கிழக்கு மாகாணத்தில் தமிழ் -முஸ்ஸிம் உறவு சிதைவடைந்துள்ளது! அமைச்சர் மனோகணேசன் தெரிவிப்பு!!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவு சீர் கெட்டுப் போயிருக்கின்றது. இது சம்பந்தன் அவர்களுக்கு விளங்கவில்லை. ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு விளங்கவில்லை. இருவருமாகச் சேர்ந்து கூட்டாட்சி நடத்துகிறார்கள். அந்தக் கூட்டாட்சி நடத்துவது என்பது முரண்பாட்டை நீக்குவதற்காகச் செயற்பட வேண்டும் என்று தேசிய சகவாழ்வு, தேசிய கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(04.9.2017)3.30 மணியளவில்  நடைபெற்ற அரச சார்பற்றநிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலே அவர் இதனைத் தெரிவித்தார். 

நிறுவனப்பிரதிநிதிகளின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனத் தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஆலோசனை வழங்குதல், அபிவிருத்தி என்று இரண்டு விடங்கள் இருக்கின்றன. பல விசயங்கள் இருந்தாலும் அவை மாவட்டத்தில் நடைபெறுகின்றன அபிவிருத்திப்பணிகளிலே ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான அடிப்படைதான். எல்லோரும் நினைத்தது போல் செயற்பாடுகளைச் செய்து கொண்டு போனால் கவனிக்கப்பட வேண்டிய பிரிவு கவனிக்கப்படாமலேயே இருந்து போகும். சில பிரிவுகள் அளவுக்கதிகமாக வளங்களை அறிந்து கொள்ளும் அவ்வாறான காரணங்களினாலே ஒரு பொதுவான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது சரி. ஒருங்கிணைப்புக்குழுவில் செயற்படுவது சரி என்று நினைக்கிறேன். ஆலோசனை சார் வேலைகளில் பிரச்சினைகள் இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு பிரதேச செயலாளர் பிரிவு தவிர பலவற்றில் செயற்படுவதாக இருந்தால் அது சம்பந்தமாக ஒருங்கிணைப்பு மாவட்ட செயலகத்தில்தான் மேற்கொள்ள வேண்டும். அதனை 4 வாரங்களுக்குள் வரயறைப்படுத்தும் வகையில் ஏற்படுத்துவோம். 

கடந்த காலங்களிலே உள்ளுர் நிறுவனங்கள் துரோகிகளாகவும் சர்வதேச நிறுவனங்கள் எதிரிகளாகவும் பார்க்கப்பட்டார்கள். அவ்வாறான நிலை மாற்றப்பட்டுள்ளது.

ஒரு நட்புரீதியான முரண்பாடுகள் இருக்குமே தவிர பகைமை ரீதியான முரண்பாடுகள் அல்ல. கடந்த காலங்களில் அவ்வாறில்லை. புதிய ஒரு நிறுவனத்தினைப் பதிவு செய்வதாக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டிய நிலை இருந்தது. அதனையும் மாற்றியாயிற்று. கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணம் சார்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்காக கவுன்சிலில் ஒருவர் இருக்க வேண்டும் என்பது ஒரு விடயமல்ல. தேசிய செயலகம் இருக்கிறது. அது ஒரு வசதிப்படுத்தும் அமைப்புதான். 

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு, பிரதேச ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் ஊடாக நாட்டின் அபிவிருத்திகள் நடைபெறுகின்றது. பாராளுமன்ற, மாகாண சபை, அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. இந்த நிதி ஒதுக்கீடுகள் எல்லாம் வெறுமனே அரசாங்க அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் மாத்திரம் கலந்து பேசி மேற்கொள்ளப்படுகின்றமை பிழையானது. அதில் சிவில் அமைப்புக்களுக்குமு; பங்கிருக்க வேண்டும். 

மக்கள் பணம் அது. மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படாமலும், வீணடிக்கப்படாமலும், தவறான நிருவாகச் செயற்பாட்டினாலும் மக்கள் பணம் விரையமாகிறது. இதற்கு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கோ உரிமையில்லை. அந்த வகையில் தான் இந்த தேசியக் கவுன்சில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில நிறுவனங்கள் நிறுவனங்களாகப்பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. சில கம்பனிச்சட்டத்திற்குக் கீழும் இருக்கின்றன. அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்குரிய செயற்பாட்டினை கவுன்சில் மேற்கொள்ளும். அதற்கான அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததும் அவற்றினை மேற்கொள்ளமுடியும். 

கொடை வழங்குவதும் பெற்றுக்கொள்வதும் வரலாற்று ரீதியாக இருக்கிறது. இப்போதும் இருக்கிறது நன்கொடை வழங்குபவருக்கு அதனை சுதந்திரமாக மேற்கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையிருக்கிறது. இது போன்ற விடயங்களை ஒழுங்குபடுத்த முனைந்தால் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் வருகிறது.

 அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். 
மட்டக்களப்பு மாவட்டததில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே உறவு சிதைவடைந்து சென்று கொண்டிருப்பதனைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இது முக்கியமான பிரச்சினை ஒன்று. இதை நீங்கள் கவனத்தில் எடுத்து சீர் செய்ய வேண்டும்.

அதற்கு முன்னர் அது ஏன் அப்படிச் சிதலமடைந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு நோக்கு மருந்து கொடுப்பதற்கு முன்னர் அது ஏன் ஏற்பட்டது என்று கண்டுபிடித்தால் தான் மருந்து கொடுக்க முடியும். ஏன் என்று பார்க்க வேண்டும். இப்படியொரு பிரச்சினை இருப்பதனைத் தெரிநது ஒதுங்கியிருக்க முயல்வீர்கனானால் அது பிழையானது. சில வேளைகளில் கண்முன்னே பிரச்சினை இருக்கும் அதனைப்பற்றிப் பேசமாட்டோம். 

உதாரணமாக, நாட்டில் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள், அல்லது முஸ்லிம் மக்கள் கொல்லப்படுவார்கள், பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் இவற்றையெல்லாம் கண்டு தமிழ் மக்களுக்குச் சார்பாக முஸ்லிம் மக்கள் முஸ்லிம் மக்களுக்குச்சார்பாக தமிழ் மக்களும் குரல் கொடுக்க மாட்டார்கள், ஆகையால் இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடக்கும், அல்லது பலஸ்தீனத்தில் நடக்கும் அதற்கெதிராகப் போராட்டம் செய்வார்கள். சகோதரம் கொல்லப்படும் போது கண்ணை மூடிக் கொண்டிருப்பார்கள். மாட்டுக்காகப் போராட்டம் நடத்துவார்கள். இது பிழை. இது எம்முடைய நாடு. இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஐக்கியமாக வாழ வேண்டும். ஐக்கியம் என்பதற்கு முதல் நிபந்தனை சமத்துவம் இருக்க வேண்டும். அது இல்லாவிட்டால் ஒற்றுமை வராது. ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையில் ஐக்கியம் வராது. இதை சிவில் சமூகம் கவனம் எடுக்க வேண்டும். 

அபிவிருத்திப் பணிகளைப்பார்த்தால், தமிழ் மக்கள் ஒது க்கப்படுவது நன்றாகத் தெரிகிறது.

வீதிகளில் பயணிக்கும் போது குண்றும் குழியுமாக இருக்கும். வீடுகள் சிதைவடைந்திருக்கும் அது தமிழ் கிராமமாக இருக்கும். காரணம் தமிழ் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க்தில் அமைச்சர்களாக இல்லை. அமைச்சராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் செய்யலாம். அவர்கள் தங்களது பணிணை சரியாக, காத்திரமாக, ஆழுமையுடன் ஆற்றுவதாகத் தெரியவில்லை. முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் ஓரளவுக்கு அபிவிருத்திகளைக்காண்கிறேன்  அதற்காக தமிழ் மக்கள் பொறாமைப்பட்டுப்பிரயோசனம் இல்லை.

 அவர்களுடைய பகுதிகளில் ஒப்பீட்டளவில் சிறப்பாக அமைந்திருப்பதைப்பாராட்டுகின்றேன். அதே வசதி ஏன் தமிழ் மக்கள் பகுதிகளில் இல்லை என்று யோசிக்க வேண்டும். அதற்குக்குரல் கொடுக்க வேண்டும காரணம் என்னவென்று பார்க் வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் கூட தமது இனத்துக்கு மாத்திரம் செயற்படாமல் தமிழ் பகுதிகளுக்குமாகச் செயற்பட வேண்டும். 

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒத்துழைப்புடன் செயற்படாவிட்டால் நாங்கள் சிங்களப் பெரும்பான்மையுடன் எவ்வாறு நியாயத்தை எதிர்பார்ப்பது என்று தெரியவில்லை.

சிங்களவர்களைப்பார்த்து நாங்கள் நிங்கள இனவாதிகள் என்று நியாயத்தை எதிர்பார்க்கும் பொழுது நாங்களே எங்களது சகோதர இனத்தவர்கள் மத்தியில் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால் அந்த நியாத்தினை எதிர்பாக்கும் உரிமை எங்களுக்கில்லை. அது பெரிய பிரச்சினை. 

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவு சீர் கெட்டுப் போயிருக்கின்றது. இது சம்பந்தன் அவர்களுக்கு விளங்கவில்லை. ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு விளங்கவில்லை. இருவருமாகச் சேர்ந்து கூட்டாட்சி நடத்துகிறார்கள். அந்தக் கூட்டாட்சி நடத்துவது என்பது முரண்பாட்டை நீக்குவதற்காகச் செயற்பட வேண்டும். 

சிவில் சமூகமாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்குச் சொன்னேன் அதனைச் செய்வார்களோ தெரியவில்லை. அப்படியில்லையென்றால் அது மட்டக்களப்பு மாவட்டத்தின் தலையெழுத்து என்றுதான் கொள்ள வேண்டும். அதனை மாற்ற வேண்டும்.


No comments

Powered by Blogger.