கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக,எடுப்பார் கை பிள்ளைகளாக இருக்கக்கூடாது.

நல்லெண்னம் பெருந்தன்மை காரணமாக கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கின்றது.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் 

சமத்துவம் இருந்தால் தான் இனங்களுக்கிடையே ஒற்றுமை வரும். தேசிய சகவாழ்வு என்பது இனங்கள்,மதங்கள்,மொழிகள் மத்தியிலே இருக்க வேண்டும்.சமத்துவமில்லாம் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையை பார்வையிட்டு வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முழுமையாக வாக்களித்த எனது தமிழ்ச்சமூகம் இன்னும் பல நல்ல செயல்களை திட்டங்களை வளங்களை எல்லாம் பெற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.தமிழ் மக்களுக்கு எதிராக கொடுங் கோண்மை புரிந்த பலர் இப்பொழுது எங்களது அரசாங்கத்தில் வந்து அமர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களே அதிகம் போராடியுள்ளனர்.அரசாங்கத்தை உருவாக்குவதற்காக போராடி வாக்களித்த எமது மக்கள் அரச வளங்களை பெறமுடியாதிருப்பதை பார்க்கும் பொழுதுதான் பெருங் கோபமாக இருக்கின்றது.

கிழக்கு மாகாண மட்டக்களப்பில் வாழக்கூடிய தமிழ் பேசும் மக்கள் அநாதைகளில்லை.கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக எடுப்பார் கை பிள்ளைகளாக இருக்கக்கூடாது.நான் ஒரு தமிழன்,நான்; ஒரு இந்து.தமிழன்,இந்து என்ற முறையிலே எனக்கு தமிழ்த்திமிரு இருக்கின்றது.தமிழ்த்திமிரு இப்பதனால் ஏனைய இனத்தவர்களை வெறுக்கின்றேன் என்று அர்த்தம் கிடையாது.தமிழ் மீது அன்பு பாசம் பற்றிருப்பதன் காரணத்தினாலேதான் நான் மட்டக்களப்புக்கு வருகின்றேன்.இலங்கை பூராகவும் செல்வேன். 

தமிழர்களாகிய நாங்கள் நாட்டின் சமமான குடிமக்கள்.நாங்கள் எவருக்கும் தலை குனிந்து கொண்டு வாழ வேண்டிய தேவையுமில்லை.எவரையும் தலை குனிய வைக்க வேண்டிய தேவையுமில்லை.நாட்டில் வாழக்கூடிய தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஆகியோர் சமத்துவமாக ஒற்றுமைப்பட வேண்டும்.இலங்கையில் வாழ்கின்ற பௌத்தர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சமத்துவத்துடன் ஒற்றுமைப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு சமத்துவம் இல்லாமல் இருக்கின்றது.தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய மட்டக்களப்பு மாவட்டத்திலே குறிப்பாக தமிழ் பேசும் பகுதிகளிலே தேசிய பாடசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகள் மிக மிக குறைவாகவே இருக்கின்றது.ஏனைய இனத்தவர்களின் பாடசாலை மற்றும் வைத்தியசாலையுடன் ஒப்பிடும்பொழுது வளம் குறைந்தவைகளாகவே இருக்கின்றன.80 சதவீதமான தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடிய பிரதேசங்களில் தான் ஆதார வைத்தியசாலைகள் இருக்க வேண்டும்.

