ஆளில்லா தேசத்துக்கு மன்னரான இந்திய இளைஞர் - உரிமை சாத்தியமா?

சுயஷ் தீக்ஷித்
அண்மை நாட்களில் இந்திய இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பரவலான விவாதப் பொருளாகிவிட்டார். விசித்திரமான கோரிக்கையை முன் வைக்கும் அந்த இளைஞரின் பெயர் சுயஷ் தீக்ஷித்.

யாராலும் கோரப்படாத குறிப்பிட்ட நிலப்பரப்பு ஒன்றை தனது நாடு என்று ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருக்கும் சுயஷ், அந்த மண்ணின் மன்னன் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். இந்த விசித்திர கோரிக்கை உண்மையானதா? இது சாத்தியமா?

'பீர் தவீல்' என்ற இடத்தில் கொடியை ஏற்றியவாறு இருக்கும் தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சுயஷ், தனது நாட்டின் பெயர் 'கிங்டம் ஆஃப் தீக்ஷித்' என்று சுயமாக பெயர் சூட்டியிருக்கிறார்.

நாட்டிற்கு பிரத்யேக வளைதளம் ஒன்றை உருவாக்கி தனியார் முதலீடு கோரியிருக்கிறார் மன்னர் சுயஷ். அதுமட்டுமா? தனது நாட்டில் குடியுரிமை வேண்டுமெனில் விண்ணப்பம் செய்யவும் என்று அறிவுறுத்துகிறார் அரசர்!

சுயஷ் உண்மையிலுமே பீர் தவீலின் மன்னரா? இந்த இடத்தை முதன்முதலாக கண்டுபிடித்து அதற்கு உரிமை கோருகிறாரா?

இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எந்த மண்ணுக்கு தன்னை மன்னராக சுயஷ் சுயமாக சொல்லிக்கொள்கிறாரோ, அந்த இடத்திற்கு உலகில் இருக்கும் எந்தவொரு மனிதருமே உரிமை கோரமுடியாது.

வியப்பாக இருக்கிறதா? இதற்கு காரணம் என்ன? இதற்கான பதில் சரித்திரத்தில் மறைந்திருக்கிறது. சரித்திரத்தின் சில ஏடுகளை சற்றே புரட்டிப்பார்த்தால் இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதை தெரிந்துக் கொள்வது சுலபம்.2014இல் பீர் தவீலுக்கு உரிமை கோரிய அமெரிக்கர் ஜெரெமி ஹெடன்

பீர் தவீல் தனி நாடா?

2060 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் பரந்து விரிந்திருக்கும் பீர் தபில் எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமில்லாதது. எந்தவொரு நாடும் இந்த பகுதிக்கு உரிமை கோருவதில்லை.

நியூகாஸ்ல் பல்கலைக்கழகத்தின் சமூக புவியியல் துறை பேராசிரியர் முனைவர் எல்ஸ்டெய்ர் போனெட் "Unruly Places: Lost Spaces, Secret Cities, and Other Inscrutable Geographies" என்ற தனது புத்தகத்தில் பீர் தவீல் பற்றிய தனி அத்தியாயமே உண்டு.

பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு தகுந்த இடமாக இருந்தாலும், எந்த நாடும் உரிமை கோராத ஒரே இடம் இதுதான் என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

பீர் தவீலுக்கு அருகில் இருக்கும் மற்றொரு பெரிய நிலப்பகுதிக்கு உரிமை கோரும் எகிப்து மற்றும் சூடானும், அதன் நீட்சியாகவே இந்தப் பகுதியை புறக்கணிப்பதாக கூறுகிறார் போனெட்.

ஹலாயீப் என்ற முக்கோண வடிவிலான அந்த நிலப்பகுதி செங்கடலின் கரையோரம் 20,580 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வரலாறு மற்றும் உரிமைகோரப்படாத கதை

பிரிட்டன் ஆட்சியில் எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இரண்டு முறை எல்லைகள் வகுக்கப்பட்டன. 1899ஆம் ஆண்டில் முதல் முறையாகவும், 1902இல் இரண்டாவது முறையாகவும் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன.

1899இல் 1239 கிலோமீட்டர் நீள நேரான எல்லைக்கோடு இரு நாடுகளுக்கும் இடையே வகுக்கப்பட்டது, அதில் பீர் தவீல் மற்றும் ஹலாயீப் என்ற இரு நிலப்பரப்புகளும் தனித்தனி பகுதி என்று கூறப்பட்டதாக போனெட் குறிப்பிட்டுள்ளார்.

