அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையர்களுக்கு ஏற்பட்ட கதி

ஆபத்தானப் படகுப் பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி வரும் இலங்கையர்கள் பலாத்காரமாகவேணும் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 13 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் கொழும்புக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் கடல் மார்க்கமாக தமது நாட்டுக்கு வரும் எவருக்கும் தமது நாட்டில் வாழ அனுமதி வழங்கப்படாது என்று திட்டவட்டமாக மீண்டும் அறிவித்திருக்கின்றது.

கடல் மார்க்கமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் நபர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதால் படகு அகதிகளை நாடு கடத்துவதை அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக மேற்கொள்ளும் என கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சுய விருப்பத்தின் அடிப்படையில் வெளியேறுபவர்களை மாத்திரமன்றி பலவந்தமாகவும் நாடு கடத்தலை தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என்றும் கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவினால் கடந்த வெள்ளிக்கிழமை நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் உட்பட 13 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் ஒன்பது மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோரி ஆபதானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலிய செல்லும் படகு அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் உள்வாங்குவதை நிராகரிக்கும் அவுஸ்திரேலிய அரசு நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் அமைத்துள்ள அகதிகள் தடுப்பு முகாம்களிலேயே தடுத்து வைத்திருக்கின்றது.

அவுஸ்திரேலிய அரசின் அகதிகள் தொடர்பான இந்த கடுமையான நடைமுறையை ஐக்கிய நாடுகள் சபையின் கடுமையான கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள போதிலும் படகு அகதிகள் விடயத்தில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் அவுஸ்திரேலிய அரசு தயாரில்லை என்பதை பல தடவைகள் பகிரங்கமாக அறிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Powered by Blogger.