ஏறாவுர்.வாழைச்சேனை,காத்தன்குடி ஆகிய பிரதேசங்களில் ஆதார வைத்தியசாiலைகள் இருக்கும் போது தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடிய களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் ஒரேயொரு ஆதார வைத்தியசாலை மாத்திரமே வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது.தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில்தான் ஆதார வைத்தியசாலைகள் அதிகமாக இருக்க வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுள் ஒன்று மாத்திரமே தமிழ் மக்கள் வாழக்கூடிய பகுதியில் இருக்கின்றது.தமிழ் மக்கள் வாழக்கூடிய பிரதேசங்களில் தேசியப் பாடசாலைகளும் குறைவாகவுள்ளது.ஏன் இந்தக் குறைபாடு.இது தான் சமத்துவம் இல்லை.சமத்துவம் இருந்தால் தான் இனங்களுக்கிடையே ஒற்றுமை வரும்.உறவு இருக்கலாம், ஆனால் சமத்துவம் இருக்காது.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் ஏறக்குறைய 80,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.களுவாஞ்சிக்குடி செயலகம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும்.ஒன்று களுவாஞ்சிக்குடியாகவும் மற்றொன்று கல்லாறாகவும் பிரிக்கப்பட வேண்டும்.இரு பிரதேச செயலகங்களை உருவாக்கினால் தான் மக்களது தேவைகளை இலகுவாக நிறைவேற்ற முடியும்.

களுவாஞ்சிக்குடி பிரதேச வாழ் மக்களுக்கு,பிரதேச செயலகம் என்பதும் வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவதென்பதையும் நிச்சயமாக பொறுப்பேற்றுக்கொண்டவன் என்ற வகையில் அவ்விரண்டையும் உருவாக்கி தருவதாக வாக்குறுதி அளிக்கின்றேன்.களுவாஞ்சிக்குடி கிராம சேவகப் பிரிவில் 45 கிராம சேவகப் பரிவுகள் இருக்கின்றன.45 கிராம சேவகப் பிரிவுகள் என்பது ஒரு பிரதேச செயலகத்துக்கு அதிகம்.ஆகவே 45 கிராம சேவக வலயங்களை பிரித்து இரண்டு பிரதேச செயலக பிரிவுகளை உருவாக்கி இரு பிரதேச செயலாளர்களை நியமிக்க வேண்டும்.

தமிழ் மக்களை தொடர்ந்தும் பாரபட்சமாக நடத்தும் செயற்பாட்டை தேசிய மட்டத்திலேயோ,மாகாண,மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலேயோ இனிமேல் எவரும் செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என கூறி வைக்க விரும்புகின்றேன்.மனோ கணேசன் ஏன் மட்டக்களப்புக்கு வந்தார் களுவாஞ்சிக்குடிக்கு ஓட்டமாவடிக்கு வாழைச்சேனைக்கு பெரியகல்லாறுக்கு ஏன் வந்தார் என்று எவராவது முட்டாள்தனமாக கேள்வி கேட்க வேண்டாமென அரசியல்வாதிகளுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.இது எனது நாடு,நான் இலங்கையன்.நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள்.இது எங்களது தாய் நாடு.

அச்சம் நிகழ்ந்த கால கட்டத்திலே துப்பாக்கி சூடு விழும்,சுடப்படுவோம் என்று தெரிந்தும் கூட தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்கெல்லாம் சென்றிருக்கின்றேன்.கொழும்பிலே தமிழ் மக்கள் கண்ட கண்ட இடங்களிலே வெள்ளை வேன்களால் கடத்தப்பட்ட போது நாயை பிடிப்பது போல பிடித்துச் சென்ற போதெல்லாம் நானும் எனது நண்பன் ரவிராஜ்யும் இணைந்து தெருவில் இறங்கிப் போராடி இருக்கின்றோம்.அந்தப் போராட்டத்திலே ரவிராஜ் கொல்லப்பட்டார்.அதே போல் எனக்கு உதவி செய்த சிங்கள நண்பர் ஒருவர் தான் லசந்த விக்கிரமதுங்க அவரும் கொல்லப்பட்டார்.என்னையும் கொலை செய்ய முயற்சித்தார்கள் கொல்ல முடியவில்லை.சிங்கள அரசாங்கம் சிங்கள இராணுவம் சிங்கள பொலிஸ் என்று சொன்னாலும் கூட அதே சிங்கள மக்கள்தான் எங்களோடு கூட இருந்து போராடினார்கள்.ஆகவே சிங்கள மக்களுடன் எங்களுக்கு முரண்பாடு இல்லை.

