இலங்கையில் நடப்பது கூட்டாட்சியா? கூத்தாட்சியா?


                                                                                             - செ.துஜியந்தன்-
இலங்கை அரசியல் வரலாற்றில் லஞ்சம் ஊழல் அற்ற அரசாங்கத்தையும்,  நாட்டு மக்கள் அனைவரும் சமத்துவத்துடன் எவருடைய அச்சுறுத்தலும் இன்றி  நிம்மதியான வாழ்க்கையினை வாழ்வதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதியை மிகுந்த எதிர்பார்ப்போடு ஏற்படுத்தியிருந்தனர். 

இந்நாட்டிலுள்ள இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற்று நல்லாட்சி அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபித்திருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரின் கூட்டாச்சியில் நல்லது நடக்கும், நாட்டில் வளம்பல பெருகி நலம்பல கிட்டும், புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். இதனால் நாட்டில்  தேனாறும் பாலாறும் செழித்தோடும் என்றொல்லாம் நாட்டு மக்கள் கனவு கண்டார்கள்.

நாட்டு மக்களின் கனவுகள் அத்தனையும் தவிடு பொடியாகிப்போன நிலையில் 'பழைய குருடி கதவைத்திறடி' என்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கமும் மக்களுக்கு எதுவும் செய்யாது இரண்டாண்டுகளை கடத்திவிட்டது. இந்த இரண்டாண்டுகளிலும் நல்லாட்சி அரசாங்கம் கள்ளன் பொலிஸ் விளையாட்டைத்தான் விளையாடியதே தவிர உருப்படியாய் எதனையும் செய்யவில்லை.

கூட்டாட்சி அமைத்து நல்லாட்சி செய்வோம் என்றவர்கள் இன்று தமக்குள் நடக்கும் கூத்துக்களுக்கு தீர்வு காண்பதிலே காலத்தை கழித்து வருகின்றனர். மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

அமைச்சர்கள் பதவி ஏற்பதும், பின் ஊழல் குற்றச்சாட்டுக்களில் பதவி இழப்பதும், துறப்பதுவும், இதனை சிலர் பாராட்டிப்பேசுவதும், சிலர் தூற்றுவதும் பதவி இழந்தவர்கள் பின் வேறொரு பதவியினை ஏற்பதுவும் என வடமோடி, தென்மோடி கூத்து கலை போன்று  அரசின் செயற்பாடுகள்   அரங்கேறி வருகின்றது. மக்களும் நல்லாட்சியின் கூத்தை பார்த்து சலித்துப்போய் விட்டார்கள்.

நல்லாட்சி அரசில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்றால் புறக்குடத்தில் வார்த்த நீர் போன்றே தீர்வு திட்டமும் சென்று கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பதிலும், விட்டுக்கொடுப்பதிலும் காலத்தைக் கடத்துகின்றது. ஆனால் தமிழ் மக்களிடத்தில் சென்று வீரவசனம் பேசுவதிலும், அரசுக்கெதிரான விமர்சனங்களை முன் வைப்பதிலும் தமது அரசியலை தந்திரமாக செய்துவருகின்றனர்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இறுதி யுத்தத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பான நீதி விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோரது நிலை, சட்டவிரோத காணி சூறையாடல்கள், தமிழர் பிரதேசங்களில் திடீரென முளைக்கும் புத்தர் சிலைகள்,  முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள், நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் தொடர்பான விடுதலை, யுத்தத்தில் அங்கவீனமானவர்களின் பிரச்சினைகள், கணவனை இழந்த அபலைகளின் வாழ்வாதாரம், வடக்கு கிழக்கு மக்களின் யுத்தத்திற்குப் பின்னரான மீள் கட்டுமாணப்பணிகள், கலாசார சீரழிவுகள், தமிழ் இளைஞர்,யுவதிகளின் எதிர்காலம் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையிலே நல்லாட்சி நடக்கின்றது.

இன்றைய ஆட்சியை நல்லாட்சி என்பதை விட கூத்தாட்சி என்றே சொல்வேண்டும். மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் கூத்துக்களுக்கு தீர்வு காணாது அரசாங்கத்தில் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யும் திருகு தாளங்களுக்கும், கூத்துக்களுக்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலும், பதில் சொல்வதிலும் அரசின் காலம் கழிகிறது.

இதற்காகவா? மக்கள்  இவ் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்?. கடந்த ஆட்சியில் நிலவி லஞ்சம், ஊழல், தமிழ் மக்களுக்கான அநீதிகளுக்கு எதிராக நீதியான விசாரணை நடைபெறும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். வடக்கு கிழக்கு மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றே மக்கள் நம்பினார்கள். அவையெல்லாம் இன்று கானல் நீராக போய்க்கொண்டிருக்கின்றது.

நல்லாச்சி அரசாங்கம் இருக்கின்ற காலத்தையும் சாக்குப்போக்கு சொல்லி  இழுத்தடித்து நாங்கள் வென்றால்  அடுத்த தேர்தலில் பார்ப்போம் என்ற நிலைக்கே தமிழ் மக்களின் பிரச்சினையை கொண்டு சென்று நிறுத்தும். அதனை தமிழ்த் தலைவர்கள் நம்புவார்கள், தேர்தலுக்கு வாக்கு கேட்டுவருவார்கள், தமிழ் மக்கள் நம்புவார்கள் வாக்கு போடுவார்கள், பின் ஏமாறுவார்கள் இந்த சக்கரம் தான் திரும்ப திரும்ப சூழலப்போகின்றதா? அல்லது இவ் நல்லாட்சியில் தீர்வு கிட்டுமா? என்ற விடை தெரியாத வினாக்களுடன் இலவு காத்த கிளி போல காத்துக்கிடக்கின்றனர். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள். 

No comments

Powered by Blogger.