கமலஹாசன் திரைக்குள் நுழைந்தது எப்படி?!

1959ம் ஆண்டு... ஏவிஎம் நிறுவனம் களத்தூர் கண்ணம்மா படம் எடுக்க முடிவு செய்திருந்த நேரம். ஜெமினி கணேசன், சாவித்ரி குல தெய்வம் ராஜகோபால் ஆகியோர் நடிப்பதென முடிவாகி இருந்தது. அந்தக் கதையில் ஒரு குழந்தைக்கு முக்கிய கேரக்டர் இருக்கிறது. அப்போது யார் பையன் என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றிருந்த டெய்ஸி ராணி என்ற குழந்தை நட்சத்திரம் அந்த குழந்தை கேரக்டரில் நடிப்பதாக இருந்தது.

இந்த நிலையில் ஏவிஎம் குடும்பத்திற்கு நெருக்கமான டாக்டர் சாரா என்பவர் ஏவிஎம் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் ஒரு சின்ன பையனும் வந்திருந்தார். வந்ததில் இருந்தே அவன் ஏவிஎம் செட்டியார் வீட்டு படிக்கட்டில் காலை மடித்து உட்கார்ந்து முட்டின் மேல் தலையை வைத்துக் கொண்டு சோகமாக உட்கார்ந்திருந்தான். அவனை கவனித்த ஏவிஎம் ராஜேஸ்வரி அம்மாள் "யார் இந்த பையன் இப்படி சோகமாக உட்கார்ந்திருக்கிறான்" என்றார். அதற்கு டாக்டர் சாரா "எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்களோட பையன் அய்யாவை (ஏவிஎம் செட்டியார்) பார்க்கணும்னு ஆசைப்பட்டான் அதான் கூட்டிட்டு வந்தேன். வந்து இவ்வளவு நேரமாகியும் அவரை காட்டலைன்னு கோபத்துல இருக்கான்" என்றார்.

ராஜேஸ்வரி அம்மா அந்த சிறுவனை சமாதானப்படுத்தினார். அப்போது அந்த பையன் "நான் நல்லா பாடுவேன். என்னையும் சினிமால நடிக்க வைப்பீங்களா?" என்றான். "எங்க பாடு பார்க்கலாம்" என்றார் ராஜேஸ்வரியம்மா. அப்போது பிரபலமாகியிருந்த சில சினிமா பாடல்களை பாடிக் காட்டினான். 

அப்போது தான் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மதிய தூக்கம் தூங்கி எழுந்திருந்தார். அவர் எழுந்ததும் காப்பி கொடுப்பது வழக்கம். காப்பி கொடுப்பதற்காக சென்ற ஏ.வி.எம்.சரவணன் சிறுவனையும் உடன் அழைத்துச் சென்றார். காப்பியை குடித்த செட்டியார் நிமிர்ந்து பார்த்து "யார் இந்த பையன்" என்றார். "டாக்டர் சாரோவோட வந்திருக்கான் நல்லா பாடுறான். நடிக்கிற ஆசை இருக்கும்போல..." என்றார் சரவணன்.

அந்த சிறுவனை மேலும், கீழும் பார்த்த ஏவிஎம் செட்டியார் "உன்னால டெய்ஸி ராணி மாதிரி நடிக்க முடியுமா?" என்றார். முடியும் என்பது போல தலையாட்டினான் சிறுவன். அப்போது வந்திருந்த சில படங்களின் காட்சிகளை நடித்துக் காட்டினான். தன் டேபிளில் இருந்த லைட்டை சிறுவனின் முகத்துக்கு திருப்பி வெளிச்சம் பாய்ச்சி பார்த்தார் ஏவிஎம் செட்டியார். "சரவணா டெய்ஸி ராணிக்கு பதிலா இந்த பையனையே நடிக்க வச்சிடு. ஜெமினிகிட்டேயும், இயக்குனர்கிட்டேயும் பையனை காட்டிடு" என்றார்.

"டெய்ஸி ராணிதான் இப்போ பிரபலம். 10 ஆயிரம் சம்பளம் பேசி அட்வான்சும் கொடுத்தாச்சு" என்றார் சரவணன். "அவளை விட இந்த பையன் பிரஷ்சா இருக்கான். இவன்தான் சரி. நாளைக்கு இவன் பெரிய ஆளா வருவான்" என்றார். சிறுவன் பக்கம் திரும்பிய செட்டியார், உன் பெயர் என்னப்பா என்றார். நெஞ்சை நிமிர்த்தி அந்த சிறுவன் சொன்னான் "கமல்ஹாசன்".ஆம் தனக்கான வாய்ப்பபை தேடிச் சென்று திறமையை காட்டி தன் திரைப்பட வாழ்க்கைக்கு தானே பிள்ளையார் சுழி போட்ட அந்த சிறுவன் கமல்ஹாசன்.

குழந்தை நட்சத்திரம், உதவி இயக்குனர், இயக்குனர், நடன கலைஞர், நடன இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசியர், பாடகர் இப்படி கமல்ஹாசன் திரைப்படத்தில் தொடாத துறைகள் இல்லை. பேசும் படம் வந்த பிறகு ஊமைப் படம், குள்ள மனிதன், பத்து வேடம், சப்பாணி, சைக்கோ, பைத்தியம் என போடாத வேடம் இல்லை. தேசிய திரைப்பட விருது, செவாலியே உள்ளிட்ட சர்வதேச விருது, பத்ம விருதுகள் என பெறாத விருதும் இல்லை.

அந்த கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள்...

No comments

Powered by Blogger.