மொழிக்கலப்பும் , மொழித்திரிபும் சுருக்கமாக ஒரு சிறியதேடல்! (ஆக்கம் லிங்கராஜா திகரன்)

நாம் வாழும் இவ்வுலகில் உணர்வுகளை பரிமாறவும் , செயல்களை நெறிப்படுத்தவும், தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், மிகமுக்கயமான பாலமாக இருப்பது வாய்மொழிகளே பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படும் இந்தவுலகில் எத்தனையோ மொழிகள் தனக்கான தனிச்சிறப்பை கொண்டிருந்தாலும், அம்மொழிகளிலும் சில பிறமொழியின் ஊடுருவலும் , ஆதிக்கமும் இருப்பதென்னமோ கசப்பானதொரு , உண்மை மட்டுமல்லாது மொழியின் வேர்ச்சொல்லிலும் திரிபுநிலையிருப்பதை காணக்கூடியதாகவுள்ளது...

ஈழத்தின் ஒருபகுதியான கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பெனும் பகுதியை அனைவரும்   அறிந்திருப்பீர்கள் மட்டக்களப்பிற்கு பலபெயர்கள் உண்டு புளியந்தீவு , மாந்தீவு ,போன்ற பழைய பெயர்களும் மட்டுநகர், மீன்பாடும் தேன்நாடு போன்ற சிறப்பு பெயர்களும் ஆங்கிலேயர் நிர்வாகத்திற்கு உட்பட்ட காலத்தில்  batticaloa எனும் பெயரையும் பெற்றுள்ளது.

இப்பகுதியில் வாழும் தமிழ் மக்களின் தாய்மொழியான  தமிழ் மிகத்தொன்மையானதாக திகழ்ந்து வரும்   அதேவேளை பிறநாட்டாருடைய, படையெடுப்பினாலும் , வியாபார வருகையினாலும்  சொந்தமண்ணிலே மொழிச்சிதைவு ஏற்பட்டுள்ளதை தெளிவாக காணலாம்.

எத்தனையொ சொற்கள் பிறமொழியிலிருந்தும், எத்தனையோ சொற்கள் பிறமொழிமக்களால் நமது தமிழை பேசமுனைந்து ஒவ்வொரு சொற்களும் திரிபடைந்து ஏதோ ஒரு புதுச்சொல்லாக வடிவுற்றிருப்பதை அவதானிக்கலாம். .. 
காரணம் முன்னெழுத்தையோ,                நடு எழுத்தையோ,  அல்லது இறுதி எழுத்துகளையோ சரியாக உள்வாங்காது தவறான உச்சரிப்புக்களை கொண்டு தமிழை அவர்கள் கற்க முனைந்தபோதே அதிகபடியான தமிழ் வார்த்தைகள் சிதைந்து அதன் அழகையிழந்து ஏதோ புதுமொழிபோல் உணரப்படுகிறது ஆனால்   அதுவே நம்தமிழர்களால் 
இதுவும் தமிழென்று பேசப்பட்டுவருவதே மிகுந்த வேதனை அளிக்கிறது 

சில வார்த்தைகள் மரபுவழிரீதியாக மாற்றங்களின்றி பேசப்பட்டு வருகின்றது 
சில சொற்கள் காரணப்பெயரால் உருப்பெற்று தகுந்த தமிழ் வார்த்தைகளாக இன்றும் மக்களிடையே பேசப்பட்டுவருவது சிறப்பாகும்.
சில உயிரினங்களினதும், உபயோகப்படுத்தும் பொருட்களினதும், உணவுகளின் பெயர்களும், பகுதிகளுக்கு பகுதி, மாவட்டத்திற்கு மாவட்டம், நாட்டுக்கு நாடு மாறுபட்டுள்ளது
என்பதையும் தெளிவாக காணலாம். அதிலும் ஓர்சில வார்த்தைகள் எந்தமொழியின் பின்னணியை சார்ந்ததென்பதையறிய மேலும் பல ஆய்வுகளை தரவாக மேற்கொள்ளவேண்டியுள்ளது .

இப்பதிவின் வாயிலாக கூறமுனைவது என்னவென்றால் சிதைந்தபோன வளமான தமிழ்சொற்களை மீண்டும் மீட்டெடுப்போம் ,தமிழுக்கு புத்துயிர் பெற்றுத்தருவோம் என்பதாகும் ....

இனி மட்டக்களப்பில் பேசப்படும் தமிழுக்கு ஒவ்வாத வார்த்தைகளையும், மரபுவழிரீதியாக பேசப்படும் சில வார்த்தைகளையும், மேலும் சில காரணப்பெயர்களையும் காண்போம்.

பிறநாட்டார் அதாவது ஒல்லாந்தர், ஆங்கிலேயர், டச்சுக்காரர்  படையெடுப்பின்போது அவர்கள் சார்ந்த மொழியின் சில சொற்களானது எம் தமிழோடு நீண்டகாலமாக ஒட்டியபடி பெச்சுவழக்கில் உரையாடப்படுவதை காணலாம்.
கக்கூசு, குசுனி , சாக்கு, கதிரை, அலவாங்கு , வாங்கு, மேசை, கதிரை, கோணியல் , கரண்டி, கத்தரிக்கோல் , ஜன்னல், றாக்கை , லாட்சு , நொத்தாசு
பாண், ரோதை , கந்தோர் , தாச்சி , வங்குறோத் , பீங்கான், விசுக்கொத், போத்தல் ,அலமாரி, பீப்பாய் சன்னல், லாம்பு , தவறணை , கோப்பை , அன்னாசி, கடுதாசி, துவாய் , சப்பாத்து
விண்ணன்  போன்ற வார்த்தைகள் இன்றளவும் பயன்பட்டிலிருபதை மறுக்க முடியாது 
இதுபோலவே  றவ்வா , லவ்வா , நங்கணம் போன்ற வார்த்தைகளும்
பயன்பாட்டில் உள்ளது 

