ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கடைசி நேர நிபந்தனை! தமிழக அரசியலில் புதிய மாற்றம் நிகழுமா?!!

அணிகள் இணைப்பு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நேரத்தில் முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு இன்றே வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிடுவார்கள் என்றும் கூறப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இருவரும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் இந்தச் சந்திப்புக்குப் பின்னர் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பின்னரே, தலைமைக் கழகத்துக்கு வர முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கடைசி நேர நிபந்தனைகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதேபோல, சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் டி.டி.வி. தினகரன் தரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 16 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர். சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலி ருந்து நீக்கப்பட்டால், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தினகரன் தரப்பு தயாராகிவருவதாகத் தெரிகிறது.

No comments

Powered by Blogger.