மூத்த பத்திரிகையாளரும்,இலங்கை தமிழ் பத்திரிகை விருட்சமுமான எஸ்.எம்.ஜீ.கோபாலரெத்தினம் மட்டக்களப்பில் இயற்கை எய்தினார்

( க.விஜயரெத்தினம்)
 
இலங்கைத் தமிழ் பத்திரிகைத்துறையின் விருட்சம் எஸ்.எம். கோபாலரத்தினம் இயற்கை எய்தினார்.

எஸ்.எம். ஜீ என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சம் என புகழப்படும் எஸ்.எம். கோபாலரத்தினம், இன்றைய தினம் புதன்கிழமை காலை (15.11.2117) மட்டக்களப்பில் இயற்கை என்பத்தேழு(87 வயது)வயதில் எய்தினார்.

இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை(17.11.2017) மட்டக்களப்பு பூம்புகார் 4 ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் நடைபெற்று அதன் பின்பு மாலை 5.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

1930.10.03 ல் யாழ்ப்பாணம் கன்னாதிட்டியில் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பக்கல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிசன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார். சுவாமி நடராஜானந்தா யாழ்ப்பாணம் வந்த சமயங்களில் தொண்டு செய்யும் பாக்கியமும் பெற்றார்.

இலங்கையின் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர் சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

2002, 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.

அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு பத்திரிகைத்துறையில் பல வாரிசுகளை உருவாக்கித்தந்தவர்.

கோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப்பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.

கோபு பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால் ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.

அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ. ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை, அந்த ஒரு உயிர்தானா உயிர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு, ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

No comments

Powered by Blogger.