மேலும் மண்சார்ந்த சில சொற்கள்.
அத்தாப்பெத்தி, ஒள்ளுப்பலம், கனக்கயா, விடாய், கணகாட்டு, சொத்தை , வட்டை , செவிட்டை, அரிக்குமேலை, சுண்டுக்கொத்து, தெப்பிராட்டியம், தெத்துபிரட்டு, வாருகக்கட்டு , அழப்பு , துரட்டி , நாம்பன் , நாகு, உப்பட்டி , சவுப்பு , 
கச்சான் , படாச் ,  துதல் , சோவி , வோளை
,உக்குளான் , மரவட்டை , வார், தாக்கத்தி , வேலைகாரன்கம்பு, நட்டுவாக்காலி , கிறுகிறுப்பு, கிறுக்கு, வட்டக்காவடி , வீரவாள், பன், படலை, சுழகு , முகாம , போடி போடியார் , வாடி , சிறாம்பி , மையோரி , திரவு, பூவல் , தும்புத்தடி , வெட்டுக்கூட்டம் , விதானை ,  சுண்டல், கடையல் , ஒழுங்கை ,மடு, வெடுக்கு , படங்கு , கெற்ரபுல்  , மாசலம் , குக்குறுப்பான் ,  முசுப்பாத்தி , நொட்டாத , குரக்கன், பொருக்கு , பொதுக்கு, ஓசரி , அரியண்டம் , கரைச்சல் , உளலை கம்பு , தூத்தி , பேணி ,பயளை , பம்மாத்து , மாச்சல் , விரட்டி, கோவா , கரைச்சல் , கழிசடை, கழிசறை ,மசுக்குட்டான் பழம்,  சூடு, களவட்டி , உல்லு , அசவு , ஓருமை, அசுப்பு , கக்குசம் , எழுவான்கரை , படுவான்கரை கடப்பு, பரிசாரி ,சள்ளு,நாசமறுப்பு பறவாதி, பிசினி , மூசாப்பு , ஏலா , இலக்கோவ் ,ஒசில் , லெக்கன் ,
குசக்க மசக்க  விசுக்கு , ததிமிதி , விறுதா, வக்கணம் , கரப்பு , அத்தாங்கு , போன்ற சொற்கள் மட்டக்கப்பு மண்ணில் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.

"அத்தாப்பெத்தி" என்ற வார்த்தையை  தெளிவாக ஆராய்ந்து பார்த்தால்,

அத்தாப்பெத்தி 
அதை பத்திரமாக வை, அல்லது அதை பொத்திவை,என்ற  பொருளை வெளிப்படுத்தகூடிய இச்சொற்களானது காலப்போக்கில் அதை பத்திரமாக வை  இதில் ரகமாக என்ற இறுதி எழுத்துகளை இழந்து பத்தி பெத்தியாகவும், அதை என்ற சொல்  அத்தா வாக மாறியும் அத்தா , பத்தி  இதனோடு ப், பெ போன்ற எழுத்துகளின் உள்வாங்கலினாலும் அத்தாப்பெத்தி என்ற சொல் வடிவம் திரிபு  பெற்றிருக்கிறதற்கான வாய்பும் அதுபோலவே அதை பொத்தி வை என்ற வசனம் சுருங்கிய நிலையினாலும் அத்தாப்பெத்தி என்று ஒற்றை வார்த்தை ஒரு வட்டார வழக்குச்சொல்லாக உருப்பெற்றிருக்கலாம் என்பது நிருபணமாகின்றது...

அதுபோலவே "ஒள்ளுப்பலம்" என்ற வார்த்தையை ஆராய்ந்தால் கொஞ்சம் , சிறிதளவு போன்ற பொருளை ஒத்தகருத்தாக கூறுகிறது...

"ஒள்ளுப்பலம்"
உள்ளதை பலருக்கும்  பங்கிடுக,
அல்லது உள்ளம் அளவிற்கு பலருக்கும் பங்கிடுங்கள்,அல்லது உள்ளம் பலம் பெறவேண்டுமானால் சிறிதளவேனும்  உண்ணுங்கள்,என்ற சொல்லாடலே ஒள்ளுப்பலம் என்றதொரு வட்டார வழக்கு சொல்லை விளைவித்திருக்கக்கூடும் என்பது எனது கருத்து.

'சுண்டுக்கொத்து' என்பது அரிசி அளக்குமொரு சிறிய பாத்திரமாகும். நான்கு சுண்டு அளந்தால் அதை ஒருகொத்து என்றும் ,இருபத்திநான்கு சுண்டு அளந்தாலதை ஒரு மரைக்கால் என்றும் அளவுகொள்ளப்படும். அதுபோலவே, மரைகால் என்பது நெல், அரிசி, பிற தானியங்களை அளக்குமொரு அண்ணளவாபாத்திரம் இது பிரம்பினால் செய்யப்பட்டது மிகவும் கனமாகவும் பலமாகவுமிருக்கும். வருடங்களுக்கு ஒரு முறை சாணம் பூசி வெயிலிலிட்டு பலமேற்றுவார்கள் நீண்டபாவனைக்காக...
ஒரு மரைக்காலில் இருபத்திநான்கு சுண்டளவு இருப்பது போலவே,
பன்னிரண்டு மரைக்கால் அளந்தால்  ஒரு மூடை என்ற அளவுநிலை கொள்ளப்டுகிறது. அதுவே முப்பது மரைக்கால் அளந்தால் அதை ஓர் அவணம் என்று அளவு கொள்ளப்படுகிறது...

