பேட்மிண்டன்: பரபரப்பான இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய சிந்து தோல்வி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் பி. வி. சிந்துவை வென்று ஜப்பான் வீராங்கனை நசோமி ஒக்குஹாரா தங்கப்பதக்கம் பெற்றார்.

கிளாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்பட்டத்தின் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில், இந்தியாவின் பி. வி. சிந்து மற்றும் ஜப்பான் வீராங்கனை ஒக்குஹாரா ஆகியோர் களமிறங்கினர்.

முதல் செட்டில் இரு வீராங்கனைகளுக்கு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் பி.வி. சிந்து எளிதாக முதல் செட்டை வென்றுவிடுவார் என்ற நிலை இருந்தது. ஆனால், கடுமையாக போராடிய ஒக்குஹாரா 21-19 என்று முதல் செட்டை தனது வசமாக்கினார்.

இரண்டாவது செட்டில் இரு வீராங்கனைகளுக்கு சற்றும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். இறுதியில் சிந்து 22 -20 என்று இரண்டாவது செட்டை வென்றார்.
முதல் இரண்டு செட்களை போலவே இறுதி செட்டும் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. ஓரு கட்டத்தில் சிந்து மிகவும் வலுவான நிலையில் இருந்தார். ஆனால், இறுதியில் ஒக்குஹாரா 22 -20 என்று இறுதி செட்டையும், சாம்பியன்ஷிப்பையும் வென்றார். சிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, சனிக்கிழமையன்று நடந்த அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனையான சென் யூஃபையை 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு பி. வி. சிந்து தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் முன்னணி இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனையான நசோமி ஒக்குஹாராவை எதிர்த்து களமிறங்கினார்.

பரபரப்பாக நடந்த இப்போட்டியில், முதல் செட்டை 21-12 என்று சாய்னா வென்ற போதிலும், அடுத்த இரண்டு செட்களில் கடுமையாக போராடி 17-21, 10-21 என்று ஒக்குஹாரா வெற்றிபெற்றார்.

No comments

Powered by Blogger.