எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியில் இயங்கிய மறைகரம்!

இலங்கையில் இம்மாதத்தின் முதல் பகுதியில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடி தோற்றம் பெற்ற விதம், அந்நெருக்கடி நிலவிய போது ஒன்றிணைந்த எதிரணியினர் நடந்து கொண்ட விதம் என்பன இந்நெருக்கடி தொடர்பில் பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருந்தன.
இந்த நெருக்கடியால் நாட்டு மக்கள் பலத்த அசௌகரியங்களுக்கும் உள்ளான நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்நெருக்கடி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்தார்.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, அநுர பிரியதர்ஷன யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அமைச்சர்களை உள்ளடக்கி அமைக்கப்பட்ட இந்த அமைச்சரவை உப குழு, இந்நெருக்கடி தொடர்பில் விரிவாக ஆராய்ந்து தயாரித்த அறிக்கையை நேற்றுமுன்தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், இந்த எரிபொருள் நெருக்கடி ஏற்பட அதிகாரிகளின் அசமந்தப் போக்குதான் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது, 'எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிலைமையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் முன்கூட்டியே அறிந்திருந்துள்ளனர். அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதியளவில் இது தொடர்பில் அவர்கள் அறிந்திருக்கின்றனர். இருந்தும் அவர்கள் பெற்றோலிய உயர் முகாமைத்துவத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கவும் இல்லை. போதுமான அளவு பெற்றோலைக் கையிருப்பில் வைத்திருக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவுமில்லை என்று ஜனாதிபதி நியமித்த அமைச்சரவை உபகுழு உறுப்பினரான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டிருக்கின்றார்.

என்றாலும் இது இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட செயலா? என்பது குறித்து ஆராயவென பக்கச்சார்ப்பற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எரிபொருள் தட்டுப்பாட்டு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணை அவசியம் என்று அமைச்சரவையில் வலியுறுத்தி இருக்கின்றார்.

எரிபொருள் நெருக்கடி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு உறுப்பினரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்த, பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணையைக் கோரி இருக்கின்றார்.

இதன்படி, இந்த எரிபொருள் தட்டுப்பாட்டு விவகாரம் தொடர்பில் ஆரம்பத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை இக்கோரிக்கைகள் மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

இவ்விவகாரத்தில் மறைகரம் செயற்பட்டிருப்பதற்கான பலமான சந்தேகம் பல மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இந்நாட்டுக்குத் தேவையான எரிபொருளை விலை மனுக்கோரி நாட்டுக்குள் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சுமார் 21 நாட்கள் செல்லும். இதனைக் கருத்தில் கொண்டு இந்நாட்டுக்கு தேவைப்படும் எரிபொருளை குறிக்கப்பட்ட காலத்திற்கு நாட்டில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு தேவையான களஞ்சிய வசதிகளும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதாவது நாளாந்தம் 2,000 மெற்றிக் தொன் பெற்றோல் தேவைப்படுமிடத்து 120,000 மெற்றிக் தொன் பெற்றோலைக் களஞ்சியப்படுத்தி வைத்துக் கொள்ளக் கூடிய வசதி தற்போது நாட்டில் காணப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வரும் போது 60,000 மெற்றிக் தொன் பெற்றோலைக் களஞ்சியப்படுத்தி வைக்கக் கூடிய வசதிதான் நாட்டில் காணப்பட்டது. அதனை நல்லாட்சி அரசாங்கம் முதல் நூறு நாட்களுக்குள் 90,000 மெற்றிக் தொன் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தக் கூடிய வகையில் விஸ்தரித்தது. அது தற்போது 120,000 மெற்றிக் தொன் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தக் கூடிய வசதியைக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மேலதிகமாக, லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 15,000 மெற்றிக் தொன் வரையான எரிபொருளைக் களஞ்சியப்படுத்தக் கூடிய வசதியையும் கொண்டுள்ளது.

இவ்வாறான எரிபொருள் களஞ்சியசாலை வசதிகள் நாட்டில் காணப்படுவதால் இந்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பது மிகத் தெளிவானது.

ஆகவே இம்மாதத்தின் முதல் சில நாட்கள் தோற்றுவிக்கப்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிக்கு மறைகரம் முக்கிய பங்காற்றி இருப்பது நன்கு தெளிவாகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாதக நிலைமை​யை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதியே அறிந்து கொண்ட அதிகாரிகள் அதனை உயர் முகாமைத்துவத்திற்கு அறிவித்து இருந்திருந்தால் இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

அவர்கள் இதனை ஏன் அறிவிக்கத் தவறினர்? இதனூடாக எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் யாவை? இவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம் இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தவிர்க்கவும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் எரிபொருளும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறி விட்டது. அதனால் நாட்டு மக்களின் அன்றாட இயல்பு வாழ்வு சீர்குலைக்கப்பட எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படக் கூடாது.

No comments

Powered by Blogger.