"பேணி" என்பது இறுக்கமான மூடியுடைய சிறிய பாத்திரமாகும்.இவை பால்,  பால்மா , மேலு‌ம் சில பொருட்களை அடைத்து அங்காடிகளில் விற்பனையாகிவருகின்றது. அன்றாட தேவைகளுக்காக அங்காடியில் பெற்றதும்  அதையே வீசாது பின்னர்  வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்துகிறார்கள். இவற்றினுள் பொருட்களை அடைத்து பேணிப்பாதுகாப்பதால் அதன் பெயர் "பேணி" என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

'கணகாட்டு'
தொல்லை செய்பவர்களை,அடம்பிடித்து அழும் குழந்தைகளை பார்த்து கணகாட்டு படுத்தாதேயென்று கூறுவதாகும்.
கனம் காட்டாதே என்பதுதே நாளடைவில் கணகாட்டாக மருவியுள்ளது 

'விடாய்' என்பது தண்ணீர்  தாகமாகும் மட்டுமல்லாது இச்சொல்லானது மேலு‌ம் பல பொருளை உணர்த்தும் .

'அல்லுச்சொல்' என்பது வம்பு தும்பிற்கு போகாமலிருப்பவர்களை கூறுவதாகும்
இங்கு அல் என்பது துன்பமெனும் பொருளை கூறுகிறது.

"கனக்கயா" , "கொள்ளையா" 
போன்ற வார்த்தைகள்
'அதிகமாக உள்ளது, நிறையவே உள்ளது' என்பதை குறிக்கிறது..

"சொத்தை" என்பது
'கன்னத்தையும்' 
"சொத்தி" என்பது 'ஊனமுற்றவர்களையும்' கூறுவது வழக்கமாகும்.  அதேவேளை, 
சண்டைகள் மூண்டால் கோபத்தில் பேசப்படும் வார்த்தைகளிவை சொத்தை கிழியும், சொத்தை வெடிக்கும், சொத்தையை பெயர்ப்பேனென்றும் சபதமெடுப்பார்கள்.

"செவிட்டை" என்பது 'காதுகளை' குறிக்கும்.

"அரிக்குமேலை" என்பது
அரிசிலுள்ள கல் மண்ணை பிரிக்க உதவும் உபகரணம்.

"வாருவகட்டு" என்பது
விளக்குமாறு இதை ஈக்கில்கட்டு என்றும் அழைக்கப்படுகிறது..

"தும்புத்தடி" அல்லது "தும்புகட்டு" 
வீட்டு அறைகளை கூட்டி சுத்தம்செய்யும் துடைப்பம் கட்டாகும். இது தேங்காய் மட்டை தும்பினால் செய்யப்படுகிறது.

"துரட்டிக்கம்பு" என்பது கொழுக்கம்பாகும். இதையே யாழ்நகரில் "கொக்கத்தடி" என்று அழைக்கின்றார்கள். இவ்மூன்று பெயரும் காரணப்பெயர்களை கொண்டுள்ளது ...

"தூரத்திற்கு எட்டும் கம்பு"
துரட்டிக்கம்பு
"கொழுவி இழுக்கும் கொழுக்கியமைப்பு இருப்பதால்"
கொழுக்கம்பு
"கொக்கின் கழுத்துப்போல் வளைவு இருப்பதால்" கொக்கத்தடி என்று காரணப்பெயர்களை பெற்றுள்ளது.

"நாம்பன்"  என்பது 'இளங்காளை மாட்டையும்' 
"நாகு"  என்பது 'இளம் பசுமாட்டையும்' குறிக்கும்.

"கச்சான்'' என்பது
நிலக்கடலை, வேர்க்கடலையாகும்

''துதல்"என்பது 
நன்கு முற்றி தேங்காயின் பால் , அரிசிமா , சர்க்கரை, சிறிதளவு ஏலம், நிலக்கடலை, தேவைப்பட்டால் மேலு‌ம் சில பொருட்களை சேர்த்து நான்கு அல்லது  ஐந்து மணிநேரம் இறுகக்காச்சி பதப்படுத்தும் இனிப்புச்சுவை நிறைந்த ஒரு பதார்த்தம்.
இது அதிகமாக திருமண நிகழ்வுகளை, பிறந்தநாள் கொண்டாட்டங்களை, சமைந்தபெண் சடங்கு காலங்களில் அதிகமாக செய்யப்படுகிறது
துதல் செய்வதென்றால் குறைந்தது பக்கத்து மூன்று வீட்டாரின் பங்களிப்பு இருக்கும்.

