நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா..? நாளை முடிவு

கேரளாவில் பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. நடிகை வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். அவர், ஆலுவா சிறையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை அங்கமாலி நீதிமன்றமும் கேரள உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஜாமீன் கேட்டு திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன் தினம், அவரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

நேற்றும் இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்தது. அரசு தரப்பில் நேற்று வழக்கறிஞர் சுரேஷ் வாதாடும்போது, 'நடிகர் திலீப்புக்கும், பல்சர் சுனிலுக்கும் தொடர்பு இல்லாவிட்டால் இரண்டு பேரின் செல்போன்களும் ஒரே செல்போன் டவரில் எப்படி வந்தது. இதனால் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துப் பேசியது உறுதியாகியுள்ளது. திலீப்புக்கு எதிராக அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனின் டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பல்சர் சுனிலையும், நடிகர் திலீப்பையும் ஒன்றாக பார்த்த சாட்சிகளும் உள்ளன' என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் மனு தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது. நாளை திலீப்புக்கு ஜாமீன் கிடைக்குமா என்று தெரிந்துவிடும்.

No comments

Powered by Blogger.