ஆதார் தகவல்களை உளவு பார்த்ததா அமெரிக்காவின் சி.ஐ.ஏ.?

ஆதார் தகவல்களை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. உளவுபார்த்ததாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 
தேசிய அளவிலான அடையாள அட்டையாக ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உரிய பயனாளிகள் பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்காக தேசிய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI) அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் இணையதளத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. ஆனால், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆதார் தகவல்களை அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உளவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் புதிய குற்றச்சாட்டை கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ’கிராஸ் மேட்ச் டெக்னாலஜிஸ்’ (Cross Match Technologies) என்ற நிறுவனம் மூலம் ஆதார் விவரங்களை சி.ஐ.ஏ அமைப்பு உளவு பார்த்திருக்கலாம் என்கிறது விக்கிலீக்ஸ். இதே கிராஸ் மேட்ச் நிறுவனம்தான் ஆதார் தகவல்களைச் சேகரிப்பதற்கான சாப்ட்வேரை தேசிய தனிநபர் அடையாள ஆணையத்துக்கு அளித்து வருகிறது. ஆதார் அட்டைக்காக பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கும் கருவிகள் இந்த நிறுவனத்தின் மூலமாகவே வாங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் தகவல்களை தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் அதிகாரிகள் மறுத்துள்ளனர். 'பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிப்புக்காக மட்டுமே அந்த நிறுவனத்திடம் இருந்து கருவிகள் வாங்கப்பட்டு வருகிறது. அந்தக் கருவிகள் மூலம் சேகரிக்கப்படும் பயோமெட்ரிக் தகவல்கள் ஆதார் சர்வர்களில் மட்டுமே சேமிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.