நிதி மோசடியிலிருந்து தப்பித்து வந்த லெபனான் நாட்டவரை நாடுகடத்துமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

அமெரிக்காவில் பாரிய நிதி மோசடியோன்றை மேற்கொண்ட பின்னர் இலங்கைக்கு தப்பி வந்துள்ள அஹமத் பாக்கி எனும் லெபனான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை உடனடியாக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது நாட்டில் நடைபெறும் வழக்கு விசாரனையொன்றுக்கு ஆஜர் படுத்துவதற்காக சந்தேக நபரை நாடு கடத்துமாறு அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

எனவே சந்தேக நபரை நாடு கடத்த உத்தரவிடுமாறு கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவொன்றை விசாரித்த பின்னரே நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

அரச தரப்பின் வேண்டுகோள் தொடர்ப்பாக ஆட்சேபனை தெரிவித்த, சந்தேக நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த சந்தேக நபருக்கு எதிராக அமெரிக்கநீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் ஒரு சந்தேக நபரை நாடு கடத்த முடியாதென்று கூறிய வழக்கறிஞர் எனவே அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் தீர்ப்பை அறிவித்த நீதிபதி சந்தேக நபரை நாடுகடத்த தேவையான ஆதாரங்கள் நீதிமன்றம் முன் இருப்பதாக கூறினார், எனவே அவரை உடனடியாக நாடு கடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி அதுவரை அவரை சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு மேலும் உத்தரவிட்டார்.

ஆயினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு ஒன்றை உச்சநீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.