சிம்பாப்வேயில் இராணுவப் புரட்சி ?

சிம்பாப்வே நாட்டு இராணுவத்தினர், அரச தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சி.யின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், குறித்த தொலைக்காட்சியில் தோன்றி ''குற்றவாளிகளை குறிவைத்து" தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர்.


இதேவேளை, இது, அரசைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையல்ல எனத் தெரிவித்துள்ள, இராணுவத்தினர், ஜனாதிபதி ரொபர்ட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் சிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேயில் இடம்பெற்றுள்ளது. 

ஹராரேயின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் 93 வயதான சிம்பாப்வேயின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயிடம் இருந்து இதுவரை எந்த செய்திகளும் வெளிவரவில்லை.


இந்நிலையில், இராணுவப் புரட்சி எனக் கூறப்படுவதை மறுக்கும் தென்னாபிரிக்காவிலுள்ள சிம்பாப்வே தூதர் ஐசக் மோயோ, அரசு 'நிலையாக' உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்தபிறகு, சிம்பாப்வேயின் ஆளுங்கட்சி இராணுவத் தளபதி மீது 'துரோக' குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பின்னரே அங்கு நிலைமை மோசமானது.


நாட்டின் உப ஜனாதிபதியை ரொபர்ட் முகாபே நீக்கியபின்னர் இராணுவத் தளபதி சிவென்கா, ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.


ஜனாதிபதி ரொபர்ட் முகாபேவின் 'ஜானு பிஃப்' கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த இராணுவம் செயல்பட தயாராக உள்ளது என சிவென்கா தெரிவித்திருந்தார்.


நேற்று செவ்வாய்க்கிழமையன்று ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஹராரேவின் புறநகர் வீதிகளில் நிலைகொண்டதால், பதற்றங்கள் மேலும் அதிகரித்தது.

ஊழியர்கள் '' கவலைப்பட வேண்டாம்'' என்றும், அலுவலகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

இதேவேளை, பதவி நீக்கப்பட்டுள்ள துணை அதிபர் மனன்காக்வே, நாட்டின் அடுத்த அதிபராவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனாதிபி ரொபர்ட் முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேதான், அடுத்த ஜனாதிபதிக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார் எனது செய்திகள் தெரிவிக்கின்றன.


மனன்காக்வே மற்றும் கிரேஸ் முகாபே இடையிலான சண்டை ஜானு பிஃப் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளன.

மனன்காக்வேவிற்கு ஆதரவளிக்காதவர்களுக்கு அவரின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கடந்த மாதம் கூறிய கிரேஸ் முகாபே, இராணுவ புரட்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.