ஈழத்தின் முல்லைத்தீவில் நடந்தேறிய இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழா.

ஈழத்தின் இலக்கியத்தில் இன்னொரு பதிவாக இத்தாலி மற்றும் இந்திய படைப்பாளிகளின் நூல்கள் வள்ளுவர்புரம் 'செல்லமுத்து வெளியீட்டகம்' ஊடாக வெளியிடும் நிகழ்வானது 06.08.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்திய, ஈழத்து, புலம்பெயர் தேசத்துப் படைப்பாளிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடக்கமாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். நிகழ்வுக்கு இந்தியப் படைப்பாளி வல்லம் கோவி, ஈழத்துப் படைப்பாளி கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராசா ஆகியோர் இணைத்தலைமை வகித்து நிகழ்வினை சிறப்பாக்கினர்.

சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை படைப்பாளி முல்லை றிசானா இசைத்தார். வரவேற்புரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி வழங்கினார்.

வாழ்த்துரைகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் இந்தியா 'இனிய நந்தவனம்' இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், ஈழத்து நடிகர் ஜெராட் நோயல் ஆகியோர் வழங்கினர். இந்தியப் படைப்பாளிகளுக்கான கெளரவிப்பு நிகழ்வினை கவிஞர் வே.முல்லைத்தீபன் தொகுத்தளிக்க நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இத்தாலிய, இந்திய படைப்பாளிகள் நூல்கள் வெளியிடப்பட்டது. இத்தாலிய படைப்பாளி கவிஞர்/சமையற்கலை நிபுணர் இத்தாலி தனு அவர்கள் எழுதிய 'கடலினை அடையாத நதிகள்' சிறுகதை நூலினை நிகழ்வின் முதன்மை விருந்தினர் வடமாகாண சபை உறுப்பினர் க.சிவனேசன் வெளியிடுகையில் முதற் பிரதியினை பிரான்ஸ் தேசத்திலிருந்து வருகைதந்த கவிஞர் அல்வையூர் தாசன் அவர்கள் பெற்றுக்கொள்ள, இந்தியப் படைப்பாளி கவிஞர்/இணைப்பேராசிரியர் அகத்தியா எழுதிய 'முகமறை' கவிதை நூலினை 'தமிழ் விருட்சம்' தொண்டமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் வெளியிடுகையில் இந்திய தொழிலதிபர்கள் எம். மணி, வி.ஜான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இரு நூல்களும் சமநேரத்தில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் நூல்களினை பெற்றுக்கொண்டனர்.

இந்தியப் படைப்பாளி அகத்தியாவின் 'முகமறை' கவிநூலின் ஆய்வுரையினை கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களும், இத்தாலிய படைப்பாளி இத்தாலி தனு அவர்களின் 'கடலினை அடையாத நதிகள்' சிறுகதை நூலின் ஆய்வுரையினை இந்திய இலக்கிய ஆய்வாளர் கவி.முருகபாரதி அவர்களும் நிகழ்த்தினர்.

போற்றலுரையினை பிரான்ஸ் தேசத்திலிருந்து வருகைதந்த கவிஞர் அல்வையூர் தாசன் அவர்கள் வழங்கினார். முதன்மை விருந்தினர் உரையினை வடமாகாண சபை உறுப்பினர் க.சிவனேசன் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் ஈழத்து நடிகர் ஜெராட் நோயல், பிரான்ஸ் கவிஞர் அல்வையூர் தாசன் ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இருவிழிகளிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தமிழினி அவர்களின் பாடலும் இடம்பெற்றது.

ஏற்புரையினை இந்தியா இணைப்பேராசிரியர்/கவிஞர் அகத்தியா நிகழ்த்தினார். நன்றியுரையினை புதுக்குடியிருப்பு யோகா பயிற்சிக் கல்லூரி இயக்குநரும் படைப்பாளியான ஜெயம் ஜெகன் வழங்கினார்.
இலங்கை அறிவிருட்ஷம் துரித கல்வி சமூக மேம்பாட்டு அமைப்பு, இந்தியா இனிய நந்தவனம் பதிப்பகம் ஆகியனவும் இந்த நிகழ்வுடன் இணைந்து செயலாற்றின.

ஏற்கனவே 'இத்தாலிய சமையல்' எனும் நூலினை வெளியீடு செய்த தனு அவர்களின் இலக்கியப் பயணத்தின் இன்னுமொரு அம்சமாக 'கடலினை அடையாத நதிகள்' சிறுகதைத் தொகுதியும், அகத்தியாவின் 'முகமறை' கவிநூலும் தமிழுலகில் இணைந்துகொண்டன.

ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து இணைப்புப் பாலமாக இந்த நிகழ்வு அமையப்பெற்றதாக நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments

Powered by Blogger.