தீய செயல்களை எமது சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும்.

(துறையூர் தாஸன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களனைவரும் நூற்றுக்கு நூறு வீதம் எதிர்பார்ப்பது நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர தெரிவித்தார்.

மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப்பொருளில் கடந்த ஒரு மாதமாக களுதாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் நிறைவு விழாவில்,கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம்,களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன்,களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.சனத் நந்தலாலா,பொலிஸ் பிரிவு பொறுப்பாதிகாரி பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,இலங்கையின் திணைக்களங்களில்,பொலிஸ் திணைக்களமே மக்களோடு நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி கூடுதலான பங்களிப்பினை செலுத்த வேண்டிய தேவையுள்ளது.பொதுமக்கள் எம்மை நாடி வரும் முன்பே ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று,அவர்களை நாடி அவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பவர்களாக இருக்க வேண்டும்.பொது மக்களின் சுகாதாரம் கலை கலாசார ஆலய விழுமியங்கள்,கல்வி,விளையாட்டுபோன்றவற்றில் பொலிஸாரும் முழுமையான பங்களிப்பினை செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

களவுகள்,கொள்ளைகள்,வழிப்பறிகள்,மதுப்பாவனை,மது விற்பனைகள் இப்படிப்பட்ட தீய செயல்கள் அனைத்தையும் எமது சமூகத்திலிருந்து ஒழிக்க பொதுமக்களுடன் இணைந்து மேற்க்கொண்டால்தான்,எதிர்காலத்தில் புனிதமான சந்ததியை கட்டியெழுப்ப முடியும்.பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலுள்ள தொடர்பு அதிகரிக்கின்ற போது எதை நாம் சாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இருக்கின்றோமோ, அந்நோக்கம் நிறைவேறும்.

நாம் பொதுவாக செய்கின்ற வேலைகளினால் பிரதிபலன்களை பொதுமக்கள் அனுபவிப்பதுடன் பொது மக்களும் எமது உறவினர்களாக நண்பர்களாக திகழ்ந்து நாட்டை ஆரோக்கியமான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி பிரதேச வாழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் எந்நேரமும் எவ்வேளைகளிலும் என்னை சந்திக்க முடுவதுடன் எனது அலுவலக கதவுகளும் திறந்த வண்ணமே இருக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.