1899ஆம் ஆண்டின் எல்லை உடன்பாட்டை எகிப்து ஏற்க தயாரானதுடன், சூடானுக்கு பீர் தவீலை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. பொருளாதார ரீதியாக நன்மையளிக்கும் ஹலாயீப்பை தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள எகிப்து விரும்பியது.

1902இல் நிர்ணயிக்கப்பட்ட புதிய எல்லையோ, முன்பு உருவாக்கப்பட்ட எல்லைக்கு நேர்மாறானதாக இருந்தது. புதிய எல்லை பகுப்பின்படி, பீர் தவீல் எகிப்துக்கும், ஹலாயீப் சூடானுக்கும் வழங்கப்பட்டது.

இனம் மற்றும் புவியியல் அடிப்படையில் புதிய எல்லை வகுக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூறினார்கள்.

எகிப்து புதிய எல்லையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் புதிய எல்லையில்படி ஹலாயீவ்தான் தனக்கு வேண்டும் என்று கூறிய சூடான் பீர் தவீல் வேண்டாம் என்று கூறிவிட்டது.எகிப்து மற்றும் சூடான் எல்லை

பீர் தவீலை இருநாடுகளும் ஏன் கைவிடுகின்றன?

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூடான் ஹலாயீவில் கச்சா எண்ணெய் தேடும் முயற்சிகளுக்கு அனுமதி வழங்கியது. அதற்கு எகிப்து எதிர்ப்பு தெரிவித்தது. 1899இல் முடிவு செய்யப்பட்ட எல்லையை மேற்கோள்காட்டி, அந்த பகுதியை எகிப்து கைப்பற்றியது என்கிறார் எல்ஸ்டெய்ர் போனெட்.

ஹலாயீவை கைப்பற்றும் விதத்தில் சூடான் 2010இல் ஒரு புதிய வியூகத்தை உருவாக்கி, அந்த பகுதிக்குள் நுழைய முயற்சித்தது. சூடான் நாட்டு தேர்தலில் வாக்களிக்குமாறு ஹலாயீப் மக்களிடம் அந்நாடு கேட்டுக் கொண்டாலும், சூடானை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிக்குள் நுழைய உள்ளூர் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

1899இல் உருவான எல்லை நிர்ணயத்தின்படி ஹலாயீபுக்கு உரிமை கோரும் எகிப்து, அந்த எல்லை ஒப்பந்தத்தின்படி பீர் தவீலை உரிமை கோருவதில்லை.

பீர் தவீலுக்கு சூடான் உரிமை கோரினால், அது ஹலாயீப் மீதான எகிப்தின் உரிமை மற்றும் 1899ஆம் ஆண்டில் எல்லை நிர்ணய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக பொருள் கொள்ளப்படும்.

பீர் தவீல் பற்றி எகிப்து பேசினால் அநாட்டிற்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். எனவே பீர் தவீல் யாராலும் உரிமை கோரப்படாத நாடாக தனித்து நிற்கிறது.சுயஷ் தீக்ஷித்

பீர் தவீலில் மக்கள் வசிப்பதில்லையா?

பீர் தவீல் பாலைவனப் பிரதேசம். எங்கு பார்த்தாலும் மணலும், கற்களும் காணப்படும் வறட்சியான பகுதி. எல்ஸ்டெய்ர் போனெட்டின் கூற்றுப்படி, பல தசாப்தங்களுக்கு முன்னர் அங்கு விவசாயம் நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

யாராலும் உரிமைக் கோரப்படாத இந்த பகுதியில் நீண்ட காலமாக வறட்சி நிலவுவதால், விவசாய நடவடிக்கைகளுக்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லை.

பீர் தவீலில் யாரும் வசிப்பதில்லை என்று பல ஊடகங்கள் கூறினாலும், அவை முற்றிலும் உண்மையல்ல.

அபாப்தா மற்றும் பிஷாரீன் பழங்குடியினர்கள் தற்போதும் பீர் தவீல் பகுதியை பயன்படுத்துகின்றனர். எகிப்தை சேர்ந்த இவர்கள் பீர் தவீலில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருகின்றனர், மணற்பகுதியில் முகாம் அமைத்து தங்குகின்றனர்.

இதற்கு முன் உரிமை கோரியவர்கள் யார்?

பீர் தவீலுக்கு உரிமை கோரும் முதல் நபர் சுயஷ் இல்லை. இதற்கு முன்னரும் பல நபர்களும், அமைப்புகளும் இந்த இடத்திற்கு உரிமை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. உரிமைகோரல்கள் ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவே வெளிவந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் சர்வதேச அளவில் இந்த உரிமைகோரல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எகிப்தும் சூடானும் கூட இந்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவில்லை.

