மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மட்டக்களப்பில் கறுப்பு செப்டெம்பர் !!

                                                                                                           - செ.துஜியந்தன் -
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்த சூழலில் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட மாதமாக செப்டெம்பர் மாதம் அமைந்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 359 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

கடந்த கால யுத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் விட்டுச் சென்ற எச்சங்கள் பலவுண்டு. வீரம் விளைந்த விளை நிலம் என வர்ணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். 

வடக்கில் இறுதிக்கட்ட போரின் போது கொத்துக் கொத்தாய் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் மட்டக்களப்பில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிந்த மக்கள் லட்சக்கணக்கில் இருப்பார்கள். ஒரே நாளில் செத்து மடிவது பேரவலம். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் செத்து மடிவது என்பது அதை விட கொடூரமானது. 

இராணுவத்தினராலும், முஸ்லீம் ஊர்காவல் படையினராலும், இனந்தெரியாத நபர்களினாலும் ஆங்காங்கே தினம் ஒரு படுகொலைச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்தேறியிருந்தன. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, நிதியும் கிடைக்கவில்லை மக்கள் நிர்கதிக்குள்ளாகியிருந்தனர். 

மட்டக்களப்பில் நடைபெற்ற படுகொலைகளில் செப்டெம்பர் மாதமே கொலைகள் நிறைந்த மாதமாக கடந்த காலங்கள் இருந்தன. 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி வந்தாறுமூலையில் வைத்து 158 அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதேபோன்று 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 09 ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் பகுதியில் 184 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு 21 ஆம் திகதி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில்17 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன் மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆங்காங்கே இருவர், மூவரென படுகொலை செய்யப்பட்டு வீதிகளில் வீசப்பட்டதும் செப்டெம்பர் மாதத்திலேயாகும். 
இவற்றைவிட 2000 அம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் திகதி பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 27 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தனர். 

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நெஞ்சை விட்டகலாத படுகொலைகள் அனைத்தும் செப்டெம்பர் மாதத்திலே நடைபெற்றதினால் இம் மாதத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் கறுப்பு செப்டெம்பராகவே பார்க்கின்றனர்.

No comments

Powered by Blogger.