவலாக தொடங்கிய பின்னரே இம் மாற்றங்கள் நிகழ்ந்தன.
பெரும்பாலும் அக்காலத்தில் இந்தியாவின் கல்கத்தாவில் இருந்து அதிகளவான பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிவந்தன. கல்வி கற்ற படித்த இளைஞர்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அந்த வகையில் ஈழத்தில் சிறிய குக்கிராமமாக இருந்த மண்டூர் கிராமத்தில் இருந்து பாரதி என்ற சஞ்சிகை வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர்கள் புதியசிந்தனைகளை வேண்டிநின்றவர்களாக இருந்திருக்கவேண்டும். 

ஐம்பதுகளின் காலப்பகுதியில் நகரங்களையொட்டியதாகவே கல்வி, வாசிப்பு வளர்ச்சி இருந்தது. ஆனால் அக்காலத்தில் மட்டக்களப்பில் மண்டூர் எனும் சிறியதொரு கிராமத்தில் இருந்து சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமாகவுள்ளது. இவ் பாரதி சஞ்சிகையை வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் இச் சஞ்சிகையின் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது. அதற்கான அடித்தளம் என்னவாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

புாரதி சஞ்சிகையானது பத்து இதழ்கள் மட்டும் வந்துள்ளது. இத் தொகுப்பில்  முதலாவது இதழ் இடம்பெறவில்லை. அவ் இதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. 1948 இல் வெளிவந்த பாரதி சஞ்சிகையினை தேடிக்கண்டு பிடித்து அதன் தொகுப்பினை வெளியிட்டவர்களை பாராட்டியாக வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் இலக்கிய ஆய்வுகளுக்கு இப் பாரதி சஞ்சிகை பெரிதும் உதவும் என நினைக்கின்றேன். மட்டக்களப்பின் இலக்கிய வரலாற்றில் பாரதி சஞ்சிகை முன்னோடியாக திகழ்கின்றது என்றார்.


No comments

Powered by Blogger.