உரிமைகோரல்கள் பற்றி கருத்து தெரிவிப்பது, ஹலாயீப் மீதான தங்கள் உரிமைகோரலை பலவீனமாக்கும் என்று இரு நாடுகளும் கருதுகின்றன.
2010ஆம் ஆண்டில் 14 நபர்கள் கொண்ட குழு ஒன்று பீர் தவீலுக்கு உரிமை கோரியது. இந்த உரிமைகோரலும் ஆன்லைன் மூலமாக வெளியானது. குடியுரிமை பயன்பாட்டிற்காக புகைப்பட அடையாள அட்டையும் வெளியிடப்பட்டது.
2011இல் 'தி கார்டியன்' உடன் இணைந்திருக்கும் எழுத்தாளர் ஜேக் ஷைங்கர் பீர் தவீலில் தனது கொடியை ஏற்றி, அந்த பகுதி தனது என்று அறிவித்தார்.
2014இல் அமெரிக்காவின் ஜெரேமி ஹேடன் இந்த இடம் தனது என்று அறிவித்ததோடு, தனது ஏழு வயது மகளை பீர் தவீலின் இளவரசியாக அறிவித்தார். அங்கு தனது கொடியை பறக்கவிட்ட ஜெரேமி ஹேடன் பிபிசி வானொலிக்கு அளித்த ஒரு பேட்டியில், 'எனது மகள் இளவரசியாக விரும்புகிறார். அவருடைய கனவை நனவாக்க, இரண்டு நாடுகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்' என்று சொன்னார்.
யாராலும் உரிமை கோரப்படாத இந்த பகுதியை பல்வேறு காலகட்டங்களில் பலர் தங்களுடையது என்று உரிமை கோரியிருக்கின்றனர்.2010இல் வெளியிடப்பட்ட அடையாள அட்டை

சட்டம் என்ன சொல்கிறது?

பட்னாவின் சாணக்யா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்தை போதிக்கும் பேராசிரியர் சுகந்தா சின்ஹா சொல்கிறார், 'எந்த ஒரு நாட்டிற்கும் உரிமை கோருவதற்கு முன்பு அந்த பகுதியின் சரித்திரம் தொடர்பான சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்களை வழங்கவேண்டும்'.

அந்தப் பகுதியை பற்றி சரித்திரத்தில் சர்ச்சைகள் ஏதேனும் இருந்தால் அதைப்பற்றியும் குறிப்பிடவேண்டும். ஒரு பகுதியை நாடாக அறிவிக்கும்போது, அந்த நாட்டின் குடியுரிமை குறித்தும் கூறப்படவேண்டும்.

"ஒரு நாட்டின் குடிமகனாக தன்னை கூறும் நபர், நாட்டிற்கு உரிமை கோருபவரை தனது தலைவராக ஏற்றுக் கொள்கிறாரா இல்லையா என்பது பற்றியும் தெரிவிக்கவேண்டும். மக்கள் ஏற்கனவே அங்கு வசித்துவந்தால், அவர்களும் நாட்டுக்கு உரிமை கோருபவரின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டியது அவசியம். ஒரு தேசத்தை உருவாக்குவதும், அதன் அரசராக அறிவிப்பதும் வேடிக்கை விளையாட்டு இல்லை."

பீர் தவீலை உரிமை கோரி பலர் தங்களது கொடிகளை அங்கு பறக்கவிட்டாலும், அதை சர்வதேச அளவில் யாரும் பெரிதாக மதிப்பதில்லை. பீர் தவீல், எகிப்துக்கும் சூடனுக்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய நிலப்பகுதியாக இருக்கிறது.

எல்லை பிரிக்கும் பஞ்சாயத்தில், நாட்டாமை தீர்ப்பை மாற்றச் சொல்லி இருதரப்பும் முரண்டு பிடிப்பதால், வளமான பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று உரிமைகோரும் இரு நாடுகளும் வறட்சியான பீர் தவீலை கண்டுகொள்ள விரும்பவில்லை.

பீர் தவீலின் அரசன் என்று சுயஷ் தீக்ஷித் கூறுவதால் யாரும் அவருடன் யுத்தம் செய்ய போவதில்லை. சமூக ஊடகங்களில் வேறு சர்ச்சைகள் வரும்வரை, சுயஷ் தீக்ஷித் விவாதப்பொருளாக இருப்பார்.

No comments

Powered by Blogger.