'அசில், ஒசில்' இரண்டு சொற்களுமே ஒன்றுதான் கொஞ்சம் அழகு குறைந்தவர்களை பார்த்து அசில் ஒசிலென்று கூறுவது வழக்கம் அதே நேரத்தில் கோபப்பட்டாலோ, அல்லது சண்டை மூண்டாலோ அழகானவர்களையும் ஒசிலைப்பாரு, அசிலைப்பாரு என்று திட்டுவதை காணமுடியும். அதுபோலவே ஒரு வடிவத்தையொட்டி மற்றுமோர் வடிவமிருப்பின் அதை அசல் என்றும் அசப்பிலென்றும் மட்டுமல்லாது  போலி நிலையை உறுதிப்படுத்துவதுமாக இவ்வார்த்தை தமிழர்கள் பயன்பாட்டிலுள்ளது  இச்சொல்லானது தமிழாகயிருக்க  வாய்ப்பில்லை  வடமொழிச்சொல்லாகத்தான் இருக்கமுடியுமென்பதில் ஐயமில்லை! இதையே ஆங்கிலத்தில் 
(சேப்) "shape"என்று  அழைக்கின்றார்கள். இங்கு 
அ (சேப்) பில் "அசப்பில்" என்ற திரிபுச்சொல்லினுள் "சேப் " மறைந்திருப்பதை காணமுடியும். அந்தவகையில், 
"அசல்" என்பதே ஒசிலாகவும் ,அசிலாகவும் திரிபடைந்து மக்களிடையே பேசப்பட்டுவருகிறது

"வோளை" என்பது
வோண்டா , போண்டாவென்றும் பிறவிடங்களில் அழைக்கப்படுகின்றது.
பந்து போன்று சமவுருண்டையாக இருப்பதால் ball (வ்வால் )என்று வெள்ளையர்கள் அழைத்து அதையே இங்கு மக்கள் வோள்,வோளை என்று அழைக்க முற்பட்டிருக்கிறார்கள்.

"படாச்" என்பது,
'வினாடியில் வேகமாக  செய்து முடி' என்ற பொருளை குறிக்கின்றது.
படார்ப்படார், படாரென்று , படாக்படாக்கென்று, பட்டுப்பட்டென்று இப்படிப்பட்ட வார்த்தைகளின் திரிபாகவே படாச் என்று சொல் உருவாகியுள்ளது.
மலையாளிகளிடத்தில் இன்றுவரையும் பேச்சிலுள்ளது
பட்டென தீர்க்கணும், கேட்டோ , 
ஞான் பட்டென்று வராம் போன்ற வார்த்தை பிரயோகங்கள்.

'உக்கிளான்'
முயலை போன்று உருவமைபில் சற்று பெரிதான ஒரு விலங்கு 

"உல்லு"
கூரான கம்பாகும் மாடுகளை கயிற்றில் கட்டி வளையப்போடுவது கூரான கம்பை புல் நிறைந்த நிலப்பகுதியில் ஏற்றி அதில் பாதுகாப்பாக கட்டிவிடுவது மாடனது ஒரு வட்டவடிவத்தினுள் நின்று மேய்ந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
அதுபோலவே வீட்டு நிலையம் எடுப்பதற்கும்  
மேலு‌ம் பிற சூழ்நிலை கருதி உல்லு பயன்படுத்தப்படுகிறது.

"முண்டியக்கம்பு"
பெரிய மரத்துண்டுகளை நகர்த்த உதவும் பலம்வாய்ந்த கம்பாகும்.
முண்டாதே , முண்டிப்பாரேன், 
முண்டினால் தாக்கம் உறுதியாகும்

"தாக்கத்தி"
கதிரறுப்பதற்காக பயன்படுத்தப்படும். வளைந்த வடிவத்தில்  மிகக்கூர்மையான கத்தி இதில் மிகமயிரிழை போன்ற பல்லமைப்பு இருப்பதை காணமுடியும்.

"குரக்கன்" என்பது கேழ்வரகாகும் 
மாட்டுப்பால் அல்லது தேங்காய்ப்பால் கலந்து இனிப்பு சேர்த்து  கூழ் காய்ச்சி சாப்பிடுவது மட்டக்களப்பு மக்களின் வழக்கமாகவுள்ளது. இக்கேழ்வரகையே தமிழகத்து மக்கள்  களி செய்து அதனுடன்  ஊறுகாய், அல்லது சட்னி சேர்த்து  சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுளார்கள்.

"லெக்கன்" எனும் சொல்லை ஆராய்ந்தால், குருட்டுத்தனமாக, முட்டாள்தனமாக நடந்துகொண்டு எதிர்பாராத விதமாக வெற்றிகாண்பவர்களை லெக்கன் என்று அழைக்கிறார்கள்.  இவ்வார்த்தை ஆங்கிலத்தில்  உள்ள
luck man (லக்மேன்) எனும் சொல்லின் திரிபு நிலையாக கருதுகிறேன்.மற்றுமொரு ஐயத்தை தோற்றுவிக்கிறது. இலக்கு இல்லாதவன் எனும் சொற்களின் சுருங்கல் நிலை லெக்கன் என்றும் திரிபு பெற்றிருக்கலாமென எண்ணத்தோன்றுகின்றது.

"லெக்கோவ்" முதிர்ந்த பெண்களை பார்த்து சில கிராமங்களில் அழைக்கப்படுகின்ற ஒரு வார்த்தையிது.
தமிழகத்தில் பேசப்படும் "எல" அதவாது இங்கு பாரெல, வா எல, போ எல, என்ற வார்த்தை ஈழத்தில் எல அக்கா என்றழைக்கப்பட்டு எலக்காவாக திரிபடைந்து லெக்கோவ் என, பேசப்பட்டிருக்கலாம் அல்லது ஒரு வேலை சொல்லும்போது அதற்கு மறுத்து எனக்கு  இயலாது கா என்பது மருவி இலக்கோவ் என்ற வார்த்தை உருவாகியிருக்கலாம்.
இன்றும் சில இடங்களில் வயதான பெண்களை வாகா, போகா , இருகா , சாப்பிடுகா என்று கா போட்டு அழைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளதை பார்க்கமுடியும்.

