புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில்!!


கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் காமிக்ஸ் புத்தகத் தொடராக வெளியிட ஆரம்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த நிலா காமிக்ஸ் என்ற நிறுவனம், வெளியிடத் துவங்கியிருக்கும் இந்த காமிக்ஸ் வரிசையில் முதல் நூல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலில், முதல் பாகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களான ஆடித் திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி ஆகியவை இந்த முதல் காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன

அடுத்தடுத்த அத்தியாங்களை, சீரிய இடைவெளிகளில் தொடர்ந்து வெளியிடவிருப்பதாக நிலா காமிக்ஸின் நிறுவனரான சரவணராஜா பிபிசியிடம் தெரிவித்தார்.

"எங்கள் நிறுவனத்தின் மூலம் பொன்னியின் செல்வனை அனிமேஷன் (அசைவூட்ட) படமாக எடுக்க நினைத்தோம். அந்தப் பணி நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் அந்தப் படங்களை வைத்தே, காமிக்ஸாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. அப்படித்தான் உருவாகியது இந்த காமிக்ஸ் வரிசை" என்கிறார் சரவணராஜா.

பொன்னியின் செல்வன் அனிமேஷன் பட உருவாக்கத்திலும் சரி, காமிக்ஸ் உருவாக்கத்திலும் சரி பெரும் சவால்கள் இருந்தன. முதல் சவால், பொன்னியின் செல்வன் நூலின் நீளம். ஐந்து பாகங்களும் சுமார் 2400 பக்கங்களும் கொண்ட மிகப் பெரிய நாவல் அது.

இந்தக் கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு ஏற்றபடி சுருக்கி, அதனை ஃப்ரேம்களாகப் பிரிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்ததாக இந்தத் திட்டத்தின் படைப்பு உருவாக்கத் தலைமையாக இருந்த மு. கார்த்திகேயன் தெரிவித்தார்.

"அது தவிர, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற உடலமைப்பையும் முகபாவத்தையும் முடிவுசெய்வதும் கடினமாக இருந்தது. பொன்னியின் செல்வன் ஏற்கனவே இதழ்களில் படங்களுடன் வெளிவந்த கதை என்பதால், மக்களின் மனதில் ஏற்கனவே உள்ள பிம்பங்களை மாற்றாமல் ஆனால், அதே நேரத்தில் ஏற்கனவே உள்ளது போன்ற உருவங்களை வரையாமல் இந்த முகபாவங்களையும் உடலமைப்பையும் தேர்வுசெய்ய வேண்டியிருந்தது" என்கிறார் கார்த்திகேயன்.

இந்த காமிஸிற்கென புதிதாக ஒரு எழுத்து வடிவத்தையும் நிலா காமிக்ஸ் வடிவமைத்துள்ளது.

"இந்த காமிக்ஸ் மூலம் குழந்தைகளை பொன்னியின் செல்வம் பக்கம் ஈர்க்க வேண்டும். ஏற்கனவே படித்தவர்களையும் இந்த காமிஸை ரசிக்க வைக்க வேண்டும். அதை சரியாகவே செய்திருக்கிறோம்" என்கிறார் சரவணராஜா.

ஏற்கனவே பொன்னியின் செல்வனின் சில பாகங்களை தஞ்சாவூரைச் சேர்ந்த ஓவியரான தங்கம் காமிக்ஸாக வரைந்து வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்த முயற்சி தொடரவில்லை.

எழுத்தாளர் கல்கி எழுதிய இந்த நாவல், கல்கி இதழில் 29.10.1950ல் இருந்து வெளியாக ஆரம்பித்தது. தொடர்ந்து மூன்றரை ஆண்டுகள் இந்தத் தொடர் அந்த இதழில் வெளியானது. இதற்குப் பிறகு பல முறை கல்கி இதழில் இந்தத் தொடர் மறுபதிப்புச் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாவல் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன், நடிகராக இருந்த காலகட்டத்தில் இந்த நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அது நடக்கவில்லை.

No comments

Powered by Blogger.