பன்மைத்துவத்தினை உள்வாங்குதலும் தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துதலுமான பயிற்சிப் பட்டறை.

துறையூர் தாஸன்

இலங்கை தேசிய சமாதானப் பேரவை நிகழ்ச்சித் திட்ட அலுவலர் ஏ.நிக்சன் குரூஸின் ஏற்பாட்டிலும் திருமதி ஷாஹிரா இஸ்மாயிலின் இணைப்பாக்கத்திலும் ஒழுங்குசெய்யப்பட்ட சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் தொடர்பாக,உப குழுக்களுக்கான நிலைமாற்று நீதிப் பொறிமுறையியலில், பன்மைத்துவத்தினை உள்வாங்குதலும் தேசிய அடையாளத்தினை வெளிப்படுத்துதலுமான பயிற்சிப் பட்டறை,அம்பாறை ரெரெல் வதிவிடத்தில் இன்று(26) இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறை நிகழ்வில்,அபிவிருத்தி துறை சார் முகாமைத்துவ ஆலோசகரும் பயிற்றுனருமான ஜெ.வெனிடிக்ட் வளவாளராக கலந்து கொண்டு பயிற்சிப் பட்டறையினை நடாத்திச் சென்றார்.

18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தோற்றம் பெற்ற பன்மைத்துவக் கோட்பாடு 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேம்ஸ் வில்லியம்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் பன்மைத்துவ நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினதும் மாறுபட்ட தனித்துவமான விருப்பங்கள் மற்றும் பாரம்பரியங்களை தொடரக்கூடிய நிலையில் பன்மைத்துவம் இருக்க வேண்டுமென இதன் போது கலந்துரையாடினார்.

ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களின் நலனையும் ஊக்குவிக்கும் முறைமையையும் மக்களின் அபிலாசைகள்,நம்பிக்கைகள் மற்றும் அபிவிருத்தியையும் ஒன்று சேர்த்து ஏற்றுக்கொள்ளலுடன் செயற்படுத்தும் சமூக நிலையையும் கொண்டதாக பன்மைத்துவம் இருக்க வேண்டும்.

கலாசார சமய இன மதத்தில் பன்மைத்துவம்,பன்மைத்துவ சவால்கள்,ஊடகவியலாளர்கள் பன்மைத்துவம் சார்ந்து எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள்,சமயங்களுக்கிடையிலான ஒற்றுமை,மக்களுடைய அபிவிருத்தியில் பன்மைத்துவம்,சூழமைவில் பன்மைத்துவ சமூகத்தை பிளவுபடுத்தும் விடயங்கள்,சூழமைவில் தனித்துவத்தைப் பாதுகாத்து பன்மைத்துவ ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான சமூக செயற்பாடுகள் மற்றும் ஆக்கங்களை உருவாக்குவதற்கான ஆற்றலைப் பெறுதல்,பன்மைத்துவ விழுமியங்கள் போன்ற விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட ஊடகவியலாளர்கள்,சமூகத் தலைவர்கள்,உள்ளூர் அரசியல்வாதிகள்,சிவில் சமூகத்தினர்,சமூக நிறுவன தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசணைகளையும் இதன்போது பறிமாறிக் கொண்டனர்.


No comments

Powered by Blogger.