நெடுந்தீவு அருகே 56 கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினரால் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருள்கள், மாத்திரைகள், அரசால் தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றை கடத்தில் செல்வதும், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தி வருவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ள அனைத்து பாதுகாப்பு பிரிவுகளும் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் இயங்கி வரும் நிலையில் இவற்றால் கடத்தல் சம்பவங்களை ஏனோ தடுக்க முடிவதில்லை.இந்நிலையில் இன்று அதிகாலை இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் நெடுந்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய மற்றும் இலங்கையை சேர்ந்த படகுகள் நின்று கொண்டிருந்தது. அதனை கண்ட இலங்கை கடற்படையினர் அப்படகுகளின் அருகே செல்ல முயன்ற போது அந்த படகில் இருந்தவர்கள் சில மூட்டைகளை கடலில் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதன்பின் அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் கடலில் போடப்பட்ட மூட்டைகளை கைப்பற்றியதுடன் கடத்தல்காரர்களை பிடிக்கவும் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து கைபற்றப்பட்ட மூட்டைகளை ஆய்வு செய்த போது அதில் 25 பொதிகளில் 56 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கைப்பற்ற பட்ட கஞ்சாவை காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. 

கடற்படையினர் கைபற்றிய கஞ்சாவினை விசாரணைக்காக காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைத்து உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.