புற்றுநோயை எதிர்க்கும் 'உயிர் மருந்து'!அமெரிக்கா அனுமதி


புற்றுநோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பையே மாற்றியமைக்கும் சிகிச்சை முறை ஒன்றுக்கு முதல்முறையாக அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

'ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்.டி.ஏ.)' என்னும் அந்நாட்டின் மருந்து முறைப்படுத்தல் அமைப்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தமது இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று குறிப்பிட்ட அந்த அமைப்பு, மருத்துவம் தற்போது புதிய எல்லையில் நுழைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட வகை ரத்தப்புற்றுக்கு

நொவார்ட்டிஸ் மருந்து நிறுவனம் இந்த 'உயிர் மருந்து' சிகிச்சைக்கு 4.75 லட்சம் அமெரக்க டாலர் கட்டணம் நிர்ணயித்துள்ளது. குறிப்பிட்ட வகை ரத்தப் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு இந்த சிகிச்சையை அளித்தபோது 83 சதவீதம் பேருக்கு நோய் நீங்கியதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனில் உள்ள டாக்டர்கள் இந்த நடவடிக்கையை உற்சாகம் அளிக்கும் முன்னேற்றம் என்று கூறியுள்ளனர்.

உயிர் மருந்து சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை, கீமோதெரபி போன்ற வழக்கமான சிகிச்சை முறைகளில் இருந்து மாறுபட்டது. இந்த முறையில் ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கும் ஏற்ப தனித்தனியே சிகிச்சை வடிவமைக்கப்படுகிறது.

வெள்ளை அணுக்களைப் பிரித்தெடுத்து...

கார்-டி (CAR-T) என அழைக்கப்படும் இந்த சிகிச்சையில், நோயாளியின் உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்கள் பிரித்தெடுக்கப்படும். புற்றுநோய் உயிரணுக்களைக் கண்டறிந்து கொல்லும் வகையில் மரபணு முறையில் அந்த வெள்ளை அணுக்கள் மறுநிரல் செய்யப்படும்.

பிறகு மாற்றியமைக்கப்பட்ட அந்த வெள்ளை அணுக்கள் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படும். புற்றுநோய் அணுக்களை கண்டு தாக்கும்போது இந்த வெள்ளை அணுக்கள் பல்கிப் பெருகும்.

மருத்துவத்தில் புதிய எல்லை

புற்றுநோய் அணுக்களை தாக்கும் வகையில் நோயாளியின் சொந்த உயிரணுக்களை மறுநிரல் செய்வதன் மூலம் நாம் மருத்துவப் புத்தாக்கத் துறையில் புதிய எல்லையில் நுழைகிறோம் என்கிறார் எஃப்.டி.ஏ.வைச் சேர்ந்த டாக்டர் ஸ்காட் காட்டிலெப்.

ஜீன் தெரபி, செல் தெரபி போன்றவை மருத்துவத்தை மாற்றியமைக்கும், குணப்படுத்தமுடியாத நோய்களை குணப்படுத்துவதற்கான நமது திறமையில் திருப்புமுனையை உருவாக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன என்கிறார் அவர்.

'கிம்ரியா' என்ற பெயரில் சந்தைக்கு வரும் இந்த சிகிச்சை, தீவிர லிம்போப்லாஸ்டிக் லுகீமியா (மூலவடிநீர்ச் செல் ரத்தப்புற்று) என்ற நோயை எதிர்த்துச் செயல்படுகிறது.

வழக்கமான சிகிச்சை முறைகள் பலன் அளிக்காதபோது மேற்கொள்வதற்கு மட்டுமே இந்த சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உற்சாகமூட்டும் முடிவுகள்

பிலடெல்ஃபியா குழந்தைகள் மருத்துவமனையில் முதல் முறையாக ஒரு குழந்தைக்கு இந்த சிகிச்சையை வழங்கிய டாக்டர் ஸ்டீஃபன் க்ரப் இந்தப் புதிய சிகிச்சையின் அணுகுமுறை அதிக உற்சாகமூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த முதல் நோயாளி சாகும் தருவாயில் இருந்தார். இந்த சிகிச்சைக்குப் பிறகு தற்போது புற்றுநோய் இல்லாமல் ஐந்தாண்டுகளாக வாழ்கிறார்.

இதுவரை இந்த இந்த கார்-டி சிகிச்சை பெற்ற 63 நோயாளிகளில் 83 சதவீதம் பேர் மூன்று மாதத்தில் முழுவதும் இந்த நோயில் இருந்து விடுபட்டுள்ளனர். நீண்டகால புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன.

பக்க விளைவுகள்

எனினும் இந்த சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லாமலும் இல்லை.

மிக அதீதமாக கார்-டி செல்கள் உடலில் பரவும்போது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் சைக்கோடைன் ரிலீஸ் சிண்ட்ரோம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், இதை மருந்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

முதல் படி

வேறு பலவித ரத்தப் புற்றுநோய்களை குணப்படுத்தும் சிகிச்சையை வடிவமைக்கவும் கார்-டி சிகிச்சை முறை உதவும் என்றும், ஆனால், கட்டி மூலம் உருவாகும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றின் சிகிச்சைக்கு இது உதவவில்லை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்த சிகிச்சையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி, யார் இதன் மூலம் பயன்பெற முடியும் என்பதில் நாம் கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. எனவே இது முதல்படி என்பதை உணர்வது முக்கியம் என்கிறார் கேன்சர் ரிசர்ச் யு.கே. என்ற மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஜான்சன்.

No comments

Powered by Blogger.