சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என அரசாங்க மருத்துவ பீட மாணவர் செயற்குழுவின் அமைப்பாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வது தொடர்பில் இன்னும் சில பிரச்சினைகள் நீடித்து வருகின்றது.

பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு வழங்கப்படும் வரையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்படாது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி ரத்து செய்யப்படும் என எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கப்பட்ட போதிலும், கல்லூரியில் கல்வி கற்ற மாணவ மாணவியருக்கு நீதி வழங்கும் நோக்கில் உருவாக்கப்படும் நிறுவனம் இந்த மாணவர்களுக்கு மட்டுமானது என இதுவரையில் எழுத்து மூலம் உறுதி அளிக்கப்படவில்லை.

இந்த நிறுவனத்தை தனியார் மருத்துவ கல்லூரியாக முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இந்த நிறுவனம் குறித்த மாணவ மாணவியருக்கு மட்டுமானது என்பதனை எழுத்து மூலம் உறுதி செய்து கொடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்யுமாறு கோரி மருத்துவ பீட மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.