அம்பலப்படுத்தப்படும் மீறல்கள்! இலங்கைக்கு மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஏ.பி.!

இலங்கையில் நடந்த போரில் இடம்பெற்ற மீறல்களையும், போருக்குப் பிந்திய மீறல்களையும் அவ்வப்போது சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.
பிபிசி, அல்ஜசீரா, சனல்-4 போன்ற தொலைகாட்சிகள் அவற்றில் முக்கியமானவை.

இவை தவிர பிரித்தானியாவின் தி கார்டியன் போன்ற நாளிதழ்களும் கூட, மீறல்களை அம்பலப்படுத்துவதில் அக்கறை செலுத்தி வந்தன.

பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் அம்பலப்படுத்துவதில் முக்கியமான பங்கை வகித்திருந்தது.

எனினும் போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகப் போகின்ற நிலையில், போர்க்கால மீறல்களை மற்றும் போருக்கு பிந்திய மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளின் மீது சர்வதேச ஊடகங்கள் அக்கறையிழக்கத் தொடங்கியிருக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தை பல்வேறு நாடுகளும் கைவிட்டதைப் போலவே சர்வதேச ஊடகங்களின் கவனமும் குறைந்து விட்டது.

இத்தகைய சூழலில் தான், கடந்த 8ஆம் திகதி நியூயோர்க்கைத் தளமாக கொண்டு இயங்கும் ஏ.பி எனப்படும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம், ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டது.

தற்போது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது இந்த ஆய்வு.

2015ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்திரவதைகளையும், பாலியல் ரீதியான வதைகளையும் அனுபவித்த 52 பேரைப் பேட்டி கண்டு, இந்தப் புலனாய்வு செய்தி தயாரிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தற்போது தஞ்சமடைந்துள்ளவர்கள். இவர்கள் தமக்கு ஏற்பட்ட வதைகளை ஏ.பியிடம் விபரித்திருக்கின்றனர்.

இராணுவத்தினர் மற்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரே தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருந்ததாக, இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

புலிகள் இயக்கத்தை மீளத் தொடங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியே தம்மைக் கைது செய்து சித்திரவதை செய்ததாக இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளை இராணுவ தளபதி நிராகரித்திருக்கிறார். இராணுவம் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவதற்கான தேவை இல்லை என்றும், பொலிஸ் கூட அவ்வாறு செய்திருக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

எனினும், ஏ.பி இந்த ஆய்வு வெளியிட்ட பின்னர், வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர் இலங்கையில் நடந்த மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக, ஏ.பி செய்தி நிறுவனம், பெரியளவில் இதுபோன்ற ஆய்வுகளை வெளியிட்டதில்லை.

எனினும், 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கையில் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. என்பதை அம்பலப்படுத்தும், வகையிலான புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்து ஏ.பி.

இப்போது, தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சித்திரவதைகளை ஏ.பி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி, சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள் தொடர்கின்றன என்பது இதற்கு முன்னரும், பல்வேறு தரப்புகளால் வெளியிப்படுத்தப்பட்டன.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணியும், ஐ.நாவின் முன்னாள் நிபுணருமான யஸ்மின் சூகா தலைமையிலான, சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project) ஏற்கனவே தற்போதும் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற சித்திரவதைகள் தொடர்பான அறிக்கைளை வெளியிட்டிருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளிலும், அந்த அமைப்பு அறிக்கைகளை சாட்சியங்களுடன் சமர்ப்பித்திருக்கிறது.

ஏ.பி செய்தி நிறுவனம், 52 பேரின் சாட்சியங்களுடன் ஆய்வு அறிக்கையை வெளியிட்ட பின்னர், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், டுவிட்டரில் இட்டுள்ள பதிவு ஒன்றில் மைத்திரிபால சிறிசேன ஆட்சியில், சித்திரவதை செய்யப்பட்ட 71 தமிழர்களின் பதிவுகள் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ளது.

இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்ட 71 பேரில், 61 பேர் ஆண்களாவர். எஞ்சியவர்கள் பெண்கள். சித்திரவதைக்குள்ளான 21 பேர் ஏற்கனவே பிரித்தானியாவில் அல்லது ஐரோப்பாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். குறைந்தது 18 பேரில் பல தடவைகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர் எனறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஏற்கனவே சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் இது பற்றிய அறிக்கையை வெளியிட்ட போது, அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது.

ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டதால், ஊடகங்களில் அவ்வளவு கவனிப்பை பெற்றியிருக்கவில்லை. ஆனால், ஏ.பி செய்தி நிறுவனத்தின் புலனாய்வு அறிக்கை, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இதனால் தான், குற்றசாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும் என கூறியிருக்கிறார் வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம். அத்துடன், விசாரணைகளுக்கு சர்வதேச அமைப்புகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆதாரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கொடுக்க எந்த அமைப்பும் தயாராக இல்லை. ஏனென்றால், சாட்சிகளுக்கோ, உறவினர்களுக்கோ அதனால் ஆபத்து உள்ளது.

அரசியல் கைதிகளின் வழக்கில் அரசாங்கமே கூட சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை, நியாயப்படுத்தியிருக்கிறது. அப்படியிருக்கும் போது, அரச படைகளால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பாதுகாப்பு மட்டும் எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்ற கேள்வி உள்ளது.

No comments

Powered by Blogger.