கிழக்கு மாகாண சபைக்கு நீங்கள் வாக்களித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பாக 11 உறுப்பினர்களை அனுப்பியிருக்கின்றீர்கள்.மாகாண சபையிலே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தமிழ்த்தேசியக்கூடமைப்பு.ஆனால் இன்று மாகாண சபையிலே கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் கூட்டாட்சி செய்கின்றார்கள்.முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு.நல்லெண்னம் பெருந்தன்மை காரணமாக கூட்டமைப்பு,முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கின்றது.

உண்மையிலே அதிகமாக எண்ணிக்கை கொண்டவர்கள் தான் முதலமைச்சராக இருக்க முடியும்.அது நியாயம் இருந்தாலும் கூட தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமை கருதி கூட்டமைப்பினால் செய்யப்பட்டுள்ளது.பெருந்தன்மை என்பது இரு கட்சி பக்கமும் இருக்க வேண்டும்.ஆனால் இன்று மாகாண சபைக்குட்பட்ட தமிழ் மக்கள் செறிவாக வாழக்கூடிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகள் நன்றாக கவனிக்கப்படவில்லை என்றால்,எங்கே கோளாறு குறைபாடு இருக்கின்றது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் சிந்திக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் உறவுகள் சீர்கெட்டுக்கொண்டு இருக்கின்றன.இதற்கு கிழக்கு மாகாண சபையிலே கூட்டாட்சி நடத்தும் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் கூட்டுப்பொறுப்பை ஏற்க வேண்டும்.வளங்களை சமமாக பகிரவேண்டும் இனவிகிதாசாரம் பேணப்பட வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறக்குறைய 80 வீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் என்றால்,அதற்கேற்ப வளங்களும் பகிரப்பட வேண்டும்.

இன விகிதாசாரத்தின் அடிப்படையில் வளங்கள் பகிரப்பட வேண்டும்.தமிழ்ப் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைகள் வளப்பற்றாக்குறைகளுடனே இயங்கி வருகின்றது.வீதியில் சென்று கொண்டிருக்கும் போது வீதிகள் குன்றும் குழியுமாக மின் விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தால் அது தமிழ்க் கிராமமாகவும் பாடசாலையின் கட்டிடங்கள் சேதமடைந்து மேசைகள் நாற்காலிகள் உடைந்து வர்ணம் பூசப்படாமல் இருந்தால் அது தமிழர்களின் பாடசாலையென்றும் தரமுயர்த்தப்படாத வைத்தியசாலைகள் இருந்தால் அது தமிழ் மக்களின் வைத்தியசாலையென்றும் அறிய முடிகிறது. 

உண்மையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பலம் பொருந்திய அனுபவசாலி.வடக்கு கிழக்கிலே வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத் தரவேண்டிய நோக்கில் செயற்படுகின்றார்.புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வழிகாட்டல் குழுவிலே அவரும் நானும் இருக்கின்றோம்.புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் கஸ்டப்பட்டு போராடிக்கொண்டிருக்கின்றார்.இதனால் கவனம் முழுக்க புதிய அரசியலமைப்;பிலே இருப்பதனாலே,தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அபிவிருத்தி பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது.தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் வேண்டும் என்பதற்காகவே முழு மூச்சாக போராடிக்கெண்டிருக்கின்றார்.அபிவிருத்தி அபிவிருத்தி என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு எங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.இரண்டையும் சமநிலையில் கொண்டு செல்ல வேண்டும்.அத்தகைய தலைமைதான் ஆளுமை கொண்ட நேர்மை கொண்ட ஜனரஞ்சகத் தலமையாக இருக்க முடியும் என என்றார். 


No comments

Powered by Blogger.