வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்

சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்ற மாணவியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதியன்று சேலத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி அருகே வளர்மதி என்ற மாணவி துண்டுப் பிரசுரம் ஒன்றை அங்கு வந்த மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுத்துவந்தார்.

இயற்கைப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் அச்சிடப்பட்டிருந்த அந்தத் துண்டுப் பிரசுரத்தில் 'நெடுவாசல், கதிராமங்கலம் மக்களுடன் கரம்கோர்ப்போம்' என்ற தலைப்பில் டெல்டா பகுதியில் செயல்படுத்தப்பட்டுவரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி கோரப்பட்டிருந்தது.

வளர்மதி துண்டுப் பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது, அவரையும் அவருடன் இருந்த ஜெயந்தி என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி காவல்துறையினர் கைதுசெய்தனர். வளர்மதி மீது அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

வளர்மதி மீது மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு விவகாரங்களில் போராடியது தொடர்பான வழக்குகள் இருக்கின்றன. ஆகவே அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாநகர ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார்.

வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இதனை எதிர்த்து அவருடைய தந்தை மாதையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படும்போது அவருடைய பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்; அதனைக் காவல்துறை முறைப்படி செய்யவில்லை என்று மாதையன் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும், அவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை மறுபரிசீலனை செய்யக்கோரி அளித்த மனுவை சேலம் மாநகர ஆணையர் உரிய காலத்தில் பரிசீலிக்கவில்லையென்றும் தனது மனுவில் மாதையன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வளர்மதியை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று கூறியுள்ளது.

"மற்ற வழக்குகளில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுவிட்டதால், அவர் நாளையோ, நாளை மறுநாளோ சிறையிலிருந்து விடுதலையாகிவிட முடியும்" என அவரது வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்தார்.

வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இதழியல் படித்துவந்தார். இந்த வழக்கிற்குப் பிறகு பல்கலைக்கழகத்திலிருந்து வளர்மதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.