மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மியான்மர் மோதல்: ஆங் சான் சூச்சி "கட்டாயம் தலையிடவேண்டும்"

மியான்மரின் சிறுபான்மை மக்களான ரொஹிஞ்சா முஸ்லிம்களைக் காக்க,அந்நாட்டின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி தவறிவிட்டதாக ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் மியான்மருக்கான சிறப்புப் பிரதிநிதி விமர்சித்துள்ளார்.

ரக்கீன் பகுதியின் நிலைமை "உண்மையில் மோசமாக" இருப்பதாகவும், சூச்சி "தலையிடுவதற்கான" நேரம் இதுவென்றும் ஐ.நா பிரதிநிதி யாங்கீ லீ கூறினார்.

ஐ.நாவின் கணக்குப்படி, மியான்மரை விட்டு வெளியேறி வங்கதேசத்திற்குச் சென்ற ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை 87,000 ஆக உயர்ந்த நிலையில், அவர் இக்கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 2016ல் ரக்கீன் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்.

ரொஹிஞ்சா தீவிரவாதிகள் போலீஸார் மீது நடத்திய தாக்குதல், மியான்மர் ராணுவத்தின் தற்போதைய நடவடிக்கைக்கு வழிவகுத்தது.

நாடற்ற முஸ்லிம் சிறுபான்மை மக்களான ரொஹிஞ்சாக்கள், மியான்மரில் துன்புறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனர்.
ராணுவப் படையினரும், ரக்கீன் புத்தமத கும்பலும் தங்களது கிராமங்களுக்குத் தீ வைப்பதுடன் தங்களை தாக்குவதாக அங்கிருந்து தப்பித்த மக்கள் கூறுகின்றனர்.
மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பல இடங்கள் தீப்பற்றி எரிவதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ரொஹிஞ்சா முஸ்லிம் மக்கள் வசிக்கும் ஒரு கிராமத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதைக் காட்டும் புகைப்படத்தினை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ளது.

பொது மக்களைத் தாக்கும் ரொஹிஞ்சா தீவிரவாதிகளுக்கு எதிராக தாங்கள் போராடி வருவதாக ராணுவம் கூறுகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியின் உண்மை நிலையை அறிவது மிகவும் கடினமாக உள்ளது.

யாங்கீ லீ கூறியது என்ன?
கடந்த அக்டோபருடன் ஒப்பிடும் போது, தற்போது ஏற்பட்ட அழிவுகள் "மிகவும் அதிகமானவை" என ஐ.நா சிறப்பு அதிகாரி யாங்கீ லீ கூறியுள்ளார்.

"இந்த விவகாரத்தில் நாட்டின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி தலையிட வேண்டும். அரசு, தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். எந்த அரசிடம் இருந்தும் நாம் எதிர்பார்ப்பது இதுவே" என அவர் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடி ஏற்பட்டதில் இருந்து, இது குறித்து எதையும் தெரிவிக்காமல் இருக்கும் சூச்சியின் கருத்தைக் கேட்க தான் காத்திருப்பதாக நோபல் பரிசை வென்ற மலாலா யூசஃப்சாய் கூறியுள்ளார்.

"உலகமே காத்திருக்கிறது, ரொஹிஞ்சா முஸ்லிம்களும் காத்திருக்கிறார்கள்" என மலாலா கூறியுள்ளார்.

மியான்மரின் ஜனநாயக ஆட்சிக்கு ஆதவராக போராடிய சூச்சி, பல ஆண்டுகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். தற்போது இவர் மியான்மரின் அதிபராக இல்லை என்றாலும், மியான்மர் அரசின் தலைவராக பார்க்கப்படுகிறார்.

இரண்டு தசாப்தங்களாக மியான்மரை ஆண்டதுடன், 25% நாடாளுமன்ற இடங்களைத் தக்க வைத்துக்கொண்ட பலம் மிக்க ராணுவத்தைக் கண்டிக்க தவறியதாகக் கடந்த காலங்களில் சூச்சி விமர்சிக்கப்பட்டார்.
பிராந்திய நாடுகள் என்ன நினைக்கின்றன?
தென்கிழக்கு ஆசியாவின் முஸ்லிம் நாடுகள், ரொஹிஞ்சா முஸ்லிம்களின் நிலை குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மியான்மர் தூதரகம் மீது கடந்த ஞாயிறன்று சிறிய பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

வங்கதேச எல்லையில் என்ன நிலைமை?
ராணுவத் தாக்குதல் தொடங்கிய ஆகஸ்ட் 25-ம் தேதி முதல், ரொஹிஞ்சா குடும்பங்கள் வட எல்லை நோக்கி நகர்கின்றனர். எல்லைப்பகுதியில் உள்ள நாஃப் நதியைக் கடந்த போது டஜன் கணக்கானவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளைத் தடுக்குமாறும் வங்கதேச அரசு உத்தரவிட்ட போதிலும், வங்கதேச எல்லை போலீஸார் அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்து வருவதாக. அறியமுடிகிறது
வங்கதேச எல்லையில் இருக்கும் ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பின் செய்தி தொடர்பாளர் வின் டான், மக்கள் மிக மோசமான உடல் நிலையுடன் அகதிகள் முகாமுக்கு வருவதாகக் கூறுகிறார்.

"வீடுகளில் இருந்து வெளியேறியதில் இருந்து பல நாட்களாகச் சாப்பிடவில்லை என அவர்கள் தெரிவிக்கிறார்கள். நிலத்தடி நீர் அல்லது மழை நீரைக் குடித்து உயிர் பிழைத்திருக்கிறார்கள். பல நாட்கள் நடந்து இங்கு வந்ததால் உடல் சோர்வுடன் காணப்படுகிறார்கள்" என வின் டான் கூறியுள்ளார்.

பல பெண்களும், குழந்தைகளும், பச்சிளம் குழந்தைகளுக்கும் அகதிகள் முகாமிற்கு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால், மருத்துவ சிகிச்சை தேவை என்றும் அவர் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.