துர்நாற்றம் வீசும் கல்முனை நகர்!


                                                                                                            - செ.துஜியந்தன் -
இலங்கையிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுள் கல்முனை நகர் குறிப்பிடத்தக்கதாகும்.  தலைநகர்  கொழும்பிற்கு அடுத்ததாக எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வர்த்த நகர் கல்முனை என்று சொல்லலாம். கொழும்பில் கிடக்காத பொருட்களை கூட கல்முனைக்குச் சென்றால் பெற்றுக்கொள்ளலாம் அதுவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை மக்களுக்குள்ளது. 


கல்முனைக்கு தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். தினம் கொழும்பு மற்றும் தூர இடங்களில் இருந்து பொருட்களை ஏற்றி இறக்கிச் செல்ல வரும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 ஆயிரத்தை தாண்டும். அது போல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியிடங்களில் இருந்து மட்டும் வந்து செல்கின்றன. கல்முனை மாநகர பிரதேசத்திற்குள் இருக்கும் வாகனங்களைத்தவிர என்று சொல்லலாம். இவற்றை எல்லாம் நிறுத்தி வைப்பதற்க்கு கூட முறையான வாகனத்தரிப்பிடம் கல்முனையில் இல்லை.

கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் என்ற பேரில் நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறார்கள். தினம் டெங்கு ஒழிப்புத்திட்டங்களும், அதற்கான விழிப்புணர்வு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. இருந்த போதிலும் கல்முனை நகர் குப்பைமேடாகவும், துர்நாற்றம் வீசும் நகராகவுமே காட்சியளிக்கின்றது.

சுத்தம் சுகம் தரும் என்று வெறுமனே பதாதைகளை காட்சிப்படுத்தி வைப்பதன் மூலம் சுகாதாரத்தை கொண்டுவர முடியாது. கல்முனை மாநகர சபையும், கல்முனை சுகாதார பணிமனையும் மக்களின் பொது நலனில் அக்கறை செலுத்துவதாக காட்டிக்கொள்வது வெறும் பம்மாத்தாகவே இருக்கின்றது.

கல்முனை நகரின் மத்தியிலுள்ள வடிகான் ஓடையில் நிரம்பி வழியும் குப்பைகளும், மிக நீண்டகாலமாக சுத்தம் செய்யப்படாமல் கிடக்கும் பல்வேறு கழிவுப்பொருட்களும். நகரை அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நகராகவும் கல்முனையை வைத்திருக்கின்றது. மக்கள் வங்கி, போக்குவரத்துப் பொலிஸார் கடமையில்  ஈடுபடும் மத்திய இடம், ஆர்.கே.எம். பாடசாலைக்குச் செல்லும் வீதி, பிரபல்ய வர்த்தக நிலையம் அமைந்துள்ள கட்டிடத் தொகுதிகள் என்பவற்றுக்கு அருகாமையில் பாரிய வடிகானில் தேங்கி நிற்கும் கழிவு நீரினை அகற்றுவதற்கோ, அதனை ஓடவைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படாதுள்ளது. இவ் வடிகானை எட்டிப்பார்த்தால் அதன் சூழல் எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதே போன்று கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலுள்ள வடிகான் போத்தல்கள், சிரட்டைகள், குப்பைகள் அடைபட்ட நிலையில் கழிவு நீரால் தேங்கியுள்ளது. இவ் ஆலயத்திற்கு அருகிலுள்ள பின் வீதியின் இருமருங்கிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அவ் வீதியை பயன்படுத்துவதற்கு கூட முடியாத நிலையுள்ளது.

கல்முனை நகரின் மத்தியில் இருந்து பிராந்திய சுகாதாரப் பணிமனை அலுவலகம் அமைந்துள்ள வீதியின் முன்னாலுள்ள வடிகான், பொலிஸ் நிலையத்திற்கு அருகால் செல்லும் வடிகான் , கலமுனை பொதுச்சந்தையின் உவெஸ்லி உயர்தரப்பாடசாலைக்கு அருகிலுள்ள வடிகான் உட்பட  பல இடங்கள் துப்பரவு செய்யப்படாது. கழிவு நீர் தேங்கிய நிலையிலே காட்சியளிக்கின்றது. கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்கள் சிலவற்றிற்கு கொங்கிறீட் மேல் மூடிகள் கூட இடப்படவில்லை. இதனால் பாதசாரிகள் இடறி வீழ்ந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

மக்களை விழிப்படையச் செய்வதற்க்கு முன் கல்முனையை சுத்தம் செய்யும் நடவடிக்கையினை மாநகர சபையும் அதிகாரிகளும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கல்முனையைப் பொறுத்தவரை தற்போது மக்கள் டெங்கு தொடர்பில் மிக விழிப்படைந்தவர்களாகவுள்ளனர். வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தண்டப்பணம் அறவீடும் நடவடிக்கையை அதிகாரிகள் நிறுத்தி கல்முனையில் இவ்வாறு காணப்படும் பொது இடங்களையும், கழிவு நீர் தேங்கிநிற்கும் வடிகான்களையும் துப்பரவு செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முறையான வடிகான் திட்டம் முன்னெடுக்கப்பட்டு கல்முனை நகரில் தேங்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். நகரை அழகுபடுத்தாது நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை எப்படி அழகுபடுத்த முடியும். மனிதன் வாழும் சூழல் சுவாசிக்கவும், வசிக்கவும் சுத்தமாக இருக்கவேண்டும். இருக்கின்ற வளங்களை அழிக்காது. வீதியின் இருமருங்குகளிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் மரங்களை நட்டு கிராமத்தையும், நகரத்தையும், நாட்டையும் பாதுகாக்க இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

துர்நாற்றம் வீசும் கல்முனை நகரை அழகுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?     

No comments

Powered by Blogger.