"தெத்துப்பிரட்டு" என்ற சொல், 
'பிழையான செயலை செய்துவிட்டு அதை சரியென்று விவாதிப்பவர்களை' குறிப்பதாகும்.
இச்சொல்லில் "தெற்று" என்ற வார்த்தை  மலையாளத்தில் பேசப்படுகின்றது. அதாவது தெற்றென்றால், பிழையென்றே அவர்களும் பொருள் கொள்கின்றார்கள்.

"தெப்பிராட்டியம்" எனும் சொல்லும் அதுபோலவே 
எதையும் சரியென்றே தன்னை முன்னிறுத்த முனைவர்களை , 
யார் புத்திமதியையும் கேளாது தனித்து செயல்படுவர்களையும் 
உதாரணமாக ஒரு சத்தான உணவை குழந்தைக்கோ சிறுவர்களுக்கோ கொடுக்கும் போது அதை அவர்கள் மறுப்பின் அவர்களின் தெப்பிராட்டியத்தை பாரு என்று கோபித்து கொள்வதாகும்.
தப்பு  பிரட்டி என்பதே தப்பைப்பிரட்டி  தெப்பிராட்டியம் என்றாகிவிட்டது..

"வட்டை"
வயல் நிலத்தை வட்டை என்பார்கள் வெட்டை வெளியாக இருக்கும் நிலப்பகுதிதான் வட்டை என்று திரிபு ஆகியிருக்கிறது .

"சிறாம்பி"
வயலில் விதைப்பு ஆரம்பமாகிவிட்டால் அங்கு தங்கியிருந்து பயிர்களை பாதுகாக்க அமைக்கப்படும் சிறு குடிசையே சிறாம்பி. ஒருவர் மாத்திரமே உறங்க முடியும், இருவர் அல்லது மூவர் அமரமுடியும் ...

"வாடி" என்பது
பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்யவர்கள் அந்த நிலப்பரப்பின் நடுப்பகுதியில்  ஆறு , ஏழு விவசாயிகள் தங்கி விதைப்பு தொடங்கி அறுவடை முடியும் வரை சகல வசதிகளோடும் அமைக்கப்படும் பெரும் ஓலைக்குடிசையே வாடி ஆகும். இச்சொல் எந்த மொழி சார்ந்ததாக இருக்கும் என்பது தெரியவில்லை .

"போடியார்" 
முதலாளிகளுக்கு அடுத்த படியாக இருப்பவர்களை போடிமார்கள் , சுருக்கமாக  போடி என்றழைக்கப்படுகிறது
இங்கு பொடி என்றால் தூசி, மாவு, சிறிது, என்று பொருள் கொள்ளலாம் அந்தவகையில்,
சிறிய மீன்களை பொடிசு என்றும் ,
இளைய வயதுள்ள ஆண் பெண்களை பொடியன் , பொடிச்சி என்றழைப்பது வழக்கமாகிவிட்டது.

"உப்பட்டி" என்பது ,
விளைந்த நெற்கதிகளை அறுத்து சிறு சிறு குவியலாக இட்டுவைப்பதாகும். அதுவோ இரண்டு மூன்று நாட்களுக்கு நன்கு காய்ந்து பின்னர் உப்பட்டிக்கயிறால் பெரும் கட்டாக கட்டி சூடுவைக்கும் இடத்திற்கு சுமந்துகொண்டு குவிக்கப்படும்.
ஒப்பு அட்டியாக என்பதுதான் உப்பட்டியாக திரிபடைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

"சோவி" என்பது 
ஒரு இனிப்புப்பண்டமாகும். அரிசி மா, சர்க்கரை பாகு, தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்படுகிறது.

"அழப்பு" என்பது 'குழப்பு' என்ற பொருளை உணர்த்தக்கூடியதாகும்.

'மெலுக்கு , மலுக்கா' என்பது மலிவாக,
ஓ நல்ல இலாபம்தானே, உங்கள்பாடு பரவாயில்லை போன்ற பொருளினை உணர்த்துகின்றது.
மலிவு எனும் சொல்லானததின் திரிபே மெலுக்காகும்

"சூடு" என்பது 'வெப்பத்தை' குறிக்கும். மட்டுமல்லாது, மட்டக்களப்பு மக்களால் சூடு மேலும் மற்றொரு பொருளை உணர்த்துகிறது. அதாவது அறுப்பு செய்த கதிர்களை வெயிலில் காயவிட்டு மேட்டுப்பகுதியிலோ அல்லது ஏதுவான இடத்திலோ கதிர்களை குவித்து வைப்பதையே "சூடு" என்பார்கள். அதுபோலவே குவித்த பிற்பாடு ஒரு வாரத்தின் பின்னர் குவித்த சூட்டைப்பிரித்து கதிரடித்தல்( சூடடித்தல்) செய்வார்கள். அப்போது ஒவ்வொரு கதிர்களும் சரியான சூட்டுநிலையில் இருப்பதை உணரமுடியும். ஏன் ஆவியுயிர்ப்பு நிகழ்வதையும் கண்கூடாக பார்க்கலாம் ...
அப்பொழுதான் 
வேலைக்காரன் கம்பு தேவைப்படுகின்றது. இக்கம்பானது, நிமிர்ந்து நின்று வேலைபார்க்க மிகவும் நெற்கதிர்களை எளிதாக சூட்டிலிருந்து பிரிக்கவும், நெல் வேறாக வைக்கோல் வேறாக பிரிக்கவும் மிக முக்கியமான பொருளாக உதவுகிறது...

"கழவட்டி"
'கதிரிலிருந்து நெற்களை பிரித்தெடுக்கும் சூழ்நிலை காட்சியே' கழவட்டியாகும். அதன் பின்னரும், வைக்கோல் நிரம்பிய அவ்விடத்தை "கழவட்டி" என்றே அழைப்பது வழக்கம். 

"மசிக்குட்டான் பழம்" 
"மசிக்குட்டி பழம்" என்றும் அழைக்கப்படுகிறது. மயிர்கொட்டி புழுக்களைப்போல் வடிவமுடையது இப்பழங்கள்.
மயிர் கொட்டியென்பது நாளடைவில் மசிர்கொட்டி பின்னர் மசிக்குட்டி மசக்குட்டான் என மருவியிருப்பதை காணமுடியும்.   இவ்வகை பழங்கள் விற்பனையில் கிடையாது யாரும்  இம்மரத்தை விரும்பி நடுவதில்லை பறவைகளின் செயலால் மக்கள் வாழும் பகுதிகளில் முளைத்து பயன் தருகிறது. பச்சைக்காய்கள் முற்றும்போது சிவப்பாகவும், கனியும் போது கறுப்பாகவும் நிறம்மாறிவிடும். இப்பழங்களை சிறார்கள் மட்டுமே விரும்பி பறித்து சாப்பிடுவார்கள். 

"குருவிச்சம் பழம்" 
'கொடியில் காய்க்கக்கூடிய ஒரு சிறிய பழவகை' அதிகமாக கிடைக்காது, ஆனாலும் மிகவும் இனிப்பானது.

"மையோரிக்கிழங்கு"
மரவள்ளிக்கிழங்கை இப்படி அழைக்கின்றார்கள். சிங்கள மக்களும் இதையே 'மையோரிக்கா' என்று அழைக்கின்றார்கள்.

"நாடங்காய்" 
எல்லோராலும் உணவிற்காக பயன்படுத்தப்படும் இக்காயானது
வேலியிலும், பந்தலிலுமே படர்ந்து காய்க்கக்கூடிய கொடிவகையானது ஈழத்தமிழர்கள் "நாடங்காய்" என்றழைக்கின்றார்கள். 
பிற நாடுகளில் வாழும் தமிழர்கள்  நாடங்காயை  வேறுபெயரால் "சுரக்காய்" என்று அழைத்து வருகின்றனர். மலையாளிகளோ இதை "செரக்காய்" என்று அழைத்து வருகிறார்கள். இதில் எது சரி தவறு என்பதை தமிழறிஞர்கள் பழம்பெரும் நூல்களை ஆதாரமாகக் கொண்டே நிரூபிக்க வேண்டும். 

சுரக்காய், பூசனிக்காய், வத்தவக்காய், இராசவள்ளி,மோதகவள்ளி உலக்கவள்ளி, சிறுகிழங்கு , கர்ணக்கிழங்கு , 
வத்தாளைக்கிழங்கு
இப்படி பலைவகைக்கிழங்குகள் உண்டு. 

சுரக்காய் , பூசணிக்காய் எல்லோருக்கும் தெரியும். 
"சுரக்காய்" நிலத்தில் படர்ந்து பெரிதாக காய்க்கக்கூடிய காய். ஆங்கிலத்தில் "pumpkin" என்றழைக்கப்படுகின்றது. இதையே யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும்,தமிழகத்து மக்களும், "பூசணிக்காய்" என்றழைத்து வருகின்றார்கள். 
மலையாளிகளோ இதையே "மத்தங்காய்" என்றழைத்து வருகின்றார்கள்.

'பூசணிக்காய்' என்பது,
பந்தலில் வேலிகளில் படர்ந்துகாய்கும். சாம்பல் நிறத்தையுடையது. இக்காய்தனை பெரும்பாலும் அதிகமாக வீட்டின் மேல் மூலையில் கட்டிவைப்பார்கள் அதில் பல விஞ்ஞான பூர்வமான விளக்கமுண்டு. அடுத்து செய்வினை, சூனியம் செய்யும் மந்திரவாதிகள் இப்பூசணிக்காய்தனை பயன்படுத்துவார்கள் இதை மட்டகளப்பு மக்கள் உணவிற்காக பயன்படுத்துவதில்லை.   
ஒருசில பொருள்களின் பெயர்கள் இடத்திற்கிடம்,  சூழலுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கின்றது..

இதுபோன்று 
பலமரங்களின் பெயர்களும் , மீன்வகைகளின் பெயர்களும் , இலைக்கீரை வகைகளின் பெயர்களும், மேலு‌ம் சில பாவனைப்பொருள்களின் பெயர்களும், இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளது என்பது மறுக்க முடியாதஉண்மையாகும்.

"மீன்வகை"
சல்லல் , செப்பலி , செல்வன் பனையான் , சுங்கான் , மசறி , கொக்குச்சான் , குறட்டை, பொட்டியான் , முண்டான் (வெள்ளியாப்பொடி) துள்வண்டன் (மீசைக்காரன்)அதக்கை , கிழக்கன் மணலை (மண்ணா)ஒட்டி, ஓரா கணையான், பால்பரவை , இவை ஆறு, குளங்களில் கிடைக்கக்கூடியவை. 

"இலைக்கீரை வகைகள்"
குமுட்டி,  மான்பாஞ்சான் (மாம்பாஞ்சான்)
குறிஞ்சா, காரயிலை , மொசுமொசுக்க , கானாந்தி,திராய், குப்பைக்கீரை, குப்பைமேனி, (முடக்கத்தான்)ஆனைத்தகரை ,

"வார்" என்பது ஒரு விளையாட்டு.
இரண்டு அணியாக பிரிந்து, 
இரண்டு எல்லைகளை தீர்மானித்து ஒருவரை ஒருவர் ஓடித்தொடுதலாகும். 

