வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்

(வெல்லாவெளி  நிருபர்)

திருகோணமலை மட்டக்களப்பு எல்லையில் அமைந்துள்ள சின்ன கதிர்காமம் என அழைக்கப்படும் வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த வியாழக்கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 19 நாட்களாக உற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

இம்முறை வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய திருவிழா பிரதேச செயலாளரைத் தலைவராகக் கொண்ட விசேட நிருவாக சபையின் கீழ் நடைபெறுகிறது.

நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வாஸ்து சாந்தி நிகழ்வுகள் நடைபெற்று இன்றைய தினம் கொடியேற்றம் நடைபெற்றதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

திருவிழாக் காலங்களில் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகளை பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைவாக மூதூர் இலங்கைப் போக்குவரத்துச் சபையினரும், வாகரை டிப்போவினரும் இணைந்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

வழமையைவிட இம்முறை அதிகளவான பக்தர்கள் இந்த ஆலயத் திருவிழாவிற்கு வருகை தரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், இடவசதி உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

திருவிழாக் காலங்களில் தினமும் திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து யாத்திரிகர்கள் வருகை தருவது வழங்கம். அந்த வகையில் பெருமளவான பக்தர்கள் இம்முறை வருகை தரலாம் என்றும் எதிர்பாரக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.