வீடியோ கடையும்... போயஸ் தொடர்பும்!- சசிகலா வீழ்ந்த கதை

ஜெயலலிதா மரணித்த போது, மகா பாரதத்தில் சகுனி ஆடிய சதுரங்கத்தை விட மோசமான அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டுக் கொண்டிருந்தது.

ஜெயலலிதாவோடு 30 ஆண்டு காலமாக இருந்த சசிகலா, அவரிடம் கற்ற அரசியலை, அவருக்கு பின்னால் ஆட ஆரம்பித்தார்.

ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி அரண் அமைத்தவர்கள், ஜெயலலிதாவை எப்படி சுற்றி வளைத்தார்கள்? அரசியல் அரிச்சுவடியை சசிகலா எங்கே கற்றார்... அவருக்குப் பின்னால் இருந்து இயக்கும் சசிகலா குடும்பத்தினர் செய்த மாயங்கள் என்ன... எப்படி வந்தார்கள்... வளர்ந்தார்கள்? என்பதை ‘சசிகலா ஜாதகம்’ தொடரில் 80 அத்தியாயங்களில் வெளிவந்தன.

முன்கதை சுருக்கம். விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என 6 வாரிசுகள். இந்த வாரிசுகளும் அவர்களின் வாரிசுகளும் பெண் எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் சேர்ந்து மன்னார்குடி மகா சமுத்திரம் ஆனது.

இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரின் கட்சியை ஆட்டிப்படைத்து வருகிறார்கள். திருத்துறைப்​பூண்டி போர்டு ஹை ஸ்கூலில் 10-ம் வகுப்பு வரை படித்த சசிகலாவை எம்.நடராசனுக்கு மணமுடித்து வைக்கிறார்கள்.

அரசு மக்கள் தொடர்பு அதிகாரியான நடராசனுக்கு, அரசு அதிகாரிகள் பலரும் பழக்கம். அதில் கடலூர் கலெக்டராக இருந்த சந்திரலேகாவும் ஒருவர்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வில் சேர்ந்த போது அவரின் பொதுக்கூட்டத்தை கவர் செய்வதற்கான சான்ஸ் சந்திரலேகா மூலம் சசிகலாவுக்கு அடிக்கிறது. ‘

வினோத் வீடியோ விஷன்’ என்ற பெயரில் வீடியோ கடையை நடத்தி வந்த சசிகலா, ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட கவரேஜ்களை செய்து கொடுத்ததோடு படங்களின் வீடியோ கேசட்டுகளையும் கொடுக்கிறார். அந்தத் தொடர்பு போயஸ் கார்டனுக்குள் சசிகலாவை கால் பதிக்க வைக்கிறது.

பெங்களூரு ஜிண்டால் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சசிகலா பார்த்து நலம் விசாரிக்கிறார். ‘

உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டதுமே நலம் விசாரித்து விட்டு வரலாம் என கிளம்பி வந்துட்டேன். உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் நான் இங்கே இருந்து உதவக் காத்திருக்கிறேன் என சொன்னதும் ஜெயலலிதா நெகிழ்ந்து போனார்.

இந்த சம்பவம்தான் சசிகலா மீதான நம்பிக்கையை ஜெயலலிதா மனதில் விதைத்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு பி.ஏ-வாக இருந்த பிரேமாவுக்கு அப்பன்டீஸ் ஆபரேஷன் நடக்க... அந்த சந்தர்ப்பத்தைப் சசிகலா பயன்படுத்திக் கொண்டார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெயலலிதா டெல்லி போன போது அவருக்கு உதவியாக போன சசிகலா, பிரேமாவின் இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

நடராசனின் மீடியா உதவி, வீடியோ கவரேஜ், கேசட் விடு தூது, பெங்களூரு மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு நலம் விசாரிப்பு எல்லாம் சேர்ந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தார் சசிகலா.

கட்சிக்குள் ஜெயலலிதாவைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர், அவரை கண்காணிக்க நினைத்தார். ‘ஜெயலலிதா அருகிலேயே ஓர் ஒற்றர் இருந்தால் நல்லது’ என நினைத்த போது, சசிகலாவின் பெயர் அடிப்பட்டது.

அவர் அரசு அதிகாரி நடராசனின் மனைவி என தெரிந்ததும், அவரையே உளவாளியாக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவு பார்த்தார்.

சசிகலாவின் என்ட்ரிக்கு முன்பே போயஸ் கார்டனில் வேலை பார்த்தவர்கள் எல்லாம், சசிகலாவால் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

ஜெயலலிதாவின் அம்மா சந்தியா காலத்தில் இருந்தே வேலை பார்த்து வந்த மாதவன் நாயர், ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஜெயமணி, ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த வலம்புரி ஜான், ஜெயலலிதாவின் ஆரம்பகாலத் தோழி லீலா என யாரும் தப்பவில்லை.

போயஸ் கார்டனில் சசிகலா குடிபுகுவதற்கு முன்பு, ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில்தான் சசிகலா வசித்து வந்தார். அதே தெருவில்தான் ‘வினோத் வீடியோ விஷ’னும் இருந்தது.

ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து போயஸ் கார்டனுக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில்தான் சசிகலா வருவார். அந்த ஆட்டோ ரிக்‌ஷாவுக்கான கட்டணம் ஐந்து ரூபாயை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் மேனேஜர் துரையும் கேஷியர் சாமிநாதனும்தான் சசிகலாவுக்குக் கொடுப்பார்கள்.

இவர்களையும் பிறகு சசிகலா விட்டு வைக்கவில்லை. கடைசியில் ஜெயலலிதாவின் இரத்த உறவுகளும்கூட தப்பவில்லை.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மனைவி விஜயலட்சுமியோடு சென்னையில் வாழ்ந்து வந்தார். அண்ணன் மகள் தீபாவுக்கு அந்தப் பெயரை வைத்தவரே ஜெயலலிதா தான்.

போயஸ் கார்டனில் பிறந்தவர்’ என்பதால் தீபா மீது ஜெயலலிதாவுக்குப் பாசம் அதிகம். கார்டனில் செல்லப்பிள்ளையாக இருந்தார் தீபா. இவர்களையும் ஜெயலலிதாவோடு நெருங்க விடாமல் தடுத்தார் சசிகலா.

இது ஒரு கட்டத்தில் தீபாவின் திருமணத்துக்கு ஜெயலலிதாவை வரவிடாத அளவுக்கு போனது. அண்ணி விஜயலட்சுமியின் இறப்புக்குக்கூட ஜெயலலிதா வரவில்லை.

எங்கள் குடும்பத்தைப் பற்றி அத்தையிடம் தவறாகச் சொல்லி நெகட்டிவான செய்திகளைப் பரப்பி, இரத்த பந்தங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டார்கள்.

இரத்த உறவுகளான எங்களை மட்டுமே சந்திக்க விடாமல் தடுப்பது எதற்காக என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ரிலேஷன் கட்டாகி விடும் என நினைக்கிறார்கள். என சொல்கிறார் தீபா.(தொடரும்...)

- Vikatan

No comments

Powered by Blogger.