"தூத்தி" 
கண்ணாமூச்சி விளையாட்டை இப்படியும் அழைப்பார்கள்.

"வட்டக்காவடி" 
கபடி ஆட்டத்தையே இங்கு வட்டத்தை கீறி அதே விதிமுறைகளோடு விளையாடப்படுகின்றது. 
"காபடியாட்டம்" என்பது தமிழர்களின் பாரம்பரிய  ஆட்டக்கலைகளில் ஒன்று. அதுவே "கபடியாட்டமாக" இன்று மாறியிருக்கின்றது...

'நட்டுவாக்காலி'  - கருந்தேள்.
'கிறுக்கு' -  சுழட்டு 
'கிறுகிறுப்பு' - தலைச்சுற்று
'சுழகு' - முறம் 
'பன்' - பாய் செய்ய பயன்படும் ஒரு வகை புல்.

'முகாம' கதிரறுப்பு கூட்டத்தின் தலைவர்.
'எழுவான்கரை - கிழக்கு 
'படுவான்கரை'- மேற்கு
'படலை' - கதவு இல்லாத வாசலை மூடும் தற்காலிக மறைப்பு. 
'வீரவாள்' மரங்களை துண்டாடும் ஆறடி நீளமான பெரிய வாள். இரண்டுபேரின் உதவியோடுதான் பயனுபடுத்தமுடியும்.

'திரவு' - ஆழமான பெருங்குழி இதற்கு படியமைப்பு போன்று சரிவாக வெட்டப்பட்டிருக்கும் நாம் கிழே இறங்கி குடங்களில் நீரை நிரப்பி பயிர்களுக்கு தெளிக்க முடியும் குடிநீருக்காக பயன்படுத்துவதில்லை.

'பூவல்' - சிறுகுழியாகும்
நீருள்ள கரையோரங்களில் கைகளால் தோண்டி  அதில் ஊறும் நீர் தெளியும்வரை காத்திருந்து குடிக்க பயன்படுத்துவார்கள். அதிகம் விவசாயிகள் , விறகுவெட்டிகள் இம்முறையை கையாழ்வது வழக்கம்.

'விதானை' - கிராம அலுவலர் 
வெட்டுக்கூட்டம் - கதிர் அறுப்பவர்களை அழைப்பது.
ஒழுங்கை - பெரிய வீதிகளிலிருந்து  பிரியும் சிறு வழிகள்.

'மடு' - குழி 

'கடையல்' -குறைந்த  செலவு  சமைப்பதற்கு அதிகநேரம் தேவைப்படாது, மிகவும் சுவையான ஒரு சமையல் இதற்கு கொஞ்சம் தேங்காய் பூ , பச்சைமிளகாய், உப்பு, புளி போதுமானது.  பிஞ்சுக்கத்தரிக்காய் அல்லது சுரக்காய் , பயற்ங்காய் , சுரக்கொளுந்து போன்றவற்றை கடைந்து சாப்பிடலாம்.

'படங்கு' - பெரிய தரைவிரிப்பு
இடங்களை பரந்து பிடிக்கக்கூடிய விரிப்பு என்பதால், 
"படர்ந்து" இங்கு இடங்கள் சுருங்கி "படங்கு" என்று திரிபாகியுள்ளது.

'கெற்ரப்புல்' -  கூழாங்கற்களை வைத்து பறவைகளை தாக்கும் சிறு  உபகரணம்.
கெப்பு + பொல் = கெப்புப்பொல் 
நாளடைவில் கெற்ரப்புல்லாக மாறியிருக்கின்றது..
கெப்பு என்றால் Y இவ்வாங்கில வடிவத்தினாலான கம்புகளை மட்டக்களப்பில் "கெப்புக்கம்பு" என்றழைப்பது வழக்கம். ஆனால், இதையே கொப்புக்கம்பு என்றும் அழைப்பார்கள். குரங்கு கொப்பிழக்கப்பாயாது என்பது பழமொழி கொப்பை கிளைகள் என்றே பெரும்பாலும் பொருள் கொள்ள முடியும்.

'பொல்'- என்பது சிறு மரக்கட்டைகளை , கம்புத்துண்டுகளை பொல் என அழைத்து வருகின்றனர் மட்டக்களப்பு மக்கள். .

'பறவாதி' - எதற்கும் முந்துபவர்கள். 
பறை+ அவதி = பறவாதி

'மாசலம்' - பிறரை மயக்கும்படி அல்லது நம்பவைக்கும்படி நளினத்தோடு பேசுவது.

'குக்குறுப்பான்' - கிளியின் நிறத்தை, வடிவத்தை ஒத்த சிறிய பறவையாகும்.

'முசுப்பாத்தி' - யாவரும் கூடியிருந்து நகைச்சுவை பேசி மகிழுதல். 
most party என்ற ஆங்கிலச்சொல்லின் திரிபாகவோ,
அல்லது முழுமையான பார்த்தியைப்போன்று வட்டவடிவிலமர்ந்து பேசி மகிழும் காட்சியது "முழுப் பார்த்தி" முசுப்பார்தியாக மருவியிருக்கலாம். என்பது எனது கருத்தாகும்.

'நொட்டாத'- என்னோடு முண்டாதே என்பதாகும்

பொதுக்கு - உணவை வாய் நிறைய அள்ளி வைத்து சாப்பிடும் நிலையை பொதுக்கு என்பார்கள். 

ஓசரி - தொல்லை அதுபோலவே
'அரியண்டமும்' தொல்லை தருபவர்களை குறிக்கிறது, 
அரி அண்டத்தில் எப்படி விளையாட்டு பிள்ளையாக தொல்லைகள் தந்தானோ அதுவே அரியண்டம். 
'கரைச்சல்' அதுவும் தொந்தரவை குறிக்கும் பொருளாகும்

'உளலைக்கம்பு'- வேலி வாசலில் குறுக்கே பாதுகாப்பு கருதி இடப்படும் நீண்ட நேரிய உருளைக்கம்பாகும்.

'பயளை' - உரம்
'கோவா' முட்டைக்கோஸ் என்று 
தமிழகம் சார்ந்த பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் அழைத்து வருகின்றார்கள். 

"பம்மாத்து" - ஆரோக்கியமான நிலையில் இருந்துகொண்டு நோயாளியாக தன்னைக்காட்டி சில வேலைகளை தவிர்ப்பவர்களை பம்மாத்துக்காரர் என்றழைப்பார்கள். 

'மாய்ச்சல்' - சோம்பேரி , அல்லது அலுப்பு 

'விரட்டி' - சோளக்காட்டு பொம்மை

'அசவு'- பாய்களை சுருட்டி வைக்குமிடம் இது இரு கயிற்றாலானது. 

'ஓருமை' - எதற்கும் தைரியமாக  உரிமை கூறும் ஒரு திருட்டுத்தனம். 
அதாவது, கண்டதற்கும் உரிமை கூறுபவர்கள். 
"உரிமை" என்பது "ஓருமையாக" திரிபடைந்துள்ளது.

'அசுப்பு' - சிறிய அளவிலான சத்தங்களை உணரும் நிலை. 

'கக்குசம்' - கவலை, பொறுப்பு போன்ற பொருளை உணர்த்துகிறது...
'எழுவான் கரை' - கிழக்கு 
'படுவான்கரை' - மேற்கு 
'கடப்பு' - வாசல்
'பரிசாரி'- பாம்பு கடித்தவர்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்..
'சல்லு'- எதாவது இல்லாததை பொல்லாததைப்பேசி பிரச்சினை உருவாக்கிவிடுதலை சல்லுப்போடுதல் என்பார்கள். அதாவது, சல்லடையைப்போன்று ஏதாவது தேடிப்பிடித்து குறைகண்டு குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்தல் "சல்லு" என்றாகிவிட்டது .

'நாசமறுப்பு' - சொல்லுக்கடங்காமல் தவறு இழைப்பர்களை நாசமறுப்பானே, நாசமத்தவனே அதுபோலவே ஒரு துயரநிலையை, துன்பநிலையை உணர்த்தும் சொல்லாக நாசமறுப்பு பேசப்பட்டு வருகிறது. 

'பிசினி' - கஞ்சத்தனம்
'மூசாப்பு' - கதிரவன் மறைந்து  கருமேகங்கள்  திரண்ட நிலை.
'வெட்டாப்பு'- மழை ஓய்ந்து வானம் தெளிவு பெறும் நிலை. 

'ஏலா' - முடியாது. 
'விறுதா' - வீண் செலவு, பயனற்றது. 'வக்கணம்' - தவறை மறைத்து பேசுதல் , உதவியதை சொல்லிக்காட்டுதல் , தன்னை உயர்வாக பேசுதல், இப்படி சூழ்நிலைகளை  பொறுத்து பொருள் கொள்ளப்படுகிறது...
"வியாக்கியானம்"எனும் வார்த்தை வக்கணம் என்று திரிபடைந்துள்ளது. ..

"விசுக்கு" - 'ஓங்கியறை' அதையே, 'விலாசுவன்' என்றும் கூறுகின்றார்கள். இதையே இரண்டு முறை "விசுக்கு விசுக்கு" எனப்பேசினால் அது 'வேகத்தை' குறிக்கின்றது. விசுக்குவிசுக்கென்று நட, விசுக்குவிசுக்கென்று வெட்டு போன்ற வேகநிலையை கட்டளையிடும் வார்த்தையாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

"குசக்க மசக்க" - தெளிவின்றி பேசாதே, இடையில் குறுக்கீடு செய்யாதே, என்பதாகும்.
குறுக்கே மறுத்து பேசாதே என்பதுதான்  குறுக்க மறுக்க என்றாகி பின்னர் "குசக்க மசக்க" என்றாகிவிட்டது. 

"கரப்பு"  - பலமான குச்சுக்கம்புகளால் செய்யப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உபகரணம்.

"அத்தாங்கு" -  வளையக்கூடிய ஒற்றைக்கம்பில் வலைகட்டி மீன்பிடிக்கும் தமிழர்களின் ஒரு பாரம்பரிய உபகரணம்.

"ததிமிதி" - பதட்டமான சூழ்நிலை 

"றவ்வா, நங்கணம் , லவ்வா" பிறரை அவமதிப்பு செய்து பேசும் வார்த்தைகளாகும். இச்சொற்களும் இதுபோன்று மேலும் பலசொற்களும் ஏது மொழிக்குடும்பத்தின் பின்னனியை சார்ந்தததென்பதற்கான  ஆதாரங்கள் தேடலிலேயுள்ளது.

தேவையற்று ஒட்டுண்ணியாக பயன்படுத்தும் சொற்பிரயோகங்களை களைந்து தாய் மொழி செழிக்க முடிந்தளவு தமிழ்ச்சொற்களை பேசுவோம், எழுதுவோம்.


லிரி...

No comments

